Thursday, October 10, 2024

இவைகள் பேசினால் -- அபிஷேக எண்ணெய் (முருகன்)

                         இவைகள் பேசினால்---

      அபிஷேக எண்ணெய்  (முருகன்)


தொட்டாலே கைமணக்கும் தூய மேனி

   தொடஆசைப் பட்டதுண்டு; நெடுநா ளாகக்

கட்டான ஆறுமுகன் உடலைத் தீண்டும்

   காற்றாக மாறஆசைப் பட்ட துண்டு;

எட்டாத ஆசையென விட்டு விட்டேன்;

   இன்றைக்கிங் கவ்வாசை தீரப் பெற்றேன்;

இட்டமெலாந் தீருமட்டும் தழுவி வீழும்

   எண்ணெயென என்னையேநீர் மாற்றி விட்டீர்.


வள்ளிமகள் காதலுக்காய் மரமாய் நின்றான்;

   மான்தேடும் வேட்டுவனாய் அலைந்து நொந்தான்;

உள்ளத்தில் ஊற்றெடுக்கும் இளமை மூடி

   ஒருவிருத்த னாய்வடிவம் பூண்டு சென்றான்;

வள்ளிமகள் தழுவலிலே குழைந்த மேனி

   வழிகின்ற எண்ணெயென்றன் தழுவல் தன்னில்

உள்ளபடி மகிழ்ந்திடுமா? தெரிய வில்லை;

   ஒப்பரிய வகையினிலே நான்ம கிழ்ந்தேன்.


அழுக்கடையாத் திருமேனி தன்னைக் கூட

   அன்றாடங் குளிப்பாட்டுந் தத்து வத்தை

அழுக்கடையும் சிறுமேனி மனிதர் இங்கே

   அறிந்ததாகத் தெரியவில்லை; அறிந்தார் தாமும்

அழுக்கழிக்கும் விளம்பரத்துப் பொருளால் மேனி

   அலசிவிட்டு வருவாரே யல்லால் நெஞ்சின்

அழுக்கினையே போக்கிவிட்டுக் கோயில் நாடும்

   அறிவுணர்ச்சி பெற்றவராய்த் தோன்ற வில்லை.


பளபளக்கும் பட்டாடை மறைப்புக் குள்தான்

   பஞ்சமகா பாதகங்கள் குடியி ருக்கும்;

சலசலக்கும் சிறுபேச்சின் மத்தி யில்தான்

   சண்டாளத் திட்டங்கள் உருவெ டுக்கும்;

கலகலப்பாய்ச் சிரிக்கின்ற சிரிப்புக் குள்தான்

   கட்டாரி போல்வஞ்சம் மறைந்தி ருக்கும்;

நிலைகலங்கி நெஞ்சத்தை மேய விட்டு

   நேயன்முன் நிற்பதனால் பயனும் உண்டா?


வள்ளியுடன் இருந்தாலும் அவனுக் கென்ன

   வஞ்சகங்கள் புரியாதா? இன்பங் கொஞ்சும்

உள்ளமுடன் இருந்தாலும் அவனுக் கென்ன

   உள்ளங்கள் தெரியாதா? வேலின் கூர்மை

உள்ளபடி அறிந்திருந்தும் வேலன் முன்னே

   உள்ளொன்று புறமொன்றாய் நிற்கின் றாரே

வள்ளியுட னிருப்பதனால் தீமை தன்னை

   மன்னிப்பான் வள்ளலவன் எனும்நி னைப்பா?


சந்தையிலே தரங்கெட்டு நாறிப் போன

   சரக்காகி மனம்நொந்து போன நான்தான்

எந்தைபிரான் இளையமகன் மேனி தன்னில்

   இறங்கிவிளை யாடுகின்ற பொருளாய் வந்து

இந்தவொரு பிறப்பெடுத்த பயனைப் பெற்றேன்;

   எண்ணெய்நான் அவன்குளிக்கக் குளிர்ச்சி பெற்றேன்;

கந்தனவன் கேசாதி பாதம் தொட்டுக்

   கடைத்தேறி விட்டேன்நான்; மனம்நி றைந்தேன்

No comments:

Post a Comment