Monday, September 29, 2014

பாரதியின் புதிய அறம்

              பாரதியின் புதிய அறம்

        ( பாரதி கலைக் கழகம்-56ஆம் ஆண்டு விழா-23-12-07 )
                கவிதைப் பட்டி மன்றம்
          பொருள்;- பாரதிக்குப் பெரும்புகழ் சேர்ப்பது: "புதிய அறமா?
                   பாட்டுத் திறமா?
          நடுவர்;--டாக்டர் வ.வே.சு.
   நடுவர் அவர்களே!
 
   இன்றைக்கு எனக்கோர் உண்மைதெரிஞ் சாகணும்!

   பாட்டுத் திறமிருந்தால் தானே பாவலன்;பின்
   பாட்டுத் திறத்தையேன் அவனிடம் தேடுவது?

   சமுதாயத் தொளிசேர்க்கப் புதிய அறச்சுடர்
   அமைந்துளதா எனப்பார்த்தல் தானே நல்லாய்வு.

   பாரதிக் கதிர்வீச்சுப் பரவாத இடமில்லை;
   பாரதி ஒளிச்சுடர் புகாத இடமில்லை.

   பலதிசையும் சுடர்வீசிப் பரிமளிக்கும் ஒருகதிரை
   அளவாகச் சிமிழுக்குள் அடைக்க நினைக்கலாமா?

   இதழ்தடவி மலர்விக்கும் இனியதொரு தென்றலினைப்
   பதமாக்கிப் பெட்டிக்குள் பதுக்க முயலலாமா?

   பாரதியை அறிவுலகே பார்த்து வியக்குதெனில்
   பாரதியின் பாட்டுத் திறம்மட்டு மேபார்த்தா?

   பாட்டிலவன் கொட்டிவைத்த பாச்சுவை யெனும்தேறற்
   சாற்றைப் பருகிக் கிறுக்காகார் யாரிங்கே?

   அதனால் மட்டுமா அறிவுலகம் போற்றிசெயும்?
   எதனால்? எதனால்? எண்ணில் பெருவியப்பே!

   கற்பனை வானேறிக் கதிரளந்து பார்க்குமொரு
   கற்பனைச் சிறுகவிஞ னாஇந்தப் பாரதி?

   மண்ணுக்கு விடுதலை வந்துவிட்டாற் போதுமா?
   புண்ணான சீர்கேடு மண்ணாக வேண்டாமா?

   அறமென்ற பேரில் எத்தனை சீர்கேடு?
   அறமென்னும் பழமையைப் புதிப்பிக்க வேண்டாமா?

   அதைத்தான் செய்தான் அருமைப் பெருங்கவிஞன்;
   எதைச்செய் தாலுமதை மண்ணுக் காய்ச்செய்தான்.

   பாட்டுத் திறம்நமக்குப் புதுச்சுவைகள் ஊட்டலாம்;
   நாட்டு நலத்திற்காய்க் கவிநடக்க வேண்டாமா?

   கற்பனைச் சிறகாலே வானளந்து பார்க்கலாம்;
   அற்பமன நோய்தீர்க்க அறம்புதிதாய் வேண்டாமா?

   வாழ்வுச் சுவைகண்டோர் கவிச்சுவையில் திளைக்கலாம்;
   வாழ்வில் நையுமுயிர் ஊண்சுவைக்க வேண்டாமா?

   பூட்டிவைத்த பெண்கூண்டு பொடிபடவே வேண்டாமா?
   கூட்டாகப் பெண்ணினந்தான் கோலோச்ச வேண்டாமா?

   அதற்கறம் சொன்னதால்தான் பாரதியைப் போற்றுகிறோம்;
   எதற்காக வுமவனைக் கூண்டுக்குள் அடைக்கலாமா?

   புதிய சந்தங்கள்; புதிய சுவைக்கூட்டு;
   புதிய வடிவங்கள்; புத்தம் புதுநயங்கள்;

   இவைமட்டு மாகவிதை மழையில் விழுந்தன?
   அவைகளுடன் புதிய அறங்களைப் பொழிந்தானே

   அதுதானே அவனைப் புகழுச்சி ஏற்றியது!
   அதுதானே தாசனின் அடிமனத்திற் பதிந்தது;

   "புதிய அறம்பாட வந்த அறிஞனெனப்
   புதுமையாய்ப் பாடவைத்த தந்த அறந்தானே!

   அறம்--1
   "இப்பொழுதை நூல்களினை எண்ணுங்கால் ஆடவருக்
    கொப்பில்லை மாதர்; ஒருவன்தன் தாரத்தை

   விற்றிடலாம்; தானமென வேற்றவர்க்குத் தந்திடலாம்;
   முற்றும் விலங்கு முறைமையன்றி வேறில்லை"

   பழைய அறமிது; பாஞ்சாலிக் கவைதன்னில்
   அழகுற வீட்டுமன் அளித்த விளக்கமிது.

   புதிய அறமிங்கே நெருப்போடு வருகிறது.
       "இதுபொ றுப்பதில்லை--தம்பி!
           எரிதழல் கொண்டுவா!
        கதிரை வைத்திழந்தான்--அண்ணன்
           கையை எரித்திடுவோம்!"
   மூத்தவன் என்ற மரியாதை அறமும்
   சேர்த்தெரிக்கப் படுகிறது புதிய அறநெருப்பால்.

   அறம்--2
   பெண்விடு தலைக்கெனப் பத்துக் கட்டளைகள்
   அன்றைய மலைப்பொழிவாய் அழுத்தமுடன் வருகிறது;

   புதிய அறமங்கே பூத்துப் பொலிகிறது;
   புதுமைப் பெண்ணைநாம் பாட்டிலே காண்கிறோம்.

   நிமிராது குனிந்ததலை; நெளிகோணப் பார்வைபோய்
   நிமிர்ந்த நன்னடை; நேர்கொண்ட பார்வை;

   நிலத்தினில் யார்க்கும் அஞ்சாத நெறிகளுடன்
   கலகலப்பாய்ப் புதியஅறம் பெண்ணாகி வருகிறது.
 
   அறம்--3
   அன்றெழுதி வைத்ததை அழித்தெழுத முடியாது;
   இன்றைக் குணவில்லை என்றால் அவன்விதி.

   இதுதான் பழையஅறம்; பழகிய நீதி;
   இதோ பாரதியின் புதியஅறப் போர்முரசம்.

   "இனியொரு விதிசெய்வோம்--அதை
      எந்த நாளும் காப்போம்!
   தனியொருவனுக் குணவில்லை--எனில்
      சகத்தினை அழித்திடுவோம்!"

   பழமை பழமையென்ற பாவனையால் ஏழைமக்கள்
   அழுதுநையச் செய்யும் அறந்தூக்கி எறிந்திட்டான்;

   நெஞ்சம் துணிந்தவரே நிமிர்ந்துகையை உயர்த்திட்டால்
   பஞ்சம் பறந்தோடும் எனப்புது அறம்சொன்னான்.

   பிறர்பங்கைத் திருடுதல் எனச்சொன்ன தொடரிலே
   உறுதியுடன் மார்க்சின் கொள்கையை விளக்கிவிட்டான்.

   இப்போதைக் கிதுபோதும்; இணையில்லாப் பெருங்கவியின்
   தப்பாத பெரும்புகழைப் புதியஅற மேகொடுக்கும்.

   இனியென்ன நான்சொல்ல? கவிஞனுக்கு நாம்செய்யும்
   பணியவனின் பரிமாணம் உணர்ந்து உணர்த்தல்தான்.

   பாட்டுத் திறமவன்றன் பரிமாணத் தொருகூறு;
   காட்டும் புதியஅறம் பரிமாணச் சுடர்வீச்சு.

   மாந்தரை நெறிப்படுத்த, மனங்களைச் சரிப்படுத்த
   ஏந்தல்கள் தந்தவைதாம் இங்குள்ள அறங்களெல்லாம்;

   வளர்ந்தோர்க்குப் பழையசட்டை பொருந்தா ததைப்போல
   மலர்ந்துநிற்கும் மன்பதைக்குப் புதியஅறம் இவன்தந்தான்.

   அதுதானே சமுதாயக் கவிஞன் முதற்கடமை!
   அதைச்செய்த திறம்பற்றி அவனைநாம் போற்றிடுவோம்.

   பாட்டுத் திறமென்னும் கூட்டுக்குள் அடைக்காமல்
   நாட்டுக் கறம்சொன்ன நல்லிதயம் போற்றிசெய்வோம்.

   என்று நான்முடிப்பேன்; தீர்ப்பெனக்குச் சாதகமாய்
   நன்று வருமென்றே நம்பி  அமர்கின்றேன்.