இன்னும் எத்தனை?
இன்னும் எத்தனை எத்தனை காலம்
என்னுயிர் நீளும் தெரியவில்லை;
இன்னும் எத்தனை எத்தனை புயல்கள்
என்னுளம் தாக்கும் புரியவில்லை;
மின்னும் மின்னல் முழங்கும் இடிகள்
மோதிட மோதிட வாழுகிறேன்;
கண்ணும் செவியும் உடலும் வலிவும்
கரைவதை நாளும் காணுகிறேன்.
எத்தனை நட்புகள்! எத்தனை பிரிவுகள்!
எத்தனை அலைகள் வாழ்க்கையிலே!
எத்தனை வஞ்சம் எத்தனை சூழ்ச்சி
எத்தனை மோசம் உறவினிலே!
மெத்தென வந்து மெல்லென நுழைந்து
மகிழ்வினைத் தந்த ஒருநட்பே
கொத்தெனத் துரோகம் இழைத்திடக் கண்டு
குமுறிக் குமுறி அழுதுள்ளேன்.
அழுகையும் சிரிப்பும் கலந்ததே வாழ்க்கை
அதனை நானும் உணர்கின்றேன்;
அழுதவன் சிரிப்பான்; சிரித்தவன் அழுவான்;
அந்தச் சுழற்சி அவன்கையில்.
விழுந்தவன் எழுந்தால் மகிழ்வே; ஆனால்
எழுந்தவன் விழுந்தால் என்செய்வோம்?
எழுகதிர் விழுவதும் விழுகதிர் எழுவதும்
இயற்கை தருமொரு படிப்பினையே.
இப்படி வாழ்தல் எனமுடி வெடுத்தே
இதுவரை அப்படி வாழ்கின்றேன்;
இப்படி வாழும் என்மேல் சேற்றை
எறிபவர் சிலரைப் பார்க்கின்றேன்;
எப்படி இவரால் என்மேற் குற்றம்
ஏற்றிட முடிகிற தெனத்திகைப்பேன்;
அப்படி அவர்மனம் கோண லடிக்க
ஆனது ஏனெனக் கவல்கின்றேன்.
தெரிந்து தவறுகள் செய்யவும் மாட்டேன்;
தீமையின் பக்கம் செலவுமாட்டேன்;
புரிந்தவ ரென்னைப் புரிந்தவ ரானார்;
புரியா தவரும் புரிந்துகொள்வார்.
விரிந்த வாழ்க்கை திறந்த நூலாய்
விளங்கிட வாழ்ந்தே மிகஉழன்றேன்
தெரிந்த தனைத்தும் நல்லவை யாகித்
தெரிந்திட இறையை வேண்டுகின்றேன்
இன்னும் எத்தனை எத்தனை காலம்
இந்த மண்தான் எனைத்தாங்கும்?
இன்னும் எத்தனை எத்தனை விடியல்
இடர்கள் மோதிட விடிந்துவரும்?
இன்னும் எத்தனை எத்தனை சொந்தம்
என்பாற் பற்றை மிகக்கொள்ளும்?
இன்னும் எத்தனை எத்தனை வானம்
எனக்காய் விரிந்து வரவேற்கும்?. .