Sunday, November 30, 2014

என்ன நடக்கிறது

                          என்ன நடக்கிறது ?
அரசாங்க அலுவலகம் ஒன்றில் நுழைகிறேன்;
இருகை  நீட்டி   வணங்கிவர   வேற்கிறார்.
கண்ணீலே ஒளிமின்னச் சொற்களில் அன்புவழிய
என்னவேண்டும்? என்கிறார். வந்தவேலை மறந்துவிட்டேன்
அமருங்கள் என்றென்னை அமர்த்திப் பாசமுடன்
அமைதிபொங்க என்குறையைக் கேட்டுப்பின் அவராக
விரைந்து செயல்பட்டு வேண்டியதை முடித்துவிட்டே
உறவோடு கைகுலுக்கி வழியனுப்பி வைக்கிறார்.
      என்ன நடக்கிறது? எனக்கொன்றும் புரியவில்லை.

நியாய விலைக்கடையின் ஊழியர் வீடுவந்து
நியாய விலைக்கே என்னவேண்டும்? என்கிறார்;
பட்டியலை வாங்கி அதன்படியே பொருளையெல்லாம்
கட்டிவந்தே அளவு குறையாமல் தருகிறார்.
இதுவரை காணாத அன்பொளியை அவர்முகத்தில்
இதுபோது கண்டவுடன் இதயம் வியக்கிறது.
        என்ன நடக்கிறது? எனக்கொன்றும் புரியவில்லை.

என்மகன் பட்டம் இந்தஆண்டு தான்பெற்றான்;
இன்றவனுக் கொருமடல்; ‘உடனே விரைந்துவந்து
நல்ல பணியொன்றில் அமரவேண்டி ஓராணை;
உள்ளம் மகிழாமல் அவனோ நாளைக்கு
இன்னும் உயர்வான பணிதேடி வருமென்றான்.
என்ன நடக்கிறது? எனக்கொன்றும் புரியவில்லை.

இளமைபொங்கும் அழகுமங்கை நிறைந்த நகையோடு
வழக்கமான  வழியில்  நள்ளிரவில்  நடக்கிறாள்
தொந்தியிலாக் காவலர்கள் இரண்டுபேர் விரைவாக
வந்தவளின் முன்னும் பின்னுமாய்ச் செல்கின்றார்;
பாச உணர்ச்சியுடன் அவளையவள் வீடுசேர்த்துப்
பாச மலராக அவர்கள் திரும்புகின்றார்.
       என்ன நடக்கிறது? எனக்கொன்றும் புரியவில்லை.

தெருவோரம் ஒருவீட்டில் ‘ என்னகுறை?’ எனக்கேட்டு
வருகிறார்  ஓரமைச்சர்  அவர்மட்டும் தனியாக ;
அடுத்த நாளே  அவ்வீட்டுக் குறைதீர்த்துக்
கொடுத்த மகிழ்ச்சியில் குடும்பம் திளைக்கிறது.
அந்த  அமைச்சர்  பேருந்து நிறுத்தத்தில்
வந்த பேருந்தில்  ஏறிச் செல்கின்றார்.
        என்ன நடக்கிறது? எனக்கொன்றும் புரியவில்லை.

புடவைக் கடைக்குள்ளே மனைவியுடன் நான்நுழைந்தேன்;
அடுத்து நுழைந்தார்  முதலமைச்சர் தோழியுடன்;
பருத்திப் பிரிவுக்குள் எங்களுட னேவந்து
உருக்க முடன்பேசி  இதுநன்றா? எனக்கேட்டு
என்மனைவி சொன்னபடி புடவையும் எடுத்தே
அன்போடு சென்றார்; ஆரவாரம் ஏதுமில்லை.
         என்ன நடக்கிறது? எனக்கொன்றும் புரியவில்லை.

நாட்டிலுள்ள கட்சியெலாம் ஒருங்கிணைந்து மேடையொன்றில்
கூட்டம் நடக்கிறது;  குழப்பமே  அங்கில்லை;
காவலரே தேவையின்றிக் கருத்துகள் பொழிகின்ற
மேவுபுதுத் தோற்றமுடன் மேடை திகழ்கிறது;
எதிர்க்கட்சி யின்குரலை ஆள்பவர் கேட்கின்றார்;
எதிரியெனக் கருதாமல் இணைந்துநலம் பேணுகின்றார்;
மேடையொரு பூந்தோட்ட மெனமாறி எதையேனும்
நாடிவந்து பறியுங்கள்  எனவேண்டி நிற்கிறது.
        என்ன நடக்கிறது? எனக்கொன்றும் புரியவில்லை.

ஊழலென்றால் என்னவென் றிளையோர்கள் கேட்கின்றார்.
ஊழலென்ற சொல்லே  வழக்கின்றிப் போகிறது;
நேர்மை   வாய்மை   தூய்மை   நன்மை
சீர்மை   எனவெங்கும் வளமை கொழிக்கிறது;
காவிரியில் வெள்ளம்; பச்சைப் பசும்புரட்சி
நாவிரித்துப் பாடி நடந்துசெலும் உழவரினம்;
சென்னையில் தண்ணீர்ப்  பஞ்சமே யில்லை;
எண்ணிய கணமெல்லாம் தண்ணிர் கொட்டும்.
சிங்காரச் சென்னை;  குழியில்லாச் சாலை;
இங்கென்ன நடக்கிறது? எனக்கொன்றும் புரியவில்லை.
       வண்ணக் கனவென்றன் உறக்கம் கலைக்கிறது.

      ( நங்கநல்லூர்—13-03-04 )



       ;  .

வாழ்க்கை வாசலில் வள்ளுவம்

      வாழ்க்கை வாசலில் வள்ளுவம்
எம்மூரில் ஒருபழக்கம்; சிலபேரை உள்விடாமல்
எம்வீட்டு வாசலிலே யேநிறுத்தி அனுப்பிவைப்பார்;
என்ன இதுவென்றால் உள்வந்தால் தீட்டென்பார்;
இன்றைக்கு வள்ளுவர்க்கும் அந்தக் கதிதானா?
வாழ்க்கை நடப்புண்மை தெளிவாகக் கண்டுணர்ந்தே
ஆழ்ந்து சிந்தித்து வாசலில் நிறுத்தினீரோ?
வள்ளுவம் உள்வீட்டில் வந்தமர்ந்துச் விட்டதென
சொல்லி மகிழும் துணிவு நமக்குண்டா?

வாழ்க்கை உள்வீட்டில் வள்ளுவம் அமர்ந்துவிட்டால்
தாழ்வேது? துயரேது? தனியொழுக்கச் சிதைவேது?
நாமவர்சொல் கேட்கிறோமா? வள்ளுவச் சொல்லைவிட
நாமேதோ விரும்புகிறோம்; அதையேதான் செய்கிறோம்.
அன்பிற்குத் தாழில்லை என்றார்; உள்ளத்துள்
அன்பிற்குத் தாழிட்டு ஆத்திரத்தை வெளிவிடுவோம்;
இடுக்கண் வருங்கால் நகச்சொன்னார்; பிறர்க்குவரும்
இடுக்கண் களைக்கண்டு நாம்நகைக்கப் பழகிவிட்டோம்;
பொய்யாமை ஆற்றின் வேறறம்வேண் டாமென்றார்;
பொய்ம்மையே அறமாகப் பொழுதெல்லாம் போற்றுகின்றோம்;
வாய்மையைப் புதைத்துவிட்டு அதன்மேல் மேடைபோட்டுத்
தூய்மையைத் துடைத்துவிட்டுச் செயல்வீரம் காட்டுகின்றோம்;
வாய்மை சாகிறது; வழக்கின்றிப் போகிறது;
தூய்மை தொலைகிறது; துரோகந்தான் செழிக்கிறது;
ஆளவந்த பெரியவர்கள் வாக்களித்த குடிகளையே
மாளவந்த மக்களாய் மதித்தன்றோ நடத்துகின்றார்;
அல்லற்பட் டாற்றாது அழுதகண்ணீர் அழிக்குமென்றார்;
அல்லற்பட் டழுகின்றார்; அழிப்பதாய்த் தெரியவில்லை.
வள்ளுவம் உள்வீட்டில் வந்தமர்ந்துச் விட்டதெனச்
சொல்லி மகிழும் துணிவு நமக்குண்டா?
இல்வாழ்க்கை உள்வீட்டில் வள்ளுவர் உள்ளாரா?
இல்வாழும் இருவருமே வள்ளுவர்சொல் ஏற்பவரா?
வாழ்க்கைத் துணைபோற்றும் ஆண்மக்கள் குறைந்துவிட்டார்;
வாழ்க்கையிற்பெண் அடிமையென மதிப்பவர் தானதிகம்.
தற்கொண்டான் பேணத் தலைவிக்கு நேரமில்லை;
தற்கொண்டாள் போற்றத் தலைவர்க்கு நெஞ்சமில்லை.
என்னஇல்லை வள்ளுவத்தில்? அதுகூறும் நெறிமுறையில்
என்னஉண்டு நம்நெஞ்சில்? எண்ணிப் பாருங்கள்;
வள்ளுவனை உலகம் உணர்ந்துசொன்ன பின்னர்தான்
உள்ளாரா இவரொருவர் எனப்போற்றத் துவங்கினோம்நாம்.
நெறிமுறையைப் பறக்கவிட்டு நெஞ்சை விலையாக்கிக்
குறிகொள்கை ஏலமிட்டுக் கோபுரமாய்ப் பலராவார்.
தேர்தல் பெரும்புயல்தான் பொங்கிவரும் இன்றேனும்
யாரெவர் என்றுணரும் அறிவுபெற வேண்டாமா?
இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன்கண் விடலென்றார் அய்யனுமே;
எதனையும் எதனாலோ எவனோ முடிக்கின்றான்;
அதனை இனங்காணும் பகுத்துணர்வு வேண்டாமா?
வாசலில் நிற்பவரை வாழ்க்கைக்குள் வரவிடுங்கள்;
நாசமின்றி நாம்வாழ நல்லறிவு கொளுத்தட்டும்!
வள்ளுவம் ஒன்றைமட்டும் வாழ்வறமாய்க் கொள்ளுங்கள்!
உள்ளம் உயரும்; உள்ளபடி வாழ்வுயரும்.
       ( திருவள்ளுவர் இலக்கிய மன்றம்
             30-ஆம் ஆண்டு விழா—19-02-06 )     













Friday, November 14, 2014

ரோஜா மலரே!


                ரோஜா மலரே !
                    
                           ரோஜா மலரே மலர்வாயோ—அந்த
           ராஜா இலையெனத் தளர்வாயோ ?

சிரிப்பிலே அவனிதழ் நடமிருக்கும்—தூய
சிந்தனை ரேகையின் தடமிருக்கும்
நெருப்பிலே அவன்நிறம் சிரித்திருக்கும்—அந்த
நேசனே இலையென நினைப்பாயோ ?

கிண்கிணிச் சிரிப்பொலி நெஞ்சிருக்கும்—சின்னக்
குழந்தையைக் கனிவுடன் கொஞ்சிநிற்கும்
வெண்மதி மீன்களை அணைத்திருக்கும்—அந்த
வல்லவன் இலையென மடிவாயோ ?

இமயமும் குமரியும் எதிரொலிக்கும்—அந்த
இன்மகன் சாம்பலில் கதிர்விளைக்கும்
அமைதி என்றிடில் அவனிருக்கும்—அந்த
அன்பனே இலையென அழிவாயோ ?


  ( காங்கிரஸ் நூற்றாண்டு விழாவின்போது திரு.ப.சி. அவர்கள் விரும்பி
    வெளியிட்ட பாடல் தொகுதி ஒலிநாடாவில் இடம்பெற்ற என் பாடல் இது.
    இசை;-திரு. வீரமணி  பாடியவர்;--திருமதி. வித்யா ( உளுந்தூர்பேட்டை சண்முகம்

     மகள் எனக் கருதுகிறேன். )