Friday, July 17, 2015

பாட்டுணர்வு நமக்கெதற்கு?



                           பாட்டுணர்வு நமக்கெதற்கு ?

அன்புடைய கவிஞர்காள்! உங்கள் நெஞ்சின்
   அலைவீச்சில் எதிர்நீச்சல் போட்ட துண்டா ?
அன்றாடப் பயன்கருதி நெஞ்சம் ஓடும்;
   ஆர்ப்பாட்டப் பாட்டிற்குச் சுருதி சேர்க்கும்;
வென்றானைப் பாராட்டிப் பரணி பாடும்;
   மேன்மேலும் பொருள்சேர்க்க வழிகள் நாடும்;
நின்றாடும் இந்தநெஞ்சும் அறிவும் மோதி
   நிகழ்த்துகின்ற போரினைநீர் வென்ற துண்டா ?

உம்கவிதை தீயோரைச் சுட்ட துண்டா ?
   உயர்பதவி இருப்போர்கள் தவறு செய்தால்
உம்கவிதை அதைச்சீறிப் பாய்ந்த துண்டா  ?
   ஒடுங்காமல் நடுங்காமல் நிமிர்ந்த துண்டா ?
வம்புசெய்யும் குண்டர்தம் அடித டிக்கே
   வளையாமல் அவர்குற்றம் சொன்ன துண்டா ?
உம்கவிதை கட்சிக்குள் அடைபட் டாலும்
   உண்மையினை அஞ்சாமல் உரைத்த துண்டா ?

குடியாட்சி தடியாட்சி ஆன போது
   கொதிவெந்நீர் மழையாகிப் பொழிந்த துண்டா ?
குடியாட்சி வேரினிலே வெந்நீர் கொட்டும்
   கொடும்பாவி முகத்தினிலே உமிழ்ந்த துண்டா ?
நொடிப்பொழுதில் அதர்மங்கள் கிருமி யாகி
   நாட்டினையே அழிப்பதைநீர் எதிர்த்த துண்டா ?
கடிக்கவரும் புலிஓநாய் இவைகள் முன்னே
   கம்பீர மாய்க்கவிதை படித்த துண்டா?



இத்தனையும் செய்துபார்க்க எனக்கும் ஆசை;
   இடுப்பொடிந்து போய்விடுமோ என்ற அச்சம்;
இத்தகைய அச்சமொடு பேடி மையும்
   யார்யார்க்கோ அடிமையாகும் கோழை நெஞ்சும்
எத்தகைய மனிதனுக்குங் கூடா தென்றே
   இடித்துரைத்தான் நம்கவிஞன்; ஆனால் உள்ளே
எத்தகைய புரட்சித்தீ கொழுந்து விட்டே
   எரிந்தாலும் அதைப்பாடத் தயங்கு கின்றோம்.

ஏனென்று நானிங்கே சொலவா வேண்டும் ?
   இதயத்து நெருப்பைவெளிக் கொட்டித் தீர்த்தால்
ஏனென்று கேட்பதற்கே நாதி யின்றி
   இந்தமண்ணில் அக்கவிஞன் எரிப டானா ?
தேனென்று நஞ்சினையே பாடித் தீர்த்தால்
   செத்தாநாம் போய்விடுவோம் ? என்று தானே
நானின்று நினைக்கின்றேன்; அய்யோ பாவம் !
   நெஞ்சுறுதி புதைத்தவனுக் குய்தி உண்டா ?

காவலர்கள் செயுந்தவற்றைப் பாடி னால்நான்
   கண்மூடித் திறப்பதற்குள் சிறைவா சம்தான்;
மேவிவரும் அராசகத்தைத் திட்டி னாலென்
   மென்னிநெரி பட்டுயிரை இழப்ப துண்மை;
தாவிவருங் குண்டர்க்கு முன்னே என்றன்
   சத்தியமும் நேர்மையுமே பதுங்கி யோடும்;
பாவிமகன் என்கையில் கவிஎ தற்கு ?
   பாட்டுணர்வைக் கடலுக்குள் எறிந்தா லென்ன ?

                              கண்ணதாசன்பிப்- 2002

புறப்படு பெண்ணே!



               புறப்படு பெண்ணே !

புறப்படு பெண்ணே! புவியை அசைக்க!
சிறப்பிடம் நோக்கியுன் சிறகை விரித்தெழு!

சிந்தனை; செயல்திறம்; துணிவுடன் ஆர்வம்
எந்தவி தத்தில்நீ இளப்பம்? துடித்தெழு!

பூவிதழ் இணைந்தொரு புயலா கட்டும்!
பூமறை சருகுகள் பறந்தோ டட்டும்!

பூட்டிய தளைகள் இன்றிலை; பெரும்புகழ்
நாட்டியுன் ஆற்றலால் புவியை அளந்துபார்!

விண்கல மேறி வலம்வருங் காலம்
பெண்கள் வீட்டுளா முடங்கிக் கிடப்பது?

எத்துறை யெனினும் உன்கொடி நாட்டு!
கத்தியே எதிர்ப்பவர் வாய்களைப் பூட்டு!

புதுமை; புரட்சி; விடுதலை வேட்கை
எதிலும் உன்செயல் ஏற்றம் பெறட்டும்!

திசைகளை அளக்கவுன் சிறகுவிரி யட்டும்!
இசைவுற உன்கண் மண்பார்க் கட்டும்!

பழமை  எல்லாமே  தீமைக  ளல்ல;
பழமையின் அறங்களைத் துடைத்து விடாதே!

பெண்செயும் கடமைகள் பேணிக் காத்துக்
கண்ணிமை போலுன் வீட்டைப் போற்று!

புவியை அசைநீ! புரட்டி விடாதே!
புவியே தலைகீ ழானால் கெடுதல்.



ஆணினம் தருகிற தீமையை அகற்று!
ஆணினத் தையே  அகற்றி விடாதே!

புறப்படு பெண்ணேபுவியை அசைக்க!
புறப்படும் உன்னுடன் ஆண்மகன் வரட்டும்;

புவியை அசைக்க நெம்புகோ லாகிப்

புவியில் உனக்காண் துணையா கட்டும்

பாரதி பிறந்தான்



                    பாரதி பிறந்தான்

       பாரதி  பிறந்தான்எங்கள்
       பாரதி  பிறந்தான்;

தூங்கு  மிந்த நாட்டு மக்கள்
   துடித்தெ ழுந்தே நிமிரவும்
ஏங்கு கின்ற நெஞ்சம் பொங்கி
   எழுச்சி கொண்டே துள்ளவும்   --( பாரதி )

அடிமை வாழ்வின் சுகத்தில் இன்பம்
   அடைந்து நாளும் தூங்கிடும்
மிடிமை போக்கி விடிவைக் காட்டும்
   மேன்மைக் கதிரோன் என்னவே

சாதிப் பேயைத் தூர ஓட்டும்
   சக்தி மிக்க தெய்வமாய்
நாதி யற்ற மக்கள் வாழ்வை
   நிமிர்த்து கின்ற செல்வமாய்

பெண்ணி னத்தின் விலங்கு யாவும்
   பொடிப்பொ டியாகிச் சிதறியே
கண்ணின் நீல மணிகள் என்றும்
   கதிரை வீசி நிற்கவே

நாட்டின் வேத தத்து வங்கள்
   நெஞ்சி னிக்கும் உயர்வுகள்
கூட்டிப் பாடி நாட்டு மேன்மைக்
   கொடியு யர்த்தும் வேந்தனாய்


சக்தி சக்தி யென்று பாடிச்
   சிந்தை தன்னை உழுதுமே
பக்தி யென்னும் பயிர்வி ளைத்துப்
   பரவ சங்கொள் பக்தனாய்

கீதை சொன்ன ஞானக் கண்ணன்
   கைகள் கோத்த நண்பனாய்ப்
பாதை யொன்று புதிதாய்க் காட்டும்
   பழுத்த சிந்தை ஞானியாய்ப்       ( பாரதி )

ஆடை காக்கத் துடிக்கு மந்த
   அபலைப் பெண்ணின் காட்சியில்
பீடி ழந்தே அடிமை யான
   பார தத்தைக் கண்டவன்.

வீர மில்லா நாய்க ளென்று
   வெடிக்கும் சொற்கள் வீசியே
தீர மில்லாக் கோழை நெஞ்சில்
   திராவ கத்தை எறிந்தவன்.       ( பாரதி )
    
       ------------------------- 07-12-99