வள்ளற் பெருமான் வழியில்………
கவியரங்கத் தலைமை
காரைக்குடி—14-09-1982
வடலூர் வள்ளலார் வெள்ளிவிழா
ஆறு
திருமுறையில் ஆண்டவன் திருவடிப்
பேறு
பெறும்நெறியைப் பிழையின்றிக் காட்டியவர்;
உள்ளத்தை
உருக்கும் ஒப்பரிய பாடலெனும்
வெள்ளத்தைப்
பாய்ச்சியேநம் வேதனையை விரட்டியவர்;
வாடிய
பயிர்கண்ட போதெல்லாம் வாடியவர்;
நீடிய
பிணிகண்டே நெஞ்சமெலாம் துடித்தவர்;
பசியென்ற
நெருப்பொன்று
ஏழைகளை எரிக்குங்கால்
புசிப்பதற்
குணவளித்தல் புண்ணியம் என்றவர்;
அணையாத
அடுப்பை மூட்டியே வயிறெல்லாம்
நனைத்தவர்; அதன்பின்னர் ஒளியினைக் காட்டியவர்;
காவிரியும்
கங்கையும் வேறுவேறு நதியெனினும்
மேவியவை
சேருமிடம் மேன்மைக் கடல்தானே!
எங்கெங்கோ
ஓடி எதையெதை யோதழுவிப்
பொங்கிச்
சென்றாலும் புகலிடம் கடல்தானே!
ஆண்டவனை
வணங்க அவரவர் மனத்துள்ளே
பூண்டநெறி
பலவெனினும் போகுமிடம் ஒன்றுதானே!
அதற்குள்ளே
பலபகையா?
உழக்குக்குள் கிழக்குமேற்கா?
பதரான
நெஞ்சங்கள் பாவத்தை விளைக்கலாமா?
என்றெல்லாம்
அவ்விதயம் எண்ணிநொந்த காரணத்தால்
நின்று
நிலைக்கின்ற சன்மார்க்க நெறிகண்டார்.
சன்மார்க்கம்
வள்ளற் பெருமான் தருமார்க்கம்;
நன்மார்க்கம்
இதைவிட்டால் நாட்டில் வேறில்லை;
அம்மார்க்கம்
கைக்கொண்டால் அகமெல்லாம் வெளுப்பாகும்;
எம்மான்
பேரிறைவன் இனிய அருள்கிடைக்கும்;
அந்த
வழிதன்னில் அடிவைக்க எண்ணியேநான்
இந்த
உலகத்தை ஏறெடுத்துப் பார்க்கின்றேன்;
எத்துணையோ
சான்றோர் எடுத்தெடுத்துச் சொல்லிவைத்த
தத்துவங்கள், நெறியெல்லாம் தீண்டாமைக் காளாச்சு;
வள்ளுவனார்
சொல்லாத வழிமுறையா? அதனைநாம்
உள்ளத்திற்
கொண்டே ஒழுகிய தடமுண்டா?
ஆண்டாண்டு
காலம் அறிவுரையை இம்மனிதப்
பூண்டுக்குச்
சொல்லிப் போய்விட்டார் சான்றோர்கள்.
தப்பின்றி
அந்நெறியிற் செல்பவரே இல்லாமல்
எப்போதும்
நெறிமுறைகள் ஏங்கித் தவங்கிடக்கும்;
கள்ளத்தை
உதறிக் கயமையை எறிந்துவிட்டே
வள்ளற்
பெருமானின் வழிநாடி வாருங்கள்;
உள்ளத்தைக்
குளிப்பாட்டி உண்மையெனும் நீறுபூசிப்
பள்ளத்தை
விட்டேறிப் பெருமானை நாடுங்கள்!
ஆணவத்தை
முழுதும் அகற்றுங்கள்! அந்த
வானவனைக்
காணும் வழிஉமக்குத் தெளிவாகும்;
துள்ளலை
விட்டுத் தொடங்குங்கள்; மன்றாடும்
வள்ளலைக்
காணும் வாய்ப்புப் பிறந்துவரும்;
சாதி
சமயமெனும் சழக்கை ஒழியுங்கள்!
சோதியைக்
காணத் தூய வழிபிறக்கும்;
பொய்யை
ஒழித்துவிட்டுப் புறப்படுங்கள்; மன்றாடும்
ஐயரைக்
கண்டுய்ய அரிய வழிதெரியும்;
மரணமிலாப்
பெருவாழ்வு வாழும் வழியொன்று
இருக்கிறது;
அந்நெறியில் இதயம் புகுத்துங்கள்;
என்றழைக்கும்
வள்ளற் பெருமானின் இனியகுரல்
என்றும்
வாழ்விக்கும்; எப்போதும் நலமீயும்.