Friday, December 5, 2014

மனித வாழ்வில்--இனம்

        அனைத்திந்தியத் தமிழ் எழுத்தாளர் சங்கம்
               14-ஆம் ஆண்டு விழா--12-02-06

             மனித வாழ்வில் ....இனம்

   நானெந்த இனமெனக்குத் தெரிய வில்லை;
      நான்பிறந்த ஊர்தெரியும்; தெரியும் நாடு;
   நான்படித்த இடம்தெரியும்; உழைத்தோய்ந் திட்ட
      நான்செய்த பணிதெரியும்; இந்த மண்ணில்
   நான்பிறந்த மனிதகுலம் தெரியும்; பேசும்
      நல்லதமிழ் மொழியெனக்குத் தெரியும்; ஆனால்
   நானெந்த இனமெனக்குத் தெரிய வில்லை;
      நல்லினமா? வல்லினமா? புரிய வில்லை.

   நாய்களெல்லாம் ஓரினந்தான்; நம்கால் சுற்றும்
      நல்லநாயும் வெறிநாயும் இனமொன் றேயா?
   வாய்மணக்கச் சொல்பேசி உளம்ம றைக்கும்
      வஞ்சகரும் தூயோரும் இனமொன் றேயா?
   தூய்மைநிறை மல்லிகையும் மணமே இன்றித்
      தோன்றிநிற்கும் மலர்வகையும் இனமொன் றேயா?
   ஆய்ந்துணர்ந்தால் ஒரேயினமாய்த் தோன்று கின்ற
      அவைகளெல்லாம் பண்பாலே வேறு தானே!

   மனிதரெல்லாம் ஓரினந்தான்; அவர்கட் குள்ளே
      மனவகைகள் எத்துணையோ? உறவு கொண்ட
   மனிதரினை இனங்காண முடியா மல்தான்
      மீளமுடி யாத்துயரில் மூழ்கு கின்றோம்.
   மனிதரினை இனமாகப் பிரித்தால் நல்ல
      மனமுடையோர்; இல்லாதோர்; எனப்பி ரிப்போம்;
   மனம்நல்ல தூயோரோர் இனமாம்; இங்கே
      மனம்கெட்ட தீயோரோர் இனமாம் என்போம்.

   மனிதரெல்லாம் வாழ்பவரா? கைகள் கால்கள்
      வாய்த்திருக்கும் அனைவருமே வாழ்வோர் தாமா?
   மனிதவாழ்வுக் கென்னபொருள்? நம்மைச் சுற்றி
      வாழ்பவரின் துயர்காண வில்லை யென்றால்
   மனிதன்வாழ்ந் தென்னபயன்? விலங்கு கட்கும்
      மனிதனுக்கும் வேறுபாடு அன்பு தானே!
   மனிதரெல்லாம் ஓரினந்தான் என்ற ணைக்கும்
      மகத்தான இனவுணர்வுக் கன்பு தேவை.

   அன்பில்லை யென்றிட்டால் பாச மில்லை;
      அடுத்தவரின் துயர்காணும் பார்வை யில்லை.
   அன்பில்லார்க் கிருக்கின்ற அங்க மெல்லாம்
      அங்கமில்லை; வாழ்வினுக்கோர் பங்க மேதான்.
   அன்புவலை வீசுங்கள்! இனத்தை யெல்லாம்
      அதற்குளகப் படுத்துங்கள்! அதைச்செய் தால்தான்
   மன்பதையில் மனிதரெனப் பிறந்த வர்நீர்!
      மகத்தான இனவுணர்வைக் கொண்ட வர்நீர்.

   சொல்வேறு செயல்வேறாய்த் திகழ்வார்; யார்க்கும்
      தீமையினைத் தயக்கமின்றிச் செய்வார்; நாட்டில்
   நல்லவரைத் துன்புறுத்தி மகிழ்வார்; சொந்த
      நெஞ்செல்லாம் வஞ்சகமே நிறைப்பார்; நாட்டில்
   இல்லாரை ஏளனமாய்ப் பார்ப்பார்; என்றும்
      இதயத்தில் நல்லவையே எண்ணார்; நெஞ்சே
   இல்லாத இவரையெந்த இனத்தில் சேர்ப்போம்?
      இவருந்தான் இனத்தாலே மனிதர் தானா>

   இனம்நல்ல இனமென்ற எண்ணங் கொள்வீர்!
      இனச்சிறப்பைக் காக்கின்ற துணிவை ஏற்பீர்!
   இனம்வாழ்ந்தால் நாம்வாழ்வோம்; இந்த மண்ணில்
      இனம்வீழ்ந்தால் நாம்வீழ்வோம்; சேரு கின்ற
   இனந்தூய்மை கண்டுநலம் வாழ்விற் காண்போம்;
      இருக்கின்ற கைகளவர் துயர்து டைக்கத்
   தினமுயர்ந்து செயல்படட்டும்! இனமு யர்த்தும்
      செயற்பயண நடையினைநம் கால்கூட் டட்டும்!
            ------     -----       ---
.