இறைவனுக்குகந்தது
--தமிழில் வழிபாடு--
மண்ணுலக ஆசை மயக்கத்தில் தடுமாறி
கண்கெட்ட பின்னேயென் கடைவாசல் வருகின்றீர்;
செய்யும் பாவத்தைத் தொகைதொகையாய்ச் செய்துவிட்டே
உய்யும் வழிநாடி ஓடியென்முன் வருகின்றீர்;
நடமாடும் மனிதர்தம் நரிச்செயலில் மிகநொந்து
படமாடும் பரமனென்முன் பணிவாக நிற்கின்றீர்;
விதைத்தவை அறுக்குங்கால் வேதனை தாங்காமல்
வதைநீக்க வேண்டி வாய்திறந்து புலம்புகின்றீர்;
வாருங்கள்; புலம்புங்கள்; வருந்தி உருகுங்கள்;
பாருங்கள் பசிதீரப் பரமன் திருமுகத்தை;
நீங்கள் வருவதுவும் நின்றே உருகுவதும்
தேங்காய் பழங்கொண்டு வழிபாடு செய்வதுவும்
கண்டு மகிழ்கின்றேன்; கண்ணிலருள் கூட்டிக்
கொண்டணைத்து மகிழ்வித்துக் குளிரக் காத்துள்ளேன்;
உள்ளங் கரைந்தோடி ஒப்பரிய என்பாதங்
கொள்ள வேண்டுமெனில் கனிவுவர வேண்டாமா?
உங்கள் நினைப்பும் உளங்கனிந்த வேண்டுதலும்
தங்கு தடையின்றித் தாவிவர வேண்டாமா?
நினைப்பை வெளிக்காட்ட மொழிதடை யாயிருந்தால்
நினைப்புத்தா னெப்போதென் நேர்முகத்தை எட்டுவது?
தமிழ்நாட்டில் தமிழ்பேசும் நீங்கள் வழிபாட்டைத்
தமிழிலே செய்தால்தான் சிந்தை வெளியாகும்;
தூய திருமேனி; தொண்டிற் கனிந்தவுடல்;
வாய்மை கொப்புளிக்கும் வண்மைத் திருப்பாட்டு;
உழவாரப் படையேந்தி ஒப்பரிய தொண்டுகளை
அழகாகச் செய்தவராம் அப்பர் மொழியென்ன?
நெருப்பறையில் வைத்தே வேகவைத்த காலத்தும்
விருப்புடனே தமிழ்பாடி வெப்பத்தை வென்றாரே!
நீற்றறையைத் தென்றலென நிகழ்த்திக் காட்டியதும்
மாற்றரிய கல்புணையாய் மாகடலைக் கடந்ததுவும்
அண்டிவந்த யானை அப்பரை மிதிக்காமல்
மண்டியிட்டு வணங்கி மறுவழியிற் போனதுவும்
நஞ்சும் அமுதாகி நல்லுயிர் காத்ததுவும்
செஞ்சொல்லா லான தமிழ்ப்பாட்டின் திறந்தானே!
நொந்தஉள்ளம் கடைத்தேற நெஞ்சார வணங்கும்நீர்
செந்தமிழில் வழிபாடு செய்தே உய்யுங்கள்;
என்தோழன் ஆரூரன் எப்போதும் என்னை
அன்போடு அழைத்தே அதிகவேலை வாங்கினானே!
தெருவிலே தூதாகச் சென்றேனே! அவனுள்ளம்
வருந்தாமல் துணைசேர்த்து வாழ்வின்பங் கூட்டினேனே!
எல்லாம் எதற்காக? இனிமையாய் அவனிடத்தில்
உள்ள தமிழ்கேட்கும் ஒப்பரிய ஆர்வந்தான்;
அர்ச்சனை பாட்டே! ஆதலால் என்னைச்
சொற்றமிழ் பாடுகெனச் சுந்தரர்க்குச் சொன்னேனே!
அப்பாட்டைக் கேட்டே அகமகிழ்ந்து திளைத்தேனே!
செப்புங்கள் அப்பாட்டை என்செவி துறக்கலாமா?
தேன்மழையா யென்செவியில் தினம்பொழிந்த பாடலுக்காய்
நான்ஏங்கி நிற்கின்றேன்; நல்லதமிழ் பாடுங்கள்;
இழிபாட்டைப் போக்கவுங்கள் இதயந் திறந்திடுங்கள்;
வழிபாட்டைச் செந்தமிழில் மனமகிழச் செய்திடுங்கள்;
ஆற்றலிலா வொன்றா? அழகில் லாவொன்றா?
போற்றாம லேனிந்தப் பைந்தமிழைப் புறக்கணிப்பீர்?
மறைக்கதவம் தமிழ்ப்பாட்டால் திறந்தேனே! என்செவியாம்
இருகதவம் தமிழுக்காய் நான்திறக்க மாட்டேனா?
அழகான தமிழ்ப்பாட்டால் வழிபாடு செய்யுங்கள்;
குழைவோடு வணங்குங்கள்; கும்பிட்டே உய்யுங்கள்;
நானப்பன்; நீர்மக்கள்; நம்மிடையே என்றென்றும்
தேனான தமிழ்மொழியே வழிபாட்டில் திகழட்டும்.
எனக்கும் இனிக்கும்; உமக்கும் புரியும்;
மனக்கவலை சருகாக மந்திரத் தமிழெரிக்கும்.
திருமுறைகள் செய்யாத விந்தையினை இவ்வுலகில்
ஒருமுறையும் பிறமொழிதான் செய்யாது; உண்மையிது.
கூடுங்கள் என்முன்னே; கூடித் தமிழ்ப்பாடல்
பாடுங்கள் என்முன்னே; பணிந்து வேண்டுங்கள்;
கூப்புங்கள் கையிரண்டை; கொட்டுங்கள் தமிழ்ப்பாட்டை;
கேட்பதற் கேங்கும்நான் கேட்டு மகிழ்கின்றேன்.
திருப்புத்தூர்--31-05-82