Sunday, July 23, 2023

 

                 இன்னும் கொஞ்சம்

 

இன்னும் கொஞ்சம் என்ப தேதோ

தன்னுள் அடங்கா ஆசைபோல் தோன்றும்

 அடைந்ததே போதுமென் றமைதி கொண்டால்

அடையும் முயற்சியும் அடங்கிப் போகும்

 

மேலே மேலே என்பதே நம்மை

மேலே பறக்கச் செய்யும் மந்திரம்

 படிப்பா? இன்னும் இன்னும் படிபடி!

படிப்பதில் திருப்தி என்பதே இல்லை;

எழுத்தா? இன்னும் இன்னும் எழுது1

எழுதுதற் கென்ன பொருளா இல்லை?


முயற்சியா? மேலும் மேலும் முயல்வாய்!

முயற்சியே உன்னை மேலே நிறுத்தும்;

வானம் என்ன எட்டாப் பொருளா?

வானை நோக்கி உயரே பற!பற!


கிட்ட நெருங்கின் எட்டிப் போகும்

விட்டு விடாதே! அதுவும் வசப்படும்;

 விண்மீன் கூட உன்மீ னாகும்


எண்ணம் மட்டும் உயர்வா யிருந்தால்;

 முழுமதி உன்னிடம் வந்துற வாடும்

உழைப்பில் முயற்சியில் முழுமை யிருந்தால்;

 இன்னும் கொஞ்சம் என்று வளர்ந்தே


விண்ணில் பிறைமதி முழுமதி யானது;

 அடையும் குறிக்கோள் பெரிதா கட்டும்;

அடையும் முயற்சி உயர்வா கட்டும்;

 இன்னுங் கொஞ்சம் என்பது நீயே


உண்ணும் ஊக்க மருந்தா கட்டும்;

 இன்னுங் கொஞசம் எட்டி அடிவை!

மண்ணில் எல்லாம் உன்றன் அடிக்கீழ்!