Thursday, April 12, 2018


             மறந்தா போனார் ?

காற்றினி லாடி, உள்ளக்
   களிப்பதை நாடிக், காதற்
பேற்றினில் மூழ்கிக், கொம்பைப்
   பிணைத்துமே பின்னி வாழும்
போற்றிடு தன்மை யுள்ள
   பூநிறை மல்லி கையே !
நேற்றெனை அணைத்தா ரின்று
   நினைப்பதை மறந்தா போனார் ?

சேர்த்தெனை யணைத்துக் கன்னம்
   சிவந்திட ஈயும் போது
பார்த்ததைக் கீச்கீச் சென்று
   பழித்துமே பறந்து பேட்டைச்
சேர்த்தெமைச் சுற்றி வந்து
   திரிந்தபூஞ் சிட்டே ! நேற்றுக்
கோர்த்தகை பிணைத்தா ரிந்தக்
   குமரியை மறந்தா போனார் ?

இடையினைத் தடவி அய்யோ
   எங்கேயுன் இடையென் றென்றன்
இடையினைத் தேடு வார்போல்
   என்னவோ செய்யும் போழ்தில்
தடைசெய வந்தாய் போலச்
   சரக்கென முறைத்துச் சோலை
இடையினிற் பாய்ந்த மானே !
   எனையவர் மறந்தா போனார் ?

இடைவெளி குறுகி நாங்கள்
   இருவரொன் றாகி எங்கள்
இடையினில் எதுவும் போக
   இடமிலா திருக்க அந்த
இடைவெளி தனிலும் மிக்க
   இடரொடு நுழைந்த காற்றே !
இடையிலே நாளொன் றுக்குள்
   இதையவர் மறந்தா போனார்?
                   27-03-1960

1 comment:

  1. அறுபது காலங்களின் கவிதை,
    அறுபதைத்தொட்டு,,,,/

    ReplyDelete