Wednesday, November 6, 2013

பூக்கள் பேசினால்

                    பூக்கள் பேசினால்........

பூத்துள பூக்களின் மணத்தினிலே --நாளும்
   புத்துணர் வடைந்து திளைக்கின்றீர்;
பூத்துள இதழ்களின் எழிலினிலே --உள்ளம்
   பொங்கியே கவிதைகள் படைக்கின்றீர்;

எங்கள் இதழ்களில் காதலியைக் --கண்டே
   இதயக் களிப்பினில் ஆழ்கின்றீர்;
எங்கள் அசைவினில் அவள்நடனம் --கண்டே
   எங்கெங் கோபோய் வருகின்றீர்.

பெண்களைப் பூவினம் என்கின்றீர்; --முகப்
   பொலிவினைப் பூவிதழ் என்கின்றீர்;
கண்களை மலரெனச் சொல்கின்றீர் --மலர்க்
   கணையென மகிழ்வாய் ஏற்கின்றீர்.

பூக்களின் மேலழ குணரும்நீர் --உள்ளே
   பொதிந்துள அவலம் அறிவீரா?
பூக்களின் மென்மையைப் பாடும்நீர் --எம்மைப்
   பொடிசெயும் வன்மைகள் உணர்வீரா?

மலரெனில் மலர்ந்திடல் முதல்தகுதி --பின்
   மணம்பெறல் வாழ்வுப் பெரும்பகுதி
மலர்ந்துள மலரெலாம் பூமியிலே --நல்ல
   வாழ்வுப் பயன்பெறல் நிறைதகுதி.

எத்துணை மலர்கள் மலர்ந்தபயன் --பெற்றே
   இப்புவி போற்ற வாழ்ந்தனவாம்?
எத்துணை மலர்கள் இறைவனடி --பெற்றே
   இந்தப் பிறவியில் உயர்ந்தனவாம்?

பூத்தவை ஒருநாள் வாழ்க்கையுடன் --வாழ்வைப்
   பொசுக்கென முடிப்பதைக் காண்கின்றீர்;
பூத்தவை புயலின் வசப்பட்டே --பூத்த
   பொழுதே அழிவதும் பார்க்கின்றீர்.

ஒருநாள் வாழ்ந்து முடிகின்ற --எங்கள்
   உயர்வைப் பாடித் திளைக்கின்றீர்
ஒருநா ளேனும் மாலைசேர --நாங்கள்
   உளத்தவம் புரிவதைப் பாடுங்கள்.

மாலை சேர்ந்தால் பூத்தபயன் --இந்த
   மண்ணிற் பெற்றதற் குளமகிழ்வீர்!
மாலையே சேரா தந்தியிலே --நாங்கள்
   மண்ணைச் சேர்தற் கழுதிடுவீர்!
                19-08-07


Tuesday, November 5, 2013

அவளே மருந்து

                     அவளே மருந்து

உண்ணவும் உறங்கவும் முடியவில்லை; --என்றன்
   உடலும் உருகுது தாங்கவில்லை;
எண்ணமும் செயலுமே முடங்கிவிட-- என்றன்
   இயக்கமும் தடைப்பட நோய்ப்பட்டேன்.

நெஞ்சுளே ஏதோ உடைகிறது; - என்
   நினைப்பதும் நொறுங்கிச் சிதைகிறது;
பஞ்சென உள்ளம் பறக்கிறது -- எங்கோ
   போய்ப்போய் மீண்டும் வருகிறது.

கண்ணிலே ஒளியும் குறைகிறது; - காணும்
   காட்சிகள் குழம்பித் தெரிகிறது;
கண்ணுளே ஊசி புகுந்ததுபோல் - ஏதோ
   கொடிய வலியுடன் வதைக்கிறது.

பெற்றவள் பார்த்துப் புலம்புகிறாள் - எங்கோ
   பெரிய வைத்தியன் தேடுகிறாள்;
உற்றவ ரெல்லாம் எனைப்பார்த்தே - இங்கே
   உருகி உருகிப் பேசுகிறார்.

வாதமா? பித்தமா? சிலேத்துமமா? -இந்த
   நாடிகள் நாட்டியம் பிடிபடுதா?
வேதனை நான்பட மற்றவர்கள் - என்னை
   வேடிக்கைப் பொருளெனப் பார்த்துநின்றார்.

எத்தனை மருந்துகள் விழுங்கிடினும் -அவள்
   எனைவிழுங் கியநிலை தீர்ந்திடுமா?
எத்தனை மருந்துகள் பூசிடினும் -அவளை
   எண்ணிய கொப்புளம் மறைந்திடுமா?

என்னவ ளிங்கே வரவேண்டும்; -மயில்
   இறகென நீவியே தரவேண்டும்;
என்னவள் தந்தஅந் நோயினுக்கே -அந்த
   இளையவ ளேபிற மருந்தில்லை.

நோய்களைத் தீர்த்திடும் மருந்துவகை; - அந்த
   நோயெலாம் உலகில் வேறுவகை;
நோயிதைத் தீர்க்க மருந்தில்லை - இந்த
   நோய்தந்த அவளே நோய்மருந்து.

பிணிக்கு மருந்து பிறமன்; அணியிழை
தன்னோய்க்குத் தானே மருந்து.
          புணர்ச்சிமகிழ்தல்--1102
  திருவள்ளுவர் இலக்கியமன்றம்
    நங்கநல்லூர்--08-07-06

Sunday, November 3, 2013

படிக்க முடியா ஏடு

                  படிக்க முடியா ஏடு

நாட்டில் நாள்தோறும் உறவாடும் மனங்களாம்
ஏட்டைப் படிக்க என்றேனும் முடிகிறதா?
சிரிக்கின்ற சிரிப்பிலவர் சிந்தையா தெரிகிறது?
விரிக்கின்ற சாகச வலைதானே தெரிகிறது.
அணைக்கின்ற அணைப்பிலவர் அகமா புரிகிறது?
நினைக்கின்ற வஞ்ச நினைப்பன்றோ புரிகிறது.
பேசுகின்ற பேச்சிலவர் பண்பா வருகிறது?
பூசுகின்ற பொய்மைப் பூச்சன்றோ வருகிறது.
உள்ளத்தில் பெருவஞ்சம்; உதட்டோரம் புன்சிரிப்பு;
கள்ளப் புதர்வாழும் குள்ளநரி காணுகின்றோம்.
தஞ்சமிலா ஆடுகளின் செங்குருதி சுவைக்கின்ற
வஞ்சக ஓநாய்கள் வரிசையைக் காணுகின்றோம்.
படங்காட்டி அருகணைத்துப் படக்கென் றேகொத்தி
விடங்கக்கிக் கொல்கின்ற பாம்புகளைக் காணுகின்றோம்.
நல்லபாம்பு குள்ளநரி நயவஞ் சகஓநாய்
எல்லாமே காணுகின்றோம்; மனிதனைத்தான் காணவில்லை.
முகத்தோற்றம் மனிதரென முழங்கி நிற்கிறது;
அகத்தோற்றம் எப்போதும் யாருக்கும் தெரிவதில்லை.
புலியெது? நரியெது? புரியவே முடிவதில்லை;
புலியெல்லாம் பசுத்தோல் போர்வையொடு திரிகிறது.
நரிகள் அமைக்கின்ற மேடையில்தான் இந்நாட்டுப்
பெரிய சிங்கங்கள் பெருமைபெறு கின்றனவாம்.
படித்தவர்கள் இதயமெலாம் பண்புநெறி தேடித்தான்
துடிக்கிற தெனச்சொல்லும் தைரியம் நமக்குண்டா?
மெத்தப் படித்தவர்கள் மத்தியிலே இப்போது
சுத்தக் கோழைகளே தோன்றுவதைப் பார்க்கின்றோம்.
கொடுமையை எதிர்த்துக் குரல்கொடுக்கத் துணிவின்றி
இடுப்பொடிந்து திரிபவர்கள் இருக்கின்றார்; இன்னொருபால்
கொடுமை எதுவென்று குறித்துணர முடியாமல்
எடுத்ததெலாம் எடுத்தெறியும் வீரரும் இருக்கின்றார்.
கொடுமையும் இருக்கிறது; வீரமும் இருக்கிறது;
கொடுமையை இனங்காணாக் குழப்பமும் இருக்கிறது.
முகமோ சிரிக்கிறது; உள்நெஞ்சு வெறுக்கிறது;
பகலிலே நாடகந்தான் பளபளப்பாய் நடக்கிறது.
அணைத்தகை பிரியுமுன்பே அடுத்தகுழி பறிக்கிறது;
நினைத்ததை அடைய நெஞ்சுபலி ஆகிறது.
கிளைவிட்டுக் கிளைதாவும் படலங்கள் நாள்தோறும்
கலையாக நடக்கிறது; கொள்கை பறக்கிறது.
காலிற் கிடப்பதெல்லாம் கைக்கு வருகிறது;
ஆளுகின்ற சட்டமன்றம் அல்லோலப் படுகிறது.
எதைப்படிக்க முயன்றாலும் ஏதேதோ மறைக்கிறதே
எதைப்படித்து எதையுணர்ந்து இங்குவாழப் போகின்றோம்?    

Friday, November 1, 2013

தாயே!

                            தாயே!

என்னருந் தாயே! இளநலச் செல்வி!
   என்னுயி ரியக்கிடு முணர்வே!
பன்னரும் புகழைத் தன்னுளே கொண்டோய்!
   பாரிலெம் மொழியிலும் மூத்தோய்!
சின்னவிக் கவிஞன் வேண்டிடு மொழியைச்
   சீற்ற மிலாதருள் செய்தே
எண்ணரு நலத்தை என்றனுக் கீவாய்
   என்னுயி ரே!தமிழ்த் தாயே!

இந்தப் பிறவி இனித்திட வாழ்வில்
   என்றனுக் கருள்செய வேண்டும்;
எந்தப் பிறவி நானெடுத் தாலுமென்
   இனிமைத் தமிழையே கொண்டு
சந்தக் கவிசெய முந்தித் துடிப்பொடு
   சாற்றுமோ ருள்ளமே வேண்டும்;
வெந்த நிலையிலும் சொந்த மொழிபயில்
   வீறுடை நாவதும் வேண்டும்;

சின்னதோர் புழுவாய்ப் பிறப்பெடுத் தாலுமிச்
   செந்தமிழ் மண்ணிலே வேண்டும்;
வண்ணக் கிளியாய் வடிவெடுத் தாலுமென்
   வாக்குத் தமிழெனல் வேண்டும்;
பின்னிடு கொடியாய்ப் பிறந்திடு போழ்தும்
   பெருந்தமிழ் மரத்தையே சுற்றிப்
பின்னிடு நிலையை என்றனுக் கீந்தே
   பேரருள் செய்திட வேண்டும்;

காட்டினிற் கழையாய் நின்றிடத் தென்றல்
   கன்னலின் சுவையெனத் தமிழை
ஊட்டியே ஒலிசெய மகிழ்ந்திட வேண்டும்;
   ஒருமர மாய்த்தனி யாயினும்
ஆட்டியே என்னை அலைக்கழித் திடவோர்
   அருந்தமிழ்க் காற்றதே வேண்டும்;
கூட்டிய பேரொலி தமிழென முழங்கக்
   குப்புற வீழவும் வேண்டும்.

என்னுயிர் மூச்சுத் தமிழெனல் வேண்டும்;
   எழுந்திடு விழுந்திடு போழ்தும்
பன்னிய மொழியால் தமிழையே சொல்லிப்
   படுக்கவும் விழிக்கவும் வேண்டும்;
எண்ணுவ தெல்லாம் எழுதிடு கோலும்
   என்னருந் தமிழையே எழுதப்
பண்ணிட வேண்டும்; இதுசெயக் கண்டால்
   பாரினில் வேறெது வேண்டும்?
               30-12-61