Thursday, October 10, 2024

இவைகள் பேசினால்---ஆலயமணி

  இவைகள் பேசினால்---ஆலயமணி 

   ஆலயமணி பேசுகிறேன்;


நாக்குடையோ னாக நானிருந்த போதிலும்

வாக்கெதுவும் இதுகாறும் வாய்திறந் துதிர்த்ததில்லை;


நாக்கில் வருபவைகள் நல்லன தருபவையாய்ப்

பார்க்காத காரணத்தால் பேச்சொழிந் திருந்தேன்நான்


பேசத் தெரிந்தவர்கள் பேச்செல்லாம் தீமையினை

வீசக் கண்டதல்லால் வேறு விளைச்சலில்லை;


நாவடக்கம் எங்குமில்லை; மாறாகப் பலபேரை

நாஅடக்கம் செய்கிறது; நடைமுறை உண்மையிது;


கேட்டால் செவிகைக்கும் கெட்டழிந்த சொற்கள்தாம்

நாட்டு மேடைகளில் நாட்டிய மிடுகிறது;


நாக்கிருந்தும் பேசாமை நல்லதென நானிருந்தேன்;

வாக்களிக்கச் சொல்லியெனை வம்பி லிழுத்துவிட்டீர்


பேச்சு வந்தவுடன் பெரியோ ரிடம்கேள்வி

வீச்செறி தல்தானே வாடிக்கைச் செயலாகும்;


என்னை உணர்ந்தவன்நான்; மண்ணை உணரவில்லை;

விண்ணை உணர்வமெனில் வெகுதொலைவு; எட்டவில்லை;


ஆறுகாலப் பூசை அன்றாடம் நடக்கிறது;

மாறுதலே இல்லாமல் மணியோசை கேட்கிறது;


என்நாக்கால் எனையேநான் அடித்துக் கொள்கின்றேன்;

மண்ணுளோர் போல மற்றவரை அடிப்பதில்லை;


ஆண்டாண்டு காலமாய் ஆலய மணியோசை

பூண்டுக்கும் புழுவுக்கும் மனிதர்க்கும் கேட்கிறது;


ஆண்டவன் இருப்பதையும் அவன்நம்மைக் காப்பதையும்

ஆண்டவன் பூசை பெறுவதையும் அறிவிப்பேன்;


எங்கே இருந்தாலும் எப்பணி செய்தாலும்

அங்கே இருந்தபடி வழிபடநான் ஒலிசெய்வேன்;


கேட்டவுடன் கைகூப்பி வணங்குவோ ரிருக்கின்றார்;

கேட்டாலும் கேட்காத மானிடரும் இருக்கின்றார்;


ஆண்டவனிடம் கேட்கின்றேன்!

எல்லாமாய் இருப்பவனே! எங்கும் திகழ்பவனே!

எல்லார்க்கும் மூச்சாய் இழையோடித் திரிபவனே!


என்னோசை கேட்டவுடன் உன்வாசல் தனைநாடி

மண்மீதில் பக்தியுள்ள மாந்தர் வருகின்றார்;


வருகின்ற மக்களைநான் படிக்கின்றேன்; அவர்க்குநலம்

தருகின்ற நீயவரின் தராதரம் பார்த்தாயா?


வேற்றுமைகள் கண்டுநெஞ்சம் வேகிறது; துன்பத்திற்(கு)

ஆற்றாமல் நாவசைப்பேன்; ஆலய மணியொலிக்கும்;


அய்யா எனக்கதறும் அவரை உதைத்துவிட்டுப்

பய்யவே வந்துசெய்வார் பாலாபி ஷேகங்கள்;


செல்வத்தாற் குளிப்பாட்டிச் செல்வாக்கால் விசிறிவிட்டுன்

நல்லருளை நாடிப் பலபேர் வருகின்றார்;


பட்டாடை மேனிப் பளபளப்பில் உன்பார்வை

கெட்டா போய்விடும்? கண்திறந்து பார்த்தாயா?


நடக்கும் நாடகங்கள் என்னெஞ்சைக் குத்திடவே

இடிப்பேன்நான் இருபக்கம்; அதுதான் மணியோசை;


கோயில் நாடிவரும் அடியவர்காள்! இறையருளின் 

வாயில் எதுவென்று மனத்தளவில் அறிவீரா?


மணியோசை கேட்டதும்கை கூப்புகிறீர்; எளியவர்கள்

மனவோசை அறியாமல் மாதேவன் அருள்வருமா?


வஞ்சத்தை விதைத்துவிட்டு அறுவடை காணுங்கால்

கெஞ்சி  யழுதாலும் கடைத்தேற வழிவருமா?


நாள்தோறும் கெட்ட வழிநடந்து மேல்போகும்

நாள்வருங் காலத்தில் நைந்தழுதால் நலம்வருமா?


உலகத்தைக் கண்டுங்கள் உளக்கோணல் தாங்காமல்

பலவகையில் கதறுமென் மனவோசை மணியோசை.!

No comments:

Post a Comment