Saturday, September 22, 2012

Re; சவகர்லால் கவிதைகள்

                                         நானும் கவிதையும்

   பாடுபொருள் முடிவானவுடன், எந்த வடிவத்தில் இதைச் சிறப்பாகச்
செய்யலாம் எனச் சிந்தித்து வடிவத்தை முடிவு செய்வேன்.
   பாடுபொருளும், வடிவமும் முடிவானதும் ஓர் உணர்வு நிலைக்குச்
சென்று விடுவேன்.சொல்லாட்சி நடமிடத் துவங்கும்.
   பாடுபொருள், வடிவம், உணர்வுநிலை - இம் மூன்றும் சொல்லாட்சி
யைத் தேர்வு செய்கின்றன.
   கவிதை உருவானதும் மறுபடி, மறுபடி படித்துப் பார்ப்பேன்.
பெரும்பாலும் மாற்ற வேண்டிய சொற்கள் இரா. அப்படி இருப்பின்
மாற்றி அமைத்து விடுவேன்.
   சொல்லாட்சிக்கு முதலிடம் கொடுப்பேன்." எந்தப் பொருளை, எந்தச்
சொல்லால், எப்படிச் சொல்ல வேண்டுமோ, அந்தப் பொருளை, அந்தச்
சொல்லால், அப்படிச் சொல்லப் பெரு முயற்சி செய்வது கூட உண்டு.
   கவிதை நிறைவு பெற்றதும், படிப்போர் சுட்டும் குறைகளைக் கேட்டுக்
கொள்வேன்.சொல்மாற்றம் சொன்னால் நான் மாற்றுவதில்லை.
   காரணம்,
கவிஞன் ஏதோவோர் உணர்வுநிலைக்குச் சென்று, கவிதை உருவாக்கும்
போது சொல்லாட்சி நடக்கிறது. அந்த உணர்வுநிலையில் அவன் தேர்ந்
தெடுத்த சொல் அங்கே இடம் பெறுகிறது, பின்னொருநாள் கவிஞனே
அந்த உணர்வுநிலைக்கு மீளச் செல்ல முடியாது என்பதே உண்மை.
பின் ஏன் சொல்லாட்சியை மாற்ற வேண்டும்?
   என் ஒரு கவிதையை என் நண்பர் பார்த்துத் திருத்தம் சொல்கிறார் என
வைத்துக் கொள்வோம்; நானும் அவர் சொல்வதை ஏற்று இரண்டு
இடங்களில் சொற்களை மாற்றிவிட்டால் அதன்பின் அந்தக் கவிதை
முழுமையாக என்னுடையதாக எப்படி இருக்க முடியும்?
   இரண்டு இடங்களில் அவர்தம் சொல்லாட்சி அல்லவா சிரித்துக்
கொண்டிருக்கும்!
   இன்னொன்று;
நண்பர் இப்படி இருந்தால் நன்றாக இருக்குமல்லவா? என்று குறிப்பிட்டுப்
பரிந்துரைக்கும் சொற்கள், கவிதை உருவாகும் போது எனக்கும் தெரிந்த
சொற்கள்தாமே; பின் ஏன் அவை தவிர்க்கப் பட்டன? அதை முடிவு செய்தது
அந்த உணர்வுநிலைதான்
   எனவே, கவிதை, நிறை, குறைகளோடு அப்படியே இருக்க வேண்டும்.
ஆய்வாளன் அதைச் சுட்ட வேண்டும். அவன் சுட்டுவான்.
   சுவைஞன் கதையே வேறு. இருவரும் ஒருவராக இருத்தல் அரிது.
இருக்கிறார்கள்.
   இவை எல்லாமே வளர்ந்து, முதிர்ந்து, புகழ்பெற்ற கவிஞர்கட்கு
மட்டுமே.
               ------         ----            ----
   உங்கள் இசைவுடன் யாப்பிலக்கணம் பற்றிக் கொஞ்சம் பகிர்ந்து கொள்ளலாம்
எனக் கருதுகிறேன். யாரும் தவறாகக் கொள்ளற்க.
   அடிப்படை அலகுகள் நேர், நிரை, என இரண்டு.
   தனிக்குறில்,தனிக்குறில் ஒற்றடுத்து, தனிநெடில், தனிநெடில் ஒற்றடுத்து
வருவது நேரசை யாகும்.
   குறிலிணை, குறிலிணை ஒற்றடுத்து, குறில்நெடில், குறில்நெடில் ஒற்றடுத்து
வருவது நிரையசையாகும்.
   இவை ஈரசைச் சீர்களை உருவாக்கும் போது, நேர்நேர்--தேமா, நிரைநேர்--புளிமா,
நிரைநிரை--கருவிளம், நேர்நிரை--கூவிளம் என வரும்.
   மூவசைச் சீர்கள் உருவாகும் போது, இவைகளுடன் நேர் சேர்ந்தால், தேமாங்காய்,
புளிமாங்காய், கருவிளங்காய், கூவிளங்காய் என வரும்.
   நிரை சேர்ந்தால் கனிச்சீராகும்.
   இவ்வளவுதான் நம் அடிப்படை இலக்கணம்.விளாங்காய்ச் சீரென ஒன்றில்லை.
ஆனால் அப்படி ஒன்றை உருவாக்கலாம் என கி.வா.ஜ. குறித்திருக்கலாம்.
   ' நமசிவாய வாழ்க' என்பதில் முதற்சீரைக் கருவிளங்காய் எனக் கொள்ளலே
நலம்.கருவிளாங்காய் என்பது தேவையில்லை.(இது என் கருத்து)
   நம் இலக்கணம் மிகவும் நெகிழ்ச்சியுடையது. அதையும் மீறியே புதுக்கவிதைகள்
தோன்றின.
   புறம். கலி. இவைகளைப் பார்த்தால் மரபின் நெகிழ்ச்சி தெரியவரும்.
   ' இலக்கியங் கண்டதற் கிலக்கணம் இயம்பலின்' என்பதே உண்மை.
   புதிய வடிவங்கள் உலாவந்து, நிலைபெற்று விடின்,அங்கே புதிய இலக்கணம்
தோன்ற வேண்டும்.தமிழ் இலக்கணம் அப்படித்தான் வளர்ந்துள்ளது.
அதனாலேயே தமிழ்மொழி என்றும் நிலைத்து வாழ்கிறது.



Wednesday, September 19, 2012

Re; சவகர்லால் கவிதைகள்

                              சுவைஞன்

எல்லோரும் கவிஞனென மிளிர்வ தில்லை;
   இணையில்லா ஒருகவிஞன் சிந்து கின்ற
எல்லாமே உயர்கவிதை ஆவ தில்லை;
   ஏட்டினிலே படைத்துவரும் கவிப டிக்கும்
எல்லோரும் நற்சுவைஞர் ஆவ தில்லை;
   இனியஉளம்; நற்பார்வை; அறிவுக் கூர்மை;
எல்லாமே இணைந்திட்ட சுவைஞர் கையில்
   இன்கவிதை கிடைத்திட்டால் அதுவே சொர்க்கம்.

கவிஞனவன் நினைக்காத சுவைக ளெல்லாம்
   கற்கின்ற சுவைஞனிவன் காட்டி நிற்பான்;
கவிஞனவன் படைத்திட்ட சொற்க ளேறிக்
   ககனத்தில் உலாவருவான்; ஆகா வென்றே
புவிநடுங்கக் கூச்சலிட்டே கூட்டஞ் சேர்ப்பான்;
   பார்த்துவந்த சுவையமுதைப் பலர்க்கும் ஈவான்;
கவியுள்ளங் கண்டுணர்ந்தே மகிழு மந்தக்
   கவிச்சுவைஞன் கவிஞர்க்குக் கிடைக்காப் பேறு.

ஒருகவிதை படிக்குங்கால் அதிலே எங்கோ
   ஓரிடத்தில், ஒருசொல்லில், சுவைகள் விஞ்சிப்
பெருகுவதை அவனுணர்வான்; கவிதைக் குள்ளே
   பிழைகாணும் கண்வீச்சை வீச மாட்டான்;
வரிசையிடும் சொல்லாட்சிச் சிறப்பைக் கண்டு
   மனமகிழ்ந்து திளைத்திடுவான்; அந்தப் பாட்டில்
சிரிக்கின்ற வழுக்களையோ, மயக்க மூட்டும்
   சொல்லடுக்கை யோஎன்றும் பொருட்ப டுத்தான்.

 

Re; சவகர்லால் கவிதைகள்

                                  கவிதை

எதுகவிதை எனச்சற்றே சிந்தித் தால்நாம்
   ஏதேதோ சொல்லிடலாம்; நெஞ்சுக் குள்ளே
மெதுவாக, இனிமையாக,ஆழ மாக
   மெல்லிசைபோல் நுழையவேண்டும்; பின்ன ராங்கே
மதுமயக்கம் நிகழவேண்டும்; கவிதைச் சொற்கள்
   வரிசைநட மிடவேண்டும்; கேட்போர் நெஞ்சுள்
அதுநுழைந்தால் நற்கவிதை; இல்லை யென்றால்
   அணிவகுத்த சொற்கூட்டம்;அவ்வ ளவ்வே.

பளிச்சென்றே ஒருமின்னல் தோன்ற வேண்டும்;
   பாதாளக் குகைக்குள்ளும் அதுபு குந்து
வெளிச்சத்தைப் பாய்ச்சவேண்டும்; கற்போர் நெஞ்சுள்
   விதம்விதமாய்ப் பலசுவைகள் மலர வேண்டும்;
கலகத்துப் பூண்டுகளை எரிக்க வேண்டும்;
   கற்பனையில் வானவில்லே தோன்ற வேண்டும்;
தெளிவாக உள்நுழைந்தே தெளிவைத் தந்து
   சுவைகூட்டும் ஒன்றேதான் கவிதை யாகும்.

ஏதோவோர் கிறுகிறுப்பை ஈய வேண்டும்;
   இதயத்தின் உட்புகுந்தே உணர்வைத் தட்டி
ஏதோவோர் கிணுகிணுப்பை ஒலிக்க வேண்டும்;
   இனம்புரியா இன்பஅலை உள்ளே வீசி
ஏதோவோர் மயக்கத்தை அளிக்க வேண்டும்;
   எடுத்துவைத்தே மறுபடியும் படிக்கத் தூண்டும்
ஏதோவோர் போதையினை ஊட்ட வேண்டும்;
   இன்பமூறும் மணற்கேணி நல்ல பாடல்.

நடப்பிலில்லாக் கற்பனைகள் மட்டு மின்றி
   நடப்பினையும் கவிதையுளம் காட்ட வேண்டும்;
இடுப்பசைவில் உயிரொடுங்கும் காதல் விட்டே
   இடுப்பொடியும் மங்கைதுயர் காட்ட வேண்டும்;
எடுப்பான மாளிகைகள் மட்டு மன்றி
   ஏழைமக்கள் குடிசையையும் காட்ட வேண்டும்;
அடுத்துநிற்கும் இரட்டைகளை நல்ல பாடல்
   அழகுறவே காட்டாக்கால் காண்பார் யாரே!
   

Sunday, September 16, 2012

Re;சவகர்லால் கவிதைகள்

                                                  மழலையர்
             ( ஒய்.எம்.சி.ஏ. பட்டிமன்றம்
        சென்னை--13.11.07)
               கவியரங்கத் தலைமை

பெற்ற பொருளளவால் நாம்பெருமை யுற்றிடலாம்;
பெற்ற புகழளவால் நாமுயர்வை யெட்டிடலாம்;

பொருளளவும் புகழளவும் தருஞ்சிறப் போரளவே;
பொருள்பெற்றோர் புகழ்பெற்றோர் பெற்றோ ராவதில்லை;

சின்னக் கையசைவில் சிங்காரப் புன்னகையில்
வண்ணமுறக் குழந்தை வழங்குவதே அப்பதவி;

இந்திர லோகமாளும் அப்பதவி கிடைத்தாலும்
இந்தப் பதவிமுன்னே அப்பதவி தூசாகும்;

தத்தி விழுந்து தவழுமப் பிஞ்சுக்கே
எத்திசைச் செல்வமும் ஈடாகி நின்றிடுமா?

வாயொழுகும் நீர்குளித்தே வந்துவிழும் மழலைக்கே
போயெங்கும் ஈடொன்றைப் பார்க்க இயன்றிடுமா?

பூவிதழில் நெளிந்து புரண்டுவரும் புன்னகைக்கே
பூவுலகும் அந்தப் பொன்னுலகும் ஈடாமா?

எட்டி நடைபயிலும் இடையசைவின் எழிலுக்கே
கட்டிவைத்த நடனங்கள் கால்தூ சாகிடுமா?

மேல்விழுந்து புரண்டு வழங்குமந்த முத்தத்தை
மேலுலகப் பொன்மகளிர் வழங்கமிழ்தம் வென்றிடுமா?

செல்வத்தில் ஈடில்லா அச்செல்வம் பெற்றோரே
செல்வத்தைப் பெற்றோராம்; மற்றோர் பெறாதோர்;
குழந்தை
தொடரும் பரம்பரையின் சிறிய அணுத்துளி;
படரும் ஆலமரச் சந்ததியின் விதைக்கூறு;

தலைமுறையின் மகரந்தம் பரப்பும் ஒருகாற்று
தலைகளைத் தந்தையாக்கும் ரசவாதத் தொருகுளிகை;

பொருளற்ற வாழ்வைப் பொருளுற்ற தாக்கியோர்
பொருளாக்கும் அந்தப் பொருளுக் கீடேது?

கள்ளமிலாச் சிரிப்பு; களங்கமி லாக்கண்கள்
உள்ள மெலாந்தூய்மை எனவிளங்கும் தெய்வமது;

முந்நூறு நாள்சுமந்து பெற்றபெரு வேதனையைப்
பெண்ணவள் மறக்கச் செய்வதப் பிஞ்சுதானே!
;;;

Tuesday, September 11, 2012

Re; சவகர்லால் கவிதைகள்

                     கண்ணதாசன் ஒரு பொழில்
            (அனைத்திந்தியத் தமிழ் எழுத்தாளர் சங்கம்
                     கண்ணதாசன் விழா--29-07-07 )
வானாகி விரிந்தவனைக் கவிதை யென்னும்
   மலையாகி உயர்ந்தவனைக் கருத்து வெள்ளத்
தேனாறாய்த் தவழ்ந்தவனைக் களிப்பை யூட்டும்
   தென்றலாகி அணைத்தவனைக் கண்ணன் என்னும்
கான்மழையின் வெள்ளமோடிக் கலக்கும் ஆழக்
   கடலாகி ஆழ்ந்தவனைப் பொழிலாய்க் காட்ட
நான்தானா கிடைத்திட்டேன்? சோலைக் குள்ளே
   நுழைந்தாடச் சரியான குரங்கு தான்நான்.

மதுவுக்கும் போதைவரப் பாட்ட ளித்த
   மாமன்னன்; திரையுலகம் என்னு மந்த
மாதுக்கும் போதைவர ஆட்டு வித்த
   மயக்குமொழிப் பாட்டுவீச்சுக் காரன்; அந்த
மதிமயக்கும் கண்ணனையே மயங்க வைத்த
   மாமாயக் கண்ணதாசன்; அவனை யிங்கே
எதெதுவாக வோஆக்கிப் பார்க்கின் றோம்நாம்;
   என்கடனோ பொழிலாக்கிப் பார்த்தல் தானே;

வண்டாடும் மலர்ச்சோலை யென்றால் அங்கே
   வந்தாடும் தென்றலுக்குக் குறைவா? வாசம்
கொண்டாடும் மலர்க்கூட்டம் சேர்ந்தால் அங்கே
   குழைந்தாடும் மணத்திற்குக் குறைவா? கண்கள்
கண்டாடும் எழிற்சோலை நுழைந்தால் உள்ளம்
   களிக்கின்ற அழகுக்குக் குறைவா? பாட்டைக்
கொண்டாடி வென்றிட்ட கண்ண தாசக்
   குளிர்சோலைக் குள்மனசு குதித்தா டாதா?

பொழிலுக்குள் மணமலர்கள் மட்டுந் தானா
   பொலிந்திருக்கும்? வாழ்ந்துபார்த்த கண்ண தாசப்
பொழிலுக்குள் நுழையுங்கள்; முட்கள் மத்தி
   பூத்திருக்கும் ரோசாக்கள் உமையே ஈர்க்கும்;
எழில்பொங்கும் ரோசாவைத் தொட்டால் உங்கள்
   இளவிரலைக் கூர்முட்கள் பதமும் பார்க்கும்;
அழகுவிஞ்சும் கண்ணதாசன் பாட்டுக் குள்ளே
   அகங்குத்தும் முள்ளிருக்கும் மறந்தி டாதீர்!

பாட்டுமகள் அவனிடத்தே தஞ்ச மாகிப்
   பைந்தமிழில் சந்தமென ஆடி நின்றாள்;
கேட்டவர்கள் செவிக்குள்ளே தேனாய்ப் பாய்ந்து
   கிறுகிறுக்க வைத்திட்டாள் கவிதை நங்கை;
பாட்டுக்கென் றேபிறந்த மகனும் சந்தப்
   பாட்டணங்கும் தமிழ்ச்சோலை தனிற்கு லாவக்
கூட்டுக்குப் பிறந்தவெல்லாம் கொள்ளை இன்பம்
   கூட்டுகின்ற தமிழ்ப்பாடற் சேயின் கூட்டம்

மணம்நிறைந்த மலர்பூத்த தன்மை யாலும்,
   வண்டுகட்குத் தேனீந்த பெருமை யாலும்,
மணம்பரப்பும் தென்றலங்கே தவழ்வ தாலும்,
   மனங்கவரும் சிட்டுக்கள் திரிவ தாலும்,
கணங்களென அரம்பையர்கள் ஆட லாலும்,
   கந்தர்வர் போலிசைஞர் இசைப்ப தாலும்,
குணமூட்டும் பொய்கையலை தவழ்வ தாலும்,
   கொள்ளைகொண்ட பாட்டுமகன் சோலை யேதான்

எப்போதும் மலர்க்கூட்டம் நிறைந்த ஒன்றே
   இனியபொழில் என்றிட்டால் கவிஞர் தன்னை
எப்போதும் எவ்விடத்தும் மலர்கள் மத்தி
   இனியமுறை பார்ப்பதனால் பொழிலே என்றால்
தப்பில்லை; அவர்முகமே அன்ற லர்ந்த
   தாமரைதான்; வாயசைவோ இதழ்க ளேதான்
ஒப்பின்றிப் பாடுமவர் இசையைக் கேட்டால்
   உலகுமகிழ் குயிலுக்கும் நாணம் தோன்றும்.

இவனைப்போல் உயிருடனே இருக்கும் போதே
   இரங்கற்பாப் பாடியவன் யாரு மில்லை;
இவனைப்போல் தன்வாழ்க்கைச் செய்தி யெல்லாம்
   ஒளிக்காமற் சொன்னவர்கள் யாரு மில்லை;
இவனைப்போல் யாரையுமே முழுதாய் நம்பி
   ஏமாந்தோர் யாருமில்லை; பொழிலென் றாலே
இவனைப்போல் ஒளிவுமறை வின்றி யார்க்கும்
   இனிமைதரும் பண்புடைய ஒன்று தானே. ,..