Thursday, October 10, 2024

இளமையின் வழக்கு—கல்வியின் மீது

                   இளமையின் வழக்கு—கல்வியின் மீது

             திருக்கோயிலூர்—02—05—1987

கிழடுகளாய்த் திட்டமிட்டே இளைய வர்க்குக்

     குழிதோண்டி வைக்கின்றார்; வாழ்க்கை தன்னில்

இளமையுடன் இனிமையினைக் கடந்து விட்ட

     எரிச்சலினால் தீமைசெய்ய நினைக்கின் றார்கள்;

அழகென்று கருதியிவர் திட்ட மிட்டே

      அமைத்திருக்கும் கல்விநெறி எமக்கு மோசம்;

இளையவரைப் பழிவாங்க வென்றே மூத்தோர்

     எடுத்திட்ட கொள்ளியென்றே கருது கின்றேன்.


ஆடைபற்றிக் கவலையின்றி, உடம்பில் சேரும்

     அழுக்குபற்றிக் கவலையின்றிக், காடும் மேடும்                                   ஓடியுழைத் திருந்திட்ட ஒருவ னைப்போய்

     உயர்த்துவதாய்ப் படிக்கவைத்தீர்; நடந்த தென்ன?

ஆடைபூணக் கற்றிட்டான்; அழுக்கு நீக்கும்

     அரியகலை கற்றிட்டான்; ஆனால் அந்தோ

ஓடியுழைப் பதைமட்டும் மறந்து விட்டான்;

     ஓடுகிறான்; ஓடுகிறான்; வேலை தேடி.


படித்திட்டால் பட்டமுண்டு; வேலை இல்லை;

     பாரதத்துத் தெருக்களெலாம் வேலை தேடும்

படித்தவர்கள்; தொழிற்கல்வி நிலையுங் கூடப்

     பரிதாப மாகிறது; “ யார்க்கும் காய்ச்சல்

அடிக்கிறதா?” எனவீடு வீடாய்த் தேடி

     அன்றாடம் மருத்துவர்கள் வரப்போ கின்றார்.

“இடிந்தவீடு புதியவீடு பணிகள் உண்டா? “

     எனத்தேடிப் பொறியாளர் வரப்போ கின்றார்.


என்னகல்வி தருகின்றீர்? நாட்டி லிங்கே

     இருக்கின்ற சூழலுக்குள் வெற்றி காண 

என்னசொல்லித் தருகின்றீர்? எம்கண் முன்னே

     எழுத்தறியாப் பேதையெலாம் உயர்ந்து வாழ்வை

வண்ணமுற அனுபவிக்க அவனி டம்போய்

     வாய்பொத்திப் பரிந்துரைகள் கேட்க வைக்கும்

அந்நிலையைத் தருவதன்றிக் கல்வி யிங்கே

     ஆக்கிவைத்த ஆக்கங்கள் என்ன? சொல்வீர்!


உண்மையிலே இளைஞரினை உயர்த்த வேண்டி

     உருவான கல்வியெனில் உலக வாழ்வில்

என்னவகை வெற்றிபெற இயலு மந்த

     இனியகல்வி தனையன்றோ கொடுக்க வேண்டும்;

வண்ணமயில் சோலைக்குள் ஆடு தற்கும்,

     வாத்தினங்கள் நீருக்குள் நீந்து தற்கும்

என்னவகைக் கால்களுள? அதனைப் போல

     இளைஞர்க்கும் அமைப்புகளைத் தரவேண் டாமா?


உண்மைக்கு மதிப்பில்லா உலகில் நீங்கள்

     உண்மைசொல்லித் தரலாமா? கொஞ்சங் கூட

எண்ணத்தில் தூய்மையில்லா உலகில் நீங்கள்

     வாய்மைசொல்லித் தரலாமா? எதிரி லுள்ளோர்

கண்ணுக்குள் வஞ்சமொன்றே வாழும் போது

     கண்ணோட்டம் சொல்லாமா? இன்றை வாழ்வில்

என்னசொல்லித் தந்திட்டால் வெற்றி காண்பான்?

     இளைஞர்க்கே அதையன்றோ தருதல் வேண்டும்!


தில்லுமுல்லுக் கொருபாடம்; பகையை வீழ்த்தும்

     சூழ்ச்சிவகைக் கொருபாடம்; கள்ளச் சந்தை

சொல்லுதற்கே ஒருபாடம்; கணக்கை மாற்றிச்

     சுருட்டுதற்கே ஒருபாடம்; தேர்தல் நின்று

வெல்லுதற்கே ஒருபாடம்; வாக்கை வாங்கும்

     வித்தைகளுக் கொருபாடம்; என்று கல்வி

சொல்லிவைத்தால் இளைஞர்கள் பிழைப்பார்; இன்று

     சொல்லுகின்ற கல்விவகை எதற்கே ஆகும்?


பட்டங்கள் பறக்கிறது; கல்வி தந்த

     பண்பெல்லாம் திகைக்கிறது; நாட்டி லுள்ள

சட்டங்கள் நடிக்கிறது; சிலபேர் கையில்

     சமுதாயம் துடிக்கிறது; இதனை மாற்றத்

தட்டுங்கள்; நொறுக்குங்கள்; சமுதா யத்தில்

     தடமொன்று புதிதாகப் போடும்! என்று

தட்டியெழுப் பிடும்வகையில் கல்வி வேண்டும்;

     தடுமாற வைக்கின்ற கல்வி வேண்டாம்.   

   

No comments:

Post a Comment