Thursday, July 25, 2019


                                  கல்லூரி வகுப்பறை
அழகப்பா கல்லூரிமுத்தமிழ் விழா—02—04—1981
  கல்லூரிக்குள் நாங்களும் பேசுகின்றோம்.
          வகுப்பறை

கல்லூரி வகுப்பறைநான்; கல்வி தருகின்ற
எல்லா வகுப்பறைக்கும் ஏற்ற முடையவன்நான்;
பாத்திகட்டி நீர்பாய்ச்சிப் பண்பென்ற அடியுரங்கள்
சேர்த்து வளர்த்தபயிர் சிரிக்கும் பெருங்கழனி;
கண்ணாக வளர்த்துக் கருத்தோடு பார்த்தகொடி
வண்ண மலரினங்கள் வாரித் தருந்தோட்டம்;
சொன்னால் புரியாத சிறுபிஞ்சு நெஞ்சங்கள்
எண்ணத் துணிகின்ற இளம்பருவ ஆடுகளம்;
கட்டுக்குள் ளடங்காத முரட்டுக் காளைகளைக்
கட்டிவைத்துத் தீனிதரக் கட்டிவைத்த ஒருதொழுவம்;
ஆசிரிய வள்ளல்கள் அருங்கல்வி எனும்பொருளைக்
கூசாமல் அள்ளிக் கொடுக்கின்ற நன்முற்றம்;
இந்நாட்டு மன்னர்தம் இதயத்தைப் புடம்போட்டுப்
பொன்னாக மாற்றவெனப் போட்ட உலைக்களம்.
என்பெருமை தனையெண்ணி இதயம் நிமிர்கிறது;
உண்மை நிலைகண்டென் தலைசற்றுக் குனிகிறது.
வகுப்பறை இருக்கின்றேன்; வகுப்பும் நடக்கிறது;
வகுப்பறைக் காட்சிகளோ வயிற்றெரிச்சல் தருகிறது.
ஆசிரியர்  நடத்தும்  அரிய  பாடங்கள்
பேசுகின்ற மாணவர்தம் பேச்சில் கரைகிறது;
ஆசிரியர் பேசுகிறார்; மாணவரும் பேசுகிறார்;
பேசுகிற இருபேச்சும் பின்னிக் குழைகிறது.
வாரித் தரப்பொருளை வகைவகையாய் எடுத்துவந்த
பேரா  சிரியரோ பெருமயக்கங் கொள்ளுகிறார்.
பேசாதீர்! என்றுசொல்லிப் புலம்பி ஓய்ந்துவிட்டுப்
பேசாமல் தவிக்கின்றார் பெரும்புலமைப் பேராசான்.
மணியடித்தால் விடுதலை; இருவருமே நினைக்கின்றார்.
இனிய   எதிர்காலச்  சமுதாயம்  மலர்கிறது.
வகுப்பறை இருக்கின்றேன்; வகுப்பும் நடக்கிறது;
வகுப்பறைக் காட்சிகளோ வயிற்றெரிச்சல் தருகிறது.
சிந்தனையாளர்; பேரறிஞர்; முதிர்புலவர்; எல்லோரும்
வந்துவந்து கருத்தை வாரி வழங்குகின்றார்;
சிந்தும் மணிகளையார் சீந்திப் பார்க்கின்றார்?
வந்த உடனேயே வழிபார்த்துத் துடிக்கின்றார்.
இருகாதும் அங்கே இருக்காது; அப்படியே
இருந்தாலும் திறக்காது; இருபுறமும் முடிமறைக்கும்.
திறந்துள்ள காதுவழிச் செல்பவையோ நேர்கோட்டில்
விரைந்து வெளியாகிக் காற்றோடு கலந்துவிடும்;
கேளாத காதுக்குத் தினம்சொல்லிச் சலிக்கின்ற
மேலான ஆசிரியர் மேன்மைகண்டு போற்றுகிறேன்;
வகுப்பறை இருக்கின்றேன்; வகுப்பும் நடக்கிறது;
வகுப்பறைக் காட்சிகளோ வயிற்றெரிச்சல் தருகிறது.
         _________ _________ ________



       

1 comment:

  1. அருமை. வகுப்பறைதன் வேதனையில் வருந்துகிற காட்சிதனைத் தொகுத்தளித்தீர் வாழ்த்துக்கள், சொல்வதற்கு வேண்டியதே. சித்தி கருணானந்தராஜா

    ReplyDelete