Thursday, October 10, 2024

இவைகள் பேசினால்----திருநீறு

        இவைகள் பேசினால்----திருநீறு

திருநீறு பேசுகின்றேன்; தெளிவாகச் சொன்னால்வெண்

சிறுபொடியன் பேசுகின்றேன்; சிந்தை திறக்கின்றேன்;

என்னைப் பூசுகின்றார்; இறைவனிடம் பேசுகின்றார்;

கண்ணைக் குவிக்கின்றார்; காரியமெல் லாம்சரிதான்

நெற்றியை வெளுப்பாக்கத் திருநீறு பூசியவர்

சற்றேனும் உள்ளத்தை வெளுப்பாக்க வேண்டாமா?

நெற்றியி லுள்ளநான் நெஞ்சினுக் குள்பார்த்தால்

பற்றி எரிகிறது; பாவந்தான் தெரிகிறது;

சாண மெனப்பிறந்து சுடுநெருப்பில் தவம்செய்து

மோன வழிகாட்டும் திருநீறாய் உயர்ந்தவன்நான்;

மந்திர மாவேன்; மாமருந்தும் நானாவேன்;

சுந்தர மாவேன்; தோற்றப் பொலிவாவேன்;

பொன்வைத்துக் காலடியில் பொருள்குவித்து நின்றாலும்

என்னைத்தான் அதற்கீடாய்ப் பிரசாத மெனவீவார்;

தொட்டெடுத்து என்னைத் துளித்துளியாய் வீசுங்கால்

நட்டுவனா ராகஅந்தக் குருக்களும் மாறுகின்றார்;

என்னை யிவர்போடக் காசை யவர்போடப்

பண்டமாற்று நடக்கிறது; பக்திமாற்றுக் காணவில்லை;

மறுபடியும் வேக மனம்விரைந்து துடிக்கிறது;

பிறந்தஇடப் பெருமை பளிச்செனத் தெரிகிறது;

நீர்கழித்த பொருளை நல்லுணவாய்க் கொண்டுதினம்

நீர்கொழுக்கப் பாலீயும் நற்பசுவே பிறந்தஇடம்;

பசுக்கழித்த பொருள்நான்; பக்குவமாய் வெந்தபின்னே

விசுக்கென்று நீரணியும் வெண்ணீறா யாகிவிட்டேன்;

என்னை அணியும்நீர் என்தாயின் பெரும்பண்பு

தன்னை உணர்ந்தால் தாரணி உயராதா?

உமக்கோ விருப்பமில்லை; இருந்தாலும் நேரமில்லை;

நமக்கென்ன வென்றே நானும் கிடக்கின்றேன்;

இல்லாத இடமில்லை; இயங்காத துறையில்லை;

நல்லார்கள் பொல்லார்கள் வேறுபா டெனக்கில்லை;

புருவ நெரிப்பினிலே புரிந்துவிடும் மனமென்றே

புருவத்தின் மேற்பட்டை அடிப்பார் சிலபேர்கள்;

நல்லவர்கள் விதிவிலக்கு; நானவரைச் சொல்லவில்லை;

பொல்லாதார் வேடம் புனைவதையே சொல்லுகிறேன்;

வேடங்கள் போடுங்கள்; வித்தைகள் காட்டுங்கள்;

மூடி மறைத்தொழுக நான்தா னாகிடைத்தேன்?

என்னை எடுத்தணிந்து ஏதேதோ செய்துநெஞ்சைப்

புண்ணாக்கிப் போடாதீர்! பாவமெனை விட்டிடுங்கள் !

மருத்துவர்க்கும் எட்டாமல் மாயவித்தை காட்டுகின்ற

பெருநோய்கள் என்பூச்சில் பறந்தோடி மறைந்ததுண்டு;

வேலுக்கு முன்னே வெம்பிணிகள் நின்றிடுமா?

வேலின் நெற்றியினில் விளங்குபவன் நான்தானே!

பரமன் பார்வையிலே பாவங்கள் தொலையாதா!

பரமன் நுதலேறிப் பொலிபவன் நான்தானே!

சூலைநோய் ஒழித்துத் திருநாவுக் கரசரையிப்

பாலழைத்துத் தந்து பணிசெய்தோன் நான்தானே

என்னைக் குழைத்தே எழில்மேனி பூசிடும்நீர்

நன்றாய் இதயத்தை வெளுப்பாக்கிப் பழகுங்கள்!

பூசுவது வெண்ணீறு; பேசுவது பாவமெனப்

பேசுகின்ற பேச்சைப் பாரினிலே ஓட்டுங்கள்!

வெண்ணீறு நெற்றியில் பொலியட்டும்! நல்ல

பண்பாடு நெஞ்சத்திற் பழுத்து முதிரட்டும்!

திருநீற்றைக் குழைக்குங்கால் சிந்தை குழையட்டும்!

இருப்போரின் நெஞ்சம் இல்லாதார்க் கிரங்கட்டும்!

நல்லனவே எண்ணட்டும்! நாளும் முடிந்தவரை

நல்லனவே செய்ய நெஞ்சங்கள் முந்தட்டும்!

----- ----

--அலவாக்கோட்டை--10--09--81


No comments:

Post a Comment