Friday, October 13, 2023

இரு நோக்கு

அய்யோ பாவம்! அவன்பாடு பெரும்பாடு.

மெய்யோ இளைக்கிறது; மனமோ தவிக்கிறது.

துள்ளித் திரிகாளை தோற்றப் பொலிவிழந்து

உள்ளத்துப் பெருஞ்சுமையால் ஒடிந்து நைகிறான்.

கண்ணுறங்க மறுக்கிறது; கனவுகளோ வண்ணமயம்;

எண்ணம்நோய்ப் பட்டதுபோல் இதயமெலாம் பெருங்குழப்பம்.

என்ன நடந்தது ?

ஒன்றுமில்லை; அவளையவன் கண்டான்; கருத்திழந்தான்;

கண்கள் ஒன்றையொன்று கவ்விக் கலந்தன.

சென்றாள்; ஆனால் மனம்விட்டுச் செல்லவில்லை.

நின்று நிதானமாய் உள்ளிருந்து வதைக்கிறாள்.

நோயாளி இவனானான்; நோயை அவள்தந்தாள்.

நோயின் கொடுமையைத் தீர்க்கும் மருந்தென்ன ?

இப்போது தான்நமக் கொன்று புரிகிறது.

எப்போதோ கேட்டோமே  முள்ளெடுக்கும் வழியினை.!

முள்ளை எடுக்கவொரு முள்தான் தேவையெனில்

கள்ளி யவள்பார்வை கட்டாயம் தேவைதானே !

ஆனால் இங்கோ ஒருபுதுமை; அவள்பார்வை

தேனா ? தேளா ? நோய்தந்த ததுதானே !

ஒருநோக்கு நோய்தரும்; இன்னொரு வகைப்பட்ட

மறுநோக்கோ மருந்தாகி நோயினைத் தீர்த்துநிற்கும்.

இந்த இருவகை நோக்கும் அவளுக்கே

சொந்த மெனச்சொல்லி மகிழ்வை ஊட்டுகிறான்.


“ இருநோக் கிவளுண்கண் உள்ள தொருநோக்கு

  நோய்நோக்கொன் றந்நோய் மருந்து.”

         --குறிப்பறிதல்--1091   

ஆறு

விண்ணகத்துப் பெண்குழந்தை; மேக மென்னும்

  மெல்லியலாள் கருவளர்ந்து மேள தாளம்

மண்ணகத்தை அதிர்விக்கப் பிறந்த வள்நான்;

  மலைமங்கை மேலாடை யென்ன வீழ்ந்து

மண்ணகத்தைத் தொட்டபின்னே குதியாய்ச் சென்று

  மடுமேடு காடெல்லாம் திரிப வள்நான்;

மண்ணெல்லாம் நான்தொட்டால் சிரிக்கும்; நல்ல

  மாணிக்கப் பயிர்விளையும்; கொழிக்கும் செல்வம்


அணை;கட்டும் என்றுநானாய்ச் சொன்ன தில்லை

  அடக்கமுள்ள பெண்மகள்நான் ஆத லாலே;

அணைக்கட்டு வேலையங்கே முடிந்த தென்றால்

  ஆசையுடன் பசுமையினை ஈன்று நிற்பேன்;

நினைவெல்லாம் என்தலைவன் கடலை நாடி;

  நீள்பூமி தவழ்ந்தங்கே கிடைப்ப தெல்லாம்

நினைவோடு தலைவன்கா லடியில் சேர்ப்பேன்;

  நிம்மதியாய் அவன்மடியில் தலையைச் சாய்ப்பேன்;


நாகரிகம் நான்பெற்ற குழந்தை; நல்ல

  நகரங்கள் நான்சேர்த்த சேர்க்கை; எங்கும்

போகவரப் படகுகளே செல்ல யாரும்

  போடாத பெருஞ்சாலை யாவேன்; மாலை

மோகநெருப் புள்ளத்தே எரியக் காதல்

  வேதனையில் தவிப்போர்க்கே இதம ளிப்பேன்;

மோகத்தைக் கொன்றுவிட முனையும் யோகி

  முயற்சிக்கும் இடமளித்தே மகிழ்ந்து நிற்பேன்;


காராக விண்தவழ்வேன்; குளிர்ச்சி மோதிக்

  கனமழையாய் மண்வருவேன்; அருவி யென்னும்

பேராக மலைதவழ்வேன்; இடங்கள் தோறும்

  பெருங்குளமாய் நிலங்கிடப்பேன்; சிலபக் கத்தில்

பேராத பாறையெல்லாம் துளைத்த பின்னர்

  பாதாளத் துள்ளிருந்தே எட்டிப் பார்ப்பேன்;

ஆறாக நான்நடப்பேன்; கடலைச் சேர்வேன்;

  அவதாரம் பலவேதான்; மூர்த்தி ஒன்றே!


நதியென்றே போற்றிடுவார்; மக்கள் வாழ்வை

  நான்நடத்துங் காரணத்தால் என்னை நாட்டின்

விதியென்றுங் கூறிடுவார்; நான்தான் மண்ணில்

  வெறிகொண்டே விளையாடத் துவங்கி விட்டால்

கதியில்லை மக்கட்கே; என்றன் கோபக்

  கடுமையினைத் தாங்காமல் "ஆறு" என்பார்;

இதுபோதும் என்றேநான் ஆற்றிக் கொள்வேன்

  இந்தவினை வடக்கிற்கே ஏக போகம்;  ;


ஆராரோ ( பெண்குழந்தைக்கு )

                           


   ஆராரோ ஆராரோ ஆராரோ ஆரிரரோ


ஆசையிளங் கிளிமொழியே ! அற்புதமே! கையாட்டிப்

பேசுகின்ற  சிற்பமே!என்  பேரழகே!  தாலேலோ!


மண்ணில்நீ பிறந்ததுமே என்மனதில் இறக்கைகட்டி

விண்ணில்நான் பறந்துநின்றேன்; வெண்ணிலவின் தலைமிதித்தேன்;


பொற்பாவை போலழகுப் பொலிவுடன்நீ வளர்கையிலே

அற்பமனச் சமுதாய அலங்கோலம்  உறுத்திடுதே!


நீமலர்ந்து மணக்குங்கால் என்மனதில் ஏதேதோ

தீமலர்ந்து சிந்தையினைச் சுட்டெரித்து நிற்கிறதே!


நடையழகு பண்பழகு பார்க்காமல் சீதனத்தின்

எடையழகு பார்க்குமந்த இளைஞர்க்கே அஞ்சிடுதே!


வேலியே பயிரைமேயும் வெங்கொடுமைச் சூழலிலே

தாலிக்குக் காப்பில்லை; தங்கமேநான் நடுங்குகிறேன்.


சீராட்டித் தாலாட்டிச் செல்வமுனைக் கொஞ்சுங்கால்

போராட்ட நினைப்புநெஞ்சை முள்ளாய்க் கிழிக்கிறதே!


பாலியலின் கொடுமையினால் பாதிக்கப் படுகின்ற

வேல்விழியின் விதியெண்ணி மனம்நடுங்கி அழுகிறதே!


முள்மீது விழுந்தாலும் முள்ளிதன்மேல் விழுந்தாலும்

உள்ளபடி சேலைதானே உருச்சிதைந்து கிழிகிறது.


உனையெண்ணி மகிழ்வேனா? ஊரெண்ணி நடுங்குவேனா?

வினையெண்ணி உனைவீணே வீதிவழி விடுவேனா?


கண்ணேஎன் கண்மணியே! கவலையின்றிக் கண்ணுறங்கு!

கண்ணுறங்க மாட்டாமல் கலங்கஎன்னை விட்டுவிடு!

ஆராரோ உனைக்காப்பார்? ஆராரோ கைப்பிடிப்பார்?

ஆராரோ துணைவருவார்? ஆராரோ ஆரிரரோ!

அன்பு

வீட்டுக்குள்  கணந்தோறும்  மோதல்;  பெண்கள்

   விளையாட்டாய்  நாள்தோறும்  சாதல்;  நெஞ்சக்

கூட்டுக்குள்  அன்பில்லாக்  கார  ணத்தால்

   கொட்டிவிட்ட நெல்லியெனச் சிதறி, ஏதோ

காட்டுக்குள்  வாழ்கின்ற  விலங்கி  னம்போல்

   கடுகடுப்பை  முணுமுணுப்பை   ஒருமு  றைப்பை

வீட்டுக்குள்  காட்டுகின்றார்;  அங்கே  அன்பு

   விளைந்திட்டால்  அதுமகிழ்ச்சிக்  கூட  மாகும்.


தாயொருத்தி  பிள்ளையிடம்  காட்டு  கின்ற

   தனியன்புக்  கீடில்லை;  தூய   அந்தத்

தாயன்பே  மருமகளின்  மேலும்  பாய்ந்தால்

   தனிமகிழ்ச்சி  கிட்டாதா?   அவளும்   இவளைத்

தாயெனவே  ஏற்றுள்ளம்   பிணைத்துக்   கொண்டு

   சரியன்பைப்   பரிமாறிக்   கொண்டால்   அந்தத்

தூயமனை  வரலாறு   படைத்தி  டாதா?

   தனிவளங்கள்  தானாகச்  சேர்ந்தி  டாதா?


தூயஅன்பு   வீட்டுக்குள்  நிலவு  மானால்

   தூசுகளே சேராது; கோணற்  புத்தி,

மாயவலை, உள்ளத்தை  மறைத்த  பேச்சு,

   மயக்கங்கள்,  தயக்கங்கள்  இருக்க  மாட்டா;

தூயஅன்பின்  சுவைமட்டும்  உணர்ந்து  விட்டால்

   தொல்லுலகில்  வேறுசுவை   தேட  மாட்டோம்;

நேயமுடன்  அன்புவலை   விரிப்போம்;   அங்கே

   நிகழ்கால   உயிரினங்கள்  கவர்ந்து  வாழ்வோம்.


சமுதாயச்  சீர்கேட்டைப்  பார்க்கின்   றோம்நாம்;

   சரிந்துவிட்ட   பண்பாட்டின்    கார   ணத்தால்

சமுதாயம்  வன்முறையால்  கிழிபட்   டிங்கே

   சாகின்ற  கொடுமையினைக்   காண்கின்  றோம்நாம்;

சமுதாயக்   காற்றோடு   தூய   அன்பைத்

   தவழவிட்டுச்   சுவாசித்தோ  மானால்   இங்கே

திமுதிமெனத்  தலைவீழும்   செய்தி    யெங்கும்

   தெரியாமல்   உணர்வொன்றாய்   வாழ     லாமே!


கண்ணப்பன்   தின்றஎச்சில்  அமுத   மென்றே

   காளத்தி    நாதருமே    கொண்டா    ரன்றோ!

எண்ணத்தில்   அன்புமிக்க   கங்கை   வேடன்

   எடுத்தளித்த   மீன்வகைகள்   ஏற்றான்      ராமன்;

கன்னத்தில்  குழிகண்ட   சபரி    தந்த

   காயெச்சில்    நாதனுக்கே   இனித்த    தன்றோ!

எண்ணித்தான்   பாருங்கள்;      இறைவ       னுக்கே

   இனிப்பதெல்லாம்   தூயஅன்பாம்      ஒன்று     தானே!


அன்புவலை   வீச்சுக்குள்    பரம்பொ  ருள்தான்

   அகப்பட்டு   மகிழுமெனில்   மண்மீ    துள்ள

என்பொடுதோல்  போர்த்தவர்கள்   எந்த   மட்டு?

   யாரவர்தாம்  அன்புக்குள்    அகப்ப   டாதார்?

எண்ணத்தில்   தூயஅன்பு   மட்டும்   போதும்;

   எண்ணியவை    தானாக     முடியும்    கண்டீர்!

எண்ணத்தில்   பொங்கட்டும்   அன்பே!     அந்த

   இயக்கத்தில்   வசப்படட்டும்   பிரபஞ்   சங்கள்.


அறுமுகன் வருகை

 சிந்திக்கும் நெஞ்சத்துள் தித்திக்கத் தித்திக்கத்

   திகழ்கின்ற மலைக்கொழுந்தே!

 சிந்தனையி லுனையன்றிச் சிறக்கின்ற வேறுபொருள்

   தினமும்நான் உணர்வதில்லை;

நிந்திக்கும் பெருங்கூட்ட நெருக்கடியில் வாழ்கின்றேன்;

   நித்தமுமே வாடுகின்றேன்;

 நினைப்புக்கும் செயலுக்கும் யாதுமொரு தொடர்பில்லா

   நேயரையே கூடுகின்றேன்;

வந்திக்கும் நிறைபொருளா யிளையவனே! உனையேநான்

   வாழ்நாளில் தேடுகின்றேன்;

 வாடுகிற கணந்தோறும் மலருகிற உன்மேனி

   வடிவழகைப் பாடுகின்றேன்;

செந்தமிழின் பாட்டிலொரு சுவைக்கூட்டாய்த் திகழுகின்ற

   சேயவனே! வருகவேநீ!

 திகழ்குன்றக் குடிமலையில் சிறப்பாக விளையாடித்

   திரிகுமர! வருகவேநீ!


துன்பங்கள் கணந்தோறும் எனைவந்து தாக்கியேஎன்

   சிந்தையைக் கலக்கிநிற்கும்;

 தொலையாத இடர்பலவும் அலையாக வீசியெனைத்

   துரும்பாக அலைக்கழிக்கும்;

இன்பத்தின் நிழல்கூட எனைவந்து தொடுவதில்லை

   எனையேனோ புறக்கணிக்கும்;

 இதயத்தில் பலவான பொல்லாத பேய்க்கூட்டம்

   எப்போதும் ஆர்ப்பரிக்கும்;

கண்பாவச் செயல்காணும்; கைபாவச் செயல்செய்யும்;

   கால்பாவ வழிநடக்கும்;

 காதுகளும் பாவத்தின் குரல்கேட்டே மகிழ்ந்திருக்கும்;

   கடும்பாவம் எனைநடத்தும்;

மென்பாவை வள்ளிமயில் விளையாடு தோளழகா!

   முருகான வாவருக!

 முந்துகிற புகழ்கண்ட குன்றத்தின் மேலமர்ந்த

   முத்தான வாவருக!


நாள்தோறும் எனைநாடும் நண்பர்தம் கூட்டத்தில்

   நாடகமே காணுகின்றேன்;

 நெஞ்சிலொரு நினைப்பாகி நாவிலொரு சொல்லாகி

   நடக்கின்றார் நாணுகின்றேன்;

தோள்தழுவி உறவாடும் தோழனேஎன் பின்னிருந்து

   தொல்லைதர வாடுகின்றேன்;

 தூய்மையொடு வாய்மையின் தடங்கூடத் தெரியவில்லை

   தொலைதூரம் தேடுகின்றேன்;

நாள்பலவும் கழிகிறது; நெஞ்சமோஉள் அழுகிறது;

   நல்லகதி வேண்டுகின்றேன்;

 நாட்டிலது கிடைக்குமெனும் நம்பிக்கை எனக்கில்லை;

   நெஞ்சுறுதி தளருகின்றேன்;

வேல்தாங்கி வந்தென்றன் வேதனைகள் ஒழித்திடவே

   வேலவனே! வருகவேநீ!

 மயில்தாங்கி நடந்துவர வளைதாங்கு மயிலோடு

   மால்மருக னேவருகவே!


அறியாமை தனில்மூழ்கிக் கிடக்கின்றார் பாமரர்கள்;

   அவர்கள்தம் தலையிலேயே

 அருமையுடன் மிளகாயை அரைக்கின்றார்; தலைகொடுத்தோர்

   அகமகிழ்ந்து திளைக்கின்றார்;

தெரியாமல் கேட்கின்றேன்; தலையெரிச்சல் தெரியாத

   திறமென்ன திறமதுவோ!

 தெரிந்தாலும் சரியென்று கும்பிட்டுப் பணிசெய்யும்

   செயலென்ன செயலதுவோ!

அறிவுறுத்த முயல்பவரை அச்சுறுத்த முயல்கின்றார்;

   அடிப்பதற்கும் அஞ்சவில்லை;

 அறுமுகனே! சூரரினை அழிக்கவேநீ முனைந்துவந்தால்

   அடியவரே எதிர்ப்படுவார்;

புரியாத நல்லமனப் போக்குகளே புரிந்துசெயப்

   பொன்மயிலு டன்வருக!

 புகழேறு குடியதனில் மலையேறி நிற்கின்ற

   புண்ணியனே வருகவேநீ!


பொல்லாத மனமென்னைப் பாடாகப் படுத்திநாளும்

   போகாத இடம்செலுத்தும்;

 புரியாத அறிவென்னைப் பெருங்குழப்பந் தனிலாழ்த்திப்

   பொல்லாங்கில் மூழ்குவிக்கும்;

இல்லாத ஆசையெல்லாம் என்னென்ன வோஎழுந்தே

   என்னெஞ்சில் புயலெழுப்பும்;

 என்றைக்கும் நனவாகாக் கனவுகளே என்வாழ்வின்

   ஏக்கமென நிறைந்திருக்கும்;

செல்லாத நெறிசெலுத்தும் சபலங்கள் தேரேறித்

   திசையெல்லாம் ஓடிநிற்கும்;

 செய்வதொன்றும் புரியாமல் திசைவழிகள் தெரியாமல்

   திண்டாடி வீழ்ந்துநிற்பேன்;

கல்லாத எனக்குவழி காட்டிடவே மயிலேறிக்

   காற்றாக வருகவேநீ!

 கலைநிலவு குடியதனில் மலைநிலவி யுயர்ந்துள்ள

   கலைமணியே வருகவேநீ!


பொருள்செய்யும் வழியறியா திவ்வுலகில் நாள்தோறும்

   புண்பட்டு வாடுகின்றேன்;

 பொழுதொன்றும் பொருளின்றிப் போகாத தையுணர்ந்தே

   புலம்பியேநான் ஓடுகின்றேன்;

பொருளுக்கும் நான்கற்ற கல்விக்கும் சற்றுமொரு

   பொருத்தமுமே காணவில்லை;

 பொருள்கூடாக் கற்றவரைப் பூனையுமே மதிப்பதில்லை;

   புவியினிலோர் உயர்வுமில்லை;

மருள்போகக் கற்றவனைப் பொருள்சேர்க்கக் கற்குமொரு

   வழிகாட்டி அருளவேண்டும்;

 வாராத இடரேதும் வந்தாலே நீவந்து

   வாரியணைத் தெடுக்கவேண்டும்;

அருள்தோகை விரித்தமயில் அழகுவள்ளி யுடனாக

   அப்பப்ப! வருகவேநீ!

 அருங்குன்றக் குடியிலுயர் பெருங்குன்றி லாடுகின்ற

   அழகழகா! வருகவேநீ!


எத்தனையோ துன்பங்கள்; எத்தனையோ துயரங்கள்;

   எத்தனையோ மனஉளைச்சல்;

 எத்தனையோ பேராசை; எத்தனையோ மனஓசை;

   எத்தனையோ நெஞ்செரிச்சல்;

எத்தனையோ மனவீழ்ச்சி; எத்தனையோ மனத்தளர்ச்சி;

   எத்தனையோ பேரிகழ்ச்சி

 எத்தனையோ நடிப்பலைகள்; எத்தனையோ இடிப்பலைகள்;

   எத்தனையோ துடிப்பலைகள்;

இத்தனையும் நான்தாங்கி இவ்வுலகில் வாழ்ந்திடஎன்

   இதயத்தில் வலிமையில்லை;

 எனைக்கூட்டி யணைத்தெனக்கோர் வழிகாட்டி நடத்தியெனக்

   கென்றும்நீ அருளவேண்டும்.

இத்தரையில் வந்துகுற வள்ளிமயில் மணந்தவனே!

   எழில்முருக னேவருக!

 எழிலான குடிதன்னில் உயர்வான மலைவாழும்

   இளையவனே! வருகவேநீ!;

அழகென்னும் தெய்வம்

பூத்திருக்கும் மலரசைவில், கீழை வானில்

   புலர்ந்திருக்கும் கதிரொளியில், மாலை வாசல்

காத்திருக்கும் கண்ணசைவில், தலையைத் தூக்கிக்

   கவிழ்ந்திருக்கும் சேயசைவில், நீர்க்கு டத்தைச்

சேர்த்திருக்கும் இடுப்பசைவில், தெறித்த நீரில்

   திளைத்திருக்கும் உடலசைவில், கவிதை சிந்தி

ஆர்த்திருக்கும் பெண்ணசைவில் மனங்கொ டுத்தேன்;

   அழகென்னும் தெய்வத்தின் அடிமை யானேன்.


காலையிளங் கதிரவனை எழுப்பும் சேவற்

   கரகரத்த குரலினிலே அழகைக் கண்டேன்.

சோலையிளந் தளிரினையே ஆட்டி வைக்கும்

   சுகமான தென்றலிலே அழகைக் கண்டேன்.

காளையினத் திமிர்நடையில், அதைந டத்தும்

   கட்டுறுதித் தோளசைவில், அழகைக் கண்டேன்.

மாலைவரும் புள்ளினத்தின் வரிசை தன்னில்

   மயக்குகிற அழகென்னும் தெய்வம் கண்டேன்.


மலைமீது கொஞ்சுமிளம் பசுமை; அங்கே

   மலர்மாலை எனவீழும் அருவி, ஓடி

மலையளக்கும் மான்கூட்ட அருமை, ஆளை

   மயக்குகிற காட்டுமர இசைகள், என்றே

மலையெல்லாம் அழகுகொஞ்சி நிற்ப தால்தான்

   மனமகிழத் தமிழ்முருகன் மலையைக் கொண்டான்.

மலைகண்டு குடிகொண்டு வாழு மந்த

   மலைக்கொழுந்தில் அழகென்னும் முழுமை கண்டேன்.


தெய்வத்தைக் காணவெனில் தூய்மை கொஞ்சித்

   திகழ்கின்ற மனம்வேண்டும்; அதுபோ லத்தான்

தெய்வமெனும் அழகினையே காண வேண்டின்

   செப்பமுற்ற கவிதைமனம் வேண்டும்; அந்தத்

தெய்வத்தைக் கண்டுணரப் பழகி விட்டால்

   தெருவெல்லாம் அழகுநடம் மிளிரும்; அந்தத்

தெய்வமனம் கவிதையுளங் கொண்ட வன்நான்

   தெய்வமெனும் அழகிற்கே அடிமை யானேன். 

அழகு

எதுஅழகு ?  எப்படி?  இப்படிப்  பார்க்கலாமா?

எதிலழ  கில்லை?   ஏனழ  கங்கில்லை ?


அழகு நிலவுவது எதிலே ? சேர்க்கையில்

அழகெனப் படுவது பொருளிலா ? பார்வையிலா ?


காக்கை கருப்புத்தான்; காக்கைக் கதுவெறுப்பா?

சேர்க்கையில் அவைசிரித்துச் சிலிர்ப்பதில் அழகிலையா?


மண்ணை இருட்டாக்கும் வான்மேகக் கருங்கூட்டம்

எண்ணத்தை மயக்கும் இனிய அழகிலையா ?


வண்ணத்தி லாஅழகு ? இல்லை; பார்க்கும்நம்

எண்ணத்தில் எதுவினிக்கும் அதிலே அழகிருக்கும்.


பூத்துச் சிரிக்கின்ற புதுமலர் தானழகா ?

காற்றில் உதிர்கின்ற மலரிதழில் அழகிலையா ?


நெடிதோங்கி நிமிர்ந்தாடும் நெடுமரம் தானழகா ?

ஒடிந்தே அசைகின்ற சிறுகொம்பில் அழகிலையா ?


மான்களின் கண்மருட்சி அழகுதான்; ஆனாலும்

கான்திரியும் கொடும்புலியின் முறைப்பும் அழகுதானே !


எங்கே அழகில்லை ? எதிலே அழகில்லை ?

அங்கங்கே காண்பவைதாம் அகம்தழுவின் அழகுவரும்.


நிமிர்ந்தவையா? வளைந்தவையா? எதற்குமே அடங்காமல்

திமிர்ந்தவையா? திரிபவையா? திருடி வாழ்பவையா?


எதுவாக இருந்தாலும் அதுவாக அதுவிருந்தால்

எதுபோழ்தும் அதுவழகு; இதயங்கள் கொளலழகு.


கண்ணழகு; மூக்கழகு; காணும் முகவழகு;

முன்னழகு; பின்னழகு; இவைக்கெது அளவுகோல் ?


இடையழகு எதிலிருக்கும் ? இல்லாம லிருப்பதிலா ?

நடையசைவில் ஒடிந்துவிடும் கொடியிடையின் அசைவினிலா ?


ஒருவனுக்கு வானவில் வண்ணம் பேரழகு;

ஒருவனுக் கவ்வில்லின் வளைவு பேரழகு;


வண்ணமா ? வளைவா? எதிலே அழகிருக்கும் ?

எண்ணத்தி லெதுபதியும்? அதிலே அழகிருக்கும்.


கொடியிடையின் அசைவுநடம் அழகுதான்; ஆனாலும்                        துடிப்படங்கித் தடுமாறும் தளர்நடையில் அழகிலையா ?


இளஞ்சேயின் சிறுமழலை அழகுதான்; ஆனாலும்

நலஞ்சிதைந்த முதியோர்தம் நடுக்கம் அழகிலையா?


பனிமொழியின் இதழ்சுரக்கும் நீர்நலந்தான்; ஆனாலும்

கனிந்தகிழத் திதழொழுகும் கடைவாய்நீர் அழகிலையா ?


எங்கே அழகில்லை ? எதிலே அழகில்லை ?

அங்கங்கே காண்பதிலே அகம்தழுவின் அழகுவரும்.


காலைக் கதிரொளியின் களிநடனம் தானழகா ?

மாலைக் கருக்கிருட்டின் மைநடனம் அழகிலையா ?


இருளோட்டும் கதிரோனின் எழிற்பயணம் தானழகா ?

மருளூட்டும் இருள்வானச் சுடர்மீன்கள் அழகிலையா?


இருட்டில் அழகிலையா ? இளஞ்சோடி சொல்லட்டும்.

இருட்டறையில் குருட்டாட்ட இயக்கம் அழகிலையா ?


சிங்கத்தின் கம்பீரம் அழகுதான்; ஆனாலும்

அங்கிருக்கும் குள்ளநரித் தந்திரமும் அழகுதானே !


கொல்லேற்றின் திமிலசைவு அழகுதான்; ஆனாலும்

நல்லதொரு தாய்ப்பசுவின் மடியசைவும் அழகுதானே ?


எங்கே அழகில்லை ? எதிலே அழகில்லை ?

அங்கங்கே காண்பவைதாம் அகம்தழுவின் அழகுவரும்.

                  

                  நங்கநல்லூர்---20-02-2000