Thursday, June 23, 2011

பூமிக்குள் இல்லை புதையல்


பூமிக்குள் இல்லை புதையல்

மண்ணில் உள்ளது புதைய லென்றே
மனசு மயங்குதடா - அட
எண்ணிப் பார்நீ ! உனக்குள் ளேதான்
உள்ளது புதையலடா !

மண்ணைத் தோண்டி என்ன காண்பாய்
வைரம் பொன்தானே- உன்
எண்ணத் துள்ளே தோண்டிப் பார்நீ
எத்தனை புதையலடா ?

துணிவைத் தோண்டிக் கையில் எடுநீ !
சிகரம் வணங்குமடா உள்ளக்
கனிவைத் தோண்டிக் காட்டடா - வன்மைக்
கல்லும் கரையுமடா !

அன்பைத் தோண்டிக் குவியடா! - அந்த
ஆண்டவன் வசப்படுவான் - உன்னை
இன்பில் ஆழ்த்தி அவனும் மகிழ்வான்
சத்திய வார்த்தையடா

பொறுமையை எடுத்தே அணிந்துகொள்! - இந்தப்
பூமியுன் கையாகும் - தோன்றும்
வெறுப்பினைச் சலிப்பை எறி ! உன் வீட்டில்
வெற்றி தவங்கிடக்கும்

தளரா முயற்சியைத் தோண்டி எடுவுனைத்
தழுவிடும் வெற்றியடா! - உன்றன்
உளத்தில் துடிப்பை இணைத்திடு! பூமியே
உன்னிடம் தஞ்சமடா!

இடுக்கணைக் கண்டு சிரிக்கிற ஆற்றல்
உள்ளது புதையலென - அதை
எடுத்துநீ அணியடா! அந்த இடுக்கணே
உனைக்கண் டஞ்சுமடா!

எல்லாம் உன்னுளே புதைந்து கிடக்கையில்
எதைநீ தோண்டுகிறாய்? - உலகை
வெல்லும் புதையல் மண்ணுளே இல்லை
உன்னுளே உள்ளதடா!





எழுத்தெதற்கு ?


எழுத்தெதற்கு ?

பார்வையில் கூர்மை மிகவேண்டும் - கண்ணிற்
பளிச்சென உண்மை படவேண்டும்.
சீர்மையைப் போற்றும் திறம்வேண்டும் - நிலவும்
தீமைகள் சாடும் உரம்வேண்டும்.

அல்லவை செய்வோர் தமைக்கண்டால் - பாட்டால்
அடிக்கும் துணிவு வரவேண்டும்
நல்லவை செய்வோர் பாதமலர் - போற்றி
நாளும் வணங்கும் உளம்வேண்டும்.

அதிகா ரத்தின் வால்பிடித்தே - வாயால்
அனுதினம் புகழா மனம் வேண்டும்.
எதுதான் வந்து மோதிடினும் - எழுத்தில்
இழுக்குச் சேரா நெறிவேண்டும்

அடிதடிக் கும்பல் அதட்டலுக்கே - சற்றும்
அஞ்சாத் துணிவு மிக வேண்டும்
இடித்துப் பொடியா யாக்கிடினும் - நத்தம்
எழுத்து எழுந்து வர வேண்டும்

பள்ளமே கிடப்போர் மேடுவர - எழுதிப்
பாதிப் புக்கள் தரவேண்டும்.
உள்ளமே நொந்து கிடப்போரை - மயில்
இற்காய்த் தடவும் திற்ம் வேண்டும்.

நல்லவை இவைகள் இல்லையெனில் - இந்த
நாட்டில் எழுத்தே எதற்காக?
அல்லவை ஒழிக்க வில்லையெனில் - எழுத்தே
அரும்புவ தெல்லாம் எதற்காக?

அதுவே சோலை



அதுவே சோலை

புயலைச் சிறுசிமி ழில்அடைத்தே - காலைப்
பணியை அதிற்குழைத்துப் போட்டே
அயலே இருப்பவர்க் கே அளித்தேன் - அவர்
ஆகா இது இனி மை என்றார்.

வேம்பின் காயரைத்துப் போட்டே - அதில்
மெல்லிசைச் சொல்லடுக் கிச்சேர்த்தே
வீம்பிலாச் சுவைஞரி டம்தந்தேன் - அவர்
மிதக்கிறோம் தேனாற் றில்என்றார்.

தென்றலைச் சிறைப்பிடித் தேவந்து - கீற்றுத்
தென்னைச் சலசலப் பைச்சேர்த்து
முன்றிலில் உலவிவ ரச்செய்தேன் - ஆகா
மூளு மிதுகவி தைஎன்றார்.

தீயின் நாக்குளி ரச்செய்தே - அதில்
சிறகுடன் கற்பனை கள்போட்டேன்
தீயின் சுடர்நடு வேசுவைகள் - கண்டே
சிறந்த கவிதை இதோஎன்றார்.

இரவின் விண்மீன் கள்பறித்தே - அவற்றுக்
கெழிலுற வேசந் தம்சேர்த்துக்
குறைவிலாத் தோரண மாய்ச் செய்தேன் - அதைக்
கவிதை வானமென் றேசோன்னார்.
  
தீமைச் சிறகுக ளைக்கொய்தே - அவற்றைத்
தூய கவிநெருப் பில்போட்டேன்
தீமையெதும் எரிந்திட வேயில்லை - என்னைத்
தின்றிட முயல்வதைன் நான் பார்த்தேன்.

ஊழற் புற்றுநோய்ப் பூதமேயிந் - நாட்டின்
ஊனத் திங்கா ரணமென்றேன்
ஆழக் கிழங்கைய கழ்ந்தெடுக்க - இங்கே
ஆரும் முனைந்திட வேகாணோம்

என்னைத் தான்பல ரும்முறைத்தார் - கவிஞன்
இவனுக் கேனிக் கொழுப்பென்றார்
வண்ணக் கவியுனக் குப்போதும் - தீமை
வகையுணர் பார்வைவேண் டாமென்றார்.

என்னதான் இப்பொழு துநான் செய்ய? - கால
இருப்பினைக் காட்டுத லேதப்பா?
கண்ணா  டிதானிங் கேகவிதை - என்னும்
கருத்தெலாம் ஒதுக்கிவிட் டாபாட?

அப்படி ஒருகவி யேவேண்டாம்! - செல்வ
அணிவகுப் பும்விரு துமே வேண்டாம்
இப்படி யேபா டித்திரிவேன் - கிடைப்ப
திடுகா டேயெனி னுமதுசோலை.


எத்தனை முகங்கள்


எத்தனை முகங்கள்

ஒருவனுக் கெத்தனை முகங்களடா! - அவன்
உரைகளில் எத்தனை பொய்மையடா
தெரிவது வெளியே ஒருமுகந்தான் - நமக்குத்
தெரிந்திடா திருப்பவை பலமுகமாம்

நண்பனை ஒருமுகம் அழைக்கிறது - நல்ல
நாடக   மங்கே   நடக்கிறது
நண்பனும் பலமுக நடிகன்தான் - அவனை
நறுக்கென அணைக்கிறான் பெருநடிகன்

உள்முக உணர்வுகள் வேறுவகை - அங்கே
உரையென வீழ்பவை வேறுவகை
தெள்ளத் தெளிந்த சூழ்ச்சிவகை - அங்கே
தீட்டுவ தெத்தனை கோலவகை

அரசியல் களத்தில் நரிமுகந்தான் - துள்ளி
ஆடுவே தெத்தனை கள்ள முகம்
உரசிடும் போது புலிமுகமாம் -கட்டி
உறவுறும் போது வேறுமுகம்

தார மணைப்ப தொருமுகமாம் - பெற்ற
தாயிடம் உரைகள் வேறுமுகம்
தூரத்  துறவிடம் வேறுமுகம் - தன்
சொந்த உறவிடம் வேறுமுகம்

உள்ளதை மறைப்ப தொருமுகமாம் - அவர்
உரையிலே சிரிப்பதோ வேறுமுகம்
கள்ளமே உள்ளே பொங்கிநிற்கும் - அதைக்
காட்டிடா தொளித்திடும் வேறுமுகம்

பலமுக இராவணன் உருவகந்தான் - உணர்வுப்
பரிமா ணங்களின் படப்பிடிப்பு
பலவகை யகாப் பாய்ந்தோடும் - எண்ணப்
பாய்ச்சலைக் காட்டும் கண்ணாடி

உள்முகப் பயனம் போனால்தான் - நம்முள்
உள்ள பலவகை முகந்தெரியும்
தெள்ளிய அறிவுடன் பார்த்தால் தான் - நம்
சிந்தையின் கோணல் புரியவரும்

ஒப்பனை இல்லாப் பேச்சுவகை - எங்கே
உள்வெனத் தேடுதல் வீண்வேலை
தப்பணர் வரும்பாத் தெளிந்தமுகம் - கண்ணில்
தோன்றிடின் அதுவே தெய்வமுகம்

என்முகம் எப்பொழு தொருமுகமாம் - என்றன்
இதயம் என்று தெளிவுறுமாம்
என்முகம் என்றும் என்முகமாய் - இங்கே
இலங்கிடு மாஅது தெரியவில்லை.

******** கல்கி தீபாவளி மலர்*******


கவிமாமணி, பொற்கிழிக்கவிஞர், முனைவர், ச.சவகர்லால்


ற்செய்தி

கவிமாமணி, பொற்கிழிக் கவிஞர்டாக்டர் ச.சவகர்லால்

01. பெற்றோர்   :      சண்முகம் பிள்ளைஇராக்காயி அம்மாள்
02. துணைவியார் :      பழனியம்மாள்

03. ஊர்            :      சேதுரெகுநாத பட்டணம்
                           சிவகங்கை மாவட்டம்
04. பிறந்த நாள்  :      16.11.1936

05. கல்வித் தகுதி :      எம்..,பி.டி.,பி.எச்.டி

06. பி.எச்.டி ஆய்வுப் பொருள் :  தேவாரத்தில் தொன்க்கூறுகள்

07. பயின்ற நிறுவனம் :      அழகப்பா கல்லூரி, காரைக்குடி

08. ஆற்றிய பணி :  
1.தமிழ்ப் பேராசிரியர்,.பி.சீ..கல்லூரிதிருப்புத்தூர்,சிவகங்கை 
  மாவட்டம்,30 ஆண்டுகள்.              
      2. கல்லூரி முதல்வர்,திருவள்ளுவர் கல்லூரி,பாபநாசம், நெல்லை 
        மாவட்டம்.1 - ஆண்டு (1985 - 1986)

09. முதற்கவிதை அச்சேறியது  :     திராவிடநாடு - முகப்புக் 
                                         கவிதை (1958)


10. படைப்புகள்         :     
 1.     எண்ணச் சிறகுகள் - 1983,(கவிதைத் தொகுப்பு)
       2.     சவகர்லால் கவிதைகள் -2001,(கவிதைத் தொகுப்பு),
              தமிழக அரசின் பரிசு பெற்றது.
       3.     குறுந்தொகைச் சித்திரம்2001 (உரைநடை
       4.     பாடுவதெல்லாம் - 2005, (கவிதைகள்) ( கவிதை உறவு,   
              எழுத்தாளர் நலநிதி அறக்கட்டளைப் பரிசுகள்)
       5.     கம்பன் பொழில் - 2005, (கவிதைகள்)
       6.     ஞானக்கிறுக்கன் - 2006, (கவிதைகள்)
       7.     தோகை வண்ணம் - 2008, (கவிதை நாடகம்)
       8.     தமிழ்நாடு மற்றும் மலேசிய நாடுகளில் நாள், கிழமை,  
             திங்கள் இதழ்களில் கவிதைகள்கட்டுரைகள் வெளியீடு.
       9.     தமிழ்நாடு அரசு வெளியிட்ட பாரதியார் நூற்றாண்டு மலர்  
              உள்ளிட்ட சிறப்பு மலர்களில் ஏராளமான கவிதைகள்.



12. பரிசுகள், விருதுகள் :
      1.   1968 -ல் மதுரைத் தமிழ் எழுத்தாளர் சங்கம் நடத்திய  
           மாநில அளவுக் கவிதைப் போட்டியில் முதற்பரிசு
      2.   1970 -ல் திருப்பத்தூர்த் தமிழ் சங்கம் நடத்திய மாநிலந் 
          தழுவிய பொற்கிழிக் கவிதைப் போட்டியில் முதற்பரிசு, 
          பொற்கிழிக் கவிஞர் என்ற பட்டமும் தவத்திரு குன்றக்குடி 
          அடிகளாரால் வழங்கப் பெற்றமை
      3.   கல்லூரி நாட்களில் பல பரிசுகள்
      4.   கவிமாமணி விருது, பாரதி கலைக் கழகம், சென்னை,2001
      5.   கலைமகள் மரபுக் கவிதைப் போட்டி 3 - வது பரிசு,2001
      6.   கவிமணி மன்றம் கவிதைப் போட்டி முதற் பரிசு, 2000-ம் 
          ஆண்டு 
      7.   சிறந்த மரபுக் கவிதை நூலுக்கான முதற்பரிசு-தமிழக 
           அரசு- ரூ.10,000, 2001-ம் ஆண்டு
      8.   பாரதி புரஸ்கார் விருது, 2002, பாரதி யுவகேந்திரா
          மதுரை.
      9.   கி.வா.. நூற்றாண்டு விழாமரபுக்கவிதைப் போட்டி,
          முதற் பரிசு ரூ. 5,000, ஆண்டு 2006.
     10.   கவிதை உறவு மற்றும் எழுத்தாளர் நலநிதி 
          அறக்கட்டளைகளின் கவிதை நூற்பரிசுகள் 2005
     11.   இலக்கிய பீடம் மாத இதழ் மற்றும் திரிசக்தி குழுமம் 
           இணைந்து வழங்கிய "இலக்கிய பாரதி" பட்டமும், பரிசு 
           ரூ. 5000,ஆண்டு - 2010

13.    நிகழ்ச்சிகள் :      
     # அனைத்திந்திய வானொலிதிருச்சி, சென்னை, மதுரை, நெல்லை
       தூத்துக்குடி நிலையங்கலில் ஏராளமான கவிதை
       உரைப்பொழிவு, நூல் ஆய்வுரை நிகழ்ச்சிகள். 

     # சென்னைத் தொலைக்காட்சி நிலையப் பொங்கல், தீபவளி
       சுதந்திர நாள்புத்தாண்டுச் சிறப்புக் கவியரங்கங்கள்.

     # சன் தொலைக்காட்சி

     # 600 - க்கு குறையாத கவியரங்கங்கள்பட்டிமன்றங்கள் தலைமை 
       உட்பட.
தொடர்பு முகவரி :      கவிமாமணி, பொற்கிழிக்கவிஞர்,
                           டாக்டர், .சவகர்லால்.
                           2H/368, கதிர்வேல் நகர் 3-வது தெரு
                           தூத்துக்குடி-628008
அலைபேசி         :      +91-9790846119 , +91-9381802206