Thursday, May 29, 2014

இன்னும் எத்தனை

           இன்னும் எத்தனை?

இன்னும் எத்தனை எத்தனை காலம்
   என்னுயிர் நீளும் தெரியவில்லை;
இன்னும் எத்தனை எத்தனை புயல்கள்
   என்னுளம் தாக்கும் புரியவில்லை;
மின்னும் மின்னல் முழங்கும் இடிகள்
   மோதிட மோதிட வாழுகிறேன்;
கண்ணும் செவியும் உடலும் வலிவும்
   கரைவதை நாளும் காணுகிறேன்.

எத்தனை நட்புகள்! எத்தனை பிரிவுகள்!
   எத்தனை அலைகள் வாழ்க்கையிலே!
எத்தனை வஞ்சம் எத்தனை சூழ்ச்சி
   எத்தனை மோசம் உறவினிலே!
மெத்தென வந்து மெல்லென நுழைந்து
   மகிழ்வினைத் தந்த ஒருநட்பே
கொத்தெனத் துரோகம் இழைத்திடக் கண்டு
   குமுறிக் குமுறி அழுதுள்ளேன்.

அழுகையும் சிரிப்பும் கலந்ததே வாழ்க்கை
   அதனை நானும் உணர்கின்றேன்;
அழுதவன் சிரிப்பான்; சிரித்தவன் அழுவான்;
   அந்தச் சுழற்சி அவன்கையில்.
விழுந்தவன் எழுந்தால் மகிழ்வே; ஆனால்
   எழுந்தவன் விழுந்தால் என்செய்வோம்?
எழுகதிர் விழுவதும் விழுகதிர் எழுவதும்
   இயற்கை தருமொரு படிப்பினையே.

இப்படி வாழ்தல் எனமுடி வெடுத்தே
   இதுவரை அப்படி வாழ்கின்றேன்;
இப்படி வாழும் என்மேல் சேற்றை
   எறிபவர் சிலரைப் பார்க்கின்றேன்;
எப்படி இவரால் என்மேற் குற்றம்
   ஏற்றிட முடிகிற தெனத்திகைப்பேன்;
அப்படி அவர்மனம் கோண லடிக்க
   ஆனது ஏனெனக் கவல்கின்றேன்.

தெரிந்து தவறுகள் செய்யவும் மாட்டேன்;
   தீமையின் பக்கம் செலவுமாட்டேன்;
புரிந்தவ ரென்னைப் புரிந்தவ ரானார்;
   புரியா தவரும் புரிந்துகொள்வார்.
விரிந்த வாழ்க்கை திறந்த நூலாய்
   விளங்கிட வாழ்ந்தே மிகஉழன்றேன்
தெரிந்த தனைத்தும் நல்லவை யாகித்
   தெரிந்திட இறையை வேண்டுகின்றேன்

இன்னும் எத்தனை எத்தனை காலம்
   இந்த மண்தான் எனைத்தாங்கும்?
இன்னும் எத்தனை எத்தனை விடியல்
   இடர்கள் மோதிட விடிந்துவரும்?
இன்னும் எத்தனை எத்தனை சொந்தம்
   என்பாற் பற்றை மிகக்கொள்ளும்?
இன்னும் எத்தனை எத்தனை வானம்
   எனக்காய் விரிந்து வரவேற்கும்?.  .

Tuesday, May 6, 2014

மருந்து பிறிதில்லை

                               மருந்து பிறிதில்லை

   மாலை நேரம். பகல் முழுதும் கதிர்வீசிக் களைத்த
கதிரவன் மேனி இளைப்பாற மேற்றிசையில் இறங்கிக்
கொண்டிருந்தான்,
   மேய்ச்சலுக்குச் சென்ற பசுக்கள் கன்றுகளை நினைத்துக்
கனைகுரலோடு வீடு திரும்பிக் கொண்டிருந்தன. பறவைகள்
கூட்டுக்கு விரைந்தன. மாலை நேரத்துக் கலகலப்பு எங்கும்
நிறைந்தது.
   அந்தக் கலகலப்பினூடே இன்னுமொரு கலகலப்பு. குயில்கள்
கூடி மிழற்றுவது போன்ற கூட்டுக் குரல்கள். யாழ் நரம்பைச்
சுண்டிவிட்டது போன்ற கிண்கிணிச் சிரிப்பு. இடையே திட்டுகள்.
கேலிப் பேச்சுகள்.
   பெண்கூட்டமொன்று பந்தாடிக் கொண்டிருந்தது. கைவிட்டுக்
கைமாறித் தாவியது பந்து. பெண்களின் பிடிப்பில் சிக்கியது;
அணைப்பில் நெருங்கியது; வீச்சில் பறந்தது.
   மலர்க் கூட்டத்தின் நடுவே செந்தாமரை தனித்து விளங்குவது
போல, நீர்ப்பறவைகளின் நடுவே அன்னமொன்று எடுப்பாகத்
தோன்றுவது போலத் தான்தான் தலைவி என்பதைத் தோற்றத்
தாலேயே காட்டி நின்றாள் அவள்.
   செல்லப் பெண் அவள். செல்வக் குடும்பம் அவளது. தந்தை
சீர்பெற்ற வாழ்வோடு தேர்பெற்று வாழ்பவர். தேரில் அவர் சென்று
வரும் காட்சி சிறப்புக்குரியது.
   தேர் இயங்குகின்ற அந்த மணல் முற்றத்தில்தான் இன்று
தோழியர் புடைசூழத் தோகை பந்தாடினாள்.
   தோழியர்க்கு நடை பயிற்றுவது போல நடந்தாள்; இசை
பயிற்றுவது போலப் பேசினாள். அசைவுகள் கற்பித்தாள்;
ஆட்டங்கள் சொல்லித் தந்தாள்.
   அத்தனை செயலையும் தூரத்தே நின்று பருகிக் கொண்டிருந்தன
இரு விழிகள். ஆடுகின்ற பந்தோடு அவன் உள்ளம் ஆடியது.
தலைவியின் கையில் பந்து தவழும் போதும், அவளணைப்பில்
அது கிடக்கும் போதும், 'ஐயோ அது நானாக இல்லையே'  என
ஏங்கியது அவன் நெஞ்சம்.
   ஏக்கப் பெருமூச்சோடு நடந்துபோன நிகழ்ச்சிகளை அசைபோட்டது
அவன் உள்ளம்.
   அவள் அவன் நெஞ்சிலே நிறைந்தவள்; நினைப்பிலே நடமாடும்
நேரிழை; அவள் பற்றிய நினைப்பே இனித்தது; கனவெல்லாம் அவளே;
காணும் பொருளெல்லாம் அவளே; அவளின்றி அவனில்லையெனத்
தனக்குள்ளே ஒரு முடிவை ஆக்கிக்கொண்டவன் அவன்;
   அவளின் ஒரு பார்வைக்காக ஏங்கினான்; பேச்சுக்காகத் தவித்தான்;
அவளுடைய உள்ளத்தில் தனக்கோர் இடமுண்டோ என அறியத்
துடித்தான்; ஏதோவோர் எண்ணம் ' அவள் உன்னவளே!' என்றது.
இயல்பாக எழுகின்ற ஐயம் ' அவள் என்னவள் தானா?' என்றது.
   என்ன செய்வான் அவன்? தலைவியோடு உடனாடித் திரிகின்ற
தோழியை அணுகினான். தன் நெஞ்சைத் திறந்து காட்டினான்; நெஞ்சில்
அவளே நிறைந்திருப்பதை உணர்த்தினான்; அவள்நெஞ்சில் தனக்கு
இடமுண்டா? என்பதை அறிந்து சொல்லச் சொன்னான். இடமில்லை
யென்றால் இடமுண்டாக்கி வழிகாட்டக் கெஞ்சினான்.
   தோழிக்குப் பெருமகிழ்ச்சி. தலைவிக்கேற்ற தலைவன் அவன்.
உருவும், திருவும், பருவமும் அனைத்தும் இணைந்த அழகான இணை
இது. அவள் உள்ளம் முடிபோட்டது. 'ஆனதைச் செய்வேன்' என வாக்
களித்தாள்.
   அடுத்து வரும்போது தலைவியின் உள்ளம் தலைவனை வெறுக்க
வில்லை எனக் கூறினாள்.
   போதுமே அது; வெறுப்பில்லையெனில் அடுத்த வளர்ச்சி விருப்புத்
தானே  என மகிழ்ந்தான் அவன். தனக்கென்று அவள் ஆகும் நாளை
ஆவலுடன் எதிர்நோக்கினான்
   வீட்டிலே இருப்புக் கொள்ளவில்லை.விரட்டியது நெஞ்சம்; விரைந்து
வந்தான் தலைவி தோன்றுமிடத்திற்கு.
   ஆட்டத்தைக் கண்டான்.
   அவள் தந்தையின் நெடுந்தேர் செல்லும் நிலவு போன்ற மணல்
முற்றம் அது.
   கோதை வரிப்பந்து கொண்டு நின்றாள். அவள் கூந்தல் மணத்தைக்
கொண்டுவந்து தந்தது தென்றல்.சந்தனக் கலவையின் சிந்தையள்ளும்
மணம் அவன் நெஞ்சைத் தடவியது. உயர்ந்த மலையில் விளைந்த
சிறந்த சந்தனத்தின் சேர்க்கை அது. தோழியர் கூந்தலில் உலர்ந்த
சந்தனக் கலவையின் தூள்கள் தோன்றின.
   தோழியர் மகிழும் வண்ணம் ஆடினாள் தலைவி.
   பார்த்துக் கொண்டிருந்த தலைவனின் நெஞ்சம் பதைத்தது. பார்வை
தன் பக்கமே திரும்பவில்லை என்பதை உணர்ந்தான். ஆனால் தான்
நிற்பதை அவள் அறிந்து கொண்டாள் என்பதில் அவனுக்கு ஐயமில்லை.
   ஏனிந்த நாடகம்?
   பரிவே இல்லாமல்- பார்வையைத் திருப்பாமல்- பந்தாடுகிறாளே!
   'ஏறிட்டுப் பார்க்காத அவளுக்காக நீ ஏன் ஏங்குகிறாய்?'- நெஞ்சம்
இடிக்கிறது.
   அவன் நெஞ்சிற்குக் கூறுகிறான்;
   " அருமை நெஞ்சமே! பரிவில்லாது செல்லுகின்ற ஒருத்தியின்
பார்வைக்காக நான் ஏங்குவது உனக்குப் பிடிக்கவில்லை. அவளன்புக்
காக இரங்கி நிற்பதை நீ வெறுக்கிறாய். காதலை வேண்டிக் கரைந்து
நிற்பதை நீ ஏற்கவில்லை.
   என்னருமை நெஞ்சே! ஒன்று கேள்;- எனக்கு இப்படி ஒரு நோயைத்
தந்தவள் அவள். இந்த நோய்க்கு வேறு மருந்தே இல்லை. நோய்தந்த
அவளே நோய்க்கு மருந்தாவாள். எனவே அவள் அருள் செய்யினும்
செய்யாவிடினும் இந்த நோய்தீர்க்கும் மருந்தாகிய அவளைப் பெறுதற்
காக இரந்து வழிபட்டு நிற்றலை வெறுக்காதே! "-என்று தன் நெஞ்சிற்குக்
கூறுகிறான் தலைவன்.
   " பிணிக்கு மருந்து பிறமன்; அணியிழை
    தன்னோய்க்குத் தானே மருந்து," -என்ற குறட்கருத்து இங்கே பளிச்
சிடுகிறது.
   இந்தக் காட்சியைத் தரும் பாடல் இதோ!
   " கொண்டல் மாமழை குடக்கேர்பு குழைத்த
     சிறுகோல் இணர பெருந்தண் சாந்தம்
     வகைசேர் ஐம்பால் தகைபெற வாரிப்
     புலர்விடத் துதிர்த்த துகள்படு கூழைப்
     பெருங்கண் ஆயம் உவப்பத் தந்தை
     நெடுந்தேர் வழங்கும் நிலவுமணல் முற்றத்துப்
     பந்தொடு பெயரும் பரிவி லாட்டி
     அருளினும் அருளாள் ஆயினும் பெரிதழிந்து
     பின்னிலை முனியல்மா நெஞ்சே! என்னதூஉம்
     அருந்துயர் அவலந் தீர்க்கும்
     மருந்துபிறி தில்லையான் உற்ற நோய்க்கே!
                நற்றிணை--140- பூதங்கண்ணனார்

       ( கொண்டல்-கீழ்காற்று; குடக்கு ஏர்பு--மேற்கு மலையில்
         எழுந்து;  குழைத்த--தழையச்செய்த; சாந்தம்-சந்தனம்
         கூழை--கூந்தல்; பரிவிலாட்டி--பரிவில்லாதவள்
          பின்னிலை--வழிபட்டு நிற்றல் )
                         11-12- 1970
                         
   


.