Thursday, October 10, 2024

இவைகள் பேசினால் --சிங்கவாகனம்

 இவைகள் பேசினால் --சிங்கவாகனம்

                    இவைகள் பேசினால்--

        சிங்கவாகனம் பராசக்தியிடம்


தாயே! பராசக்தி! தனிக்கருணை மாமழையே!

வாய்திறந் தழுவோரை வாரி யணைப்பவளே!


பெற்றவளும் நீதானே! பிள்ளைகள்யாம் பெருந்துன்பம்

உற்றக்கால் எமைத்தாங்கி உதவுவதும் நீதானே!


யாராட்சி பீடத்தில் அமர்ந்தாலும் உன்னுடைய

சீராட்சித் திறந்தானே செகமெல்லாம் காக்கிறது;


உன்னுடைய கண்மேகம் அருள்பொழிய வில்லையெனில்

மண்ணில்  உயிரெல்லாம்  வாடிக்  கருகாதா?


மண்ணைத் தாங்குகின்ற மாகாளி! பராசக்தி!

உன்னைத் தாங்குவதால் உயர்வுபெற்ற சிங்கம்நான்;


வீரத் திருக்கோலம் தாயேநீ எடுக்குங்கால்

சீரோ டுனைத்தாங்கிச் சிறப்போடு திகழ்பவன்நான்;


பாவத்தைச் சுமக்கின்ற பஞ்சைகளின் மத்தியிலே

தேவியைச் சுமப்பதனால் செம்மாந்து திரிபவன்நான்;


குள்ளநரி ஓநாய்கள் கொல்லும் புலிக்கூட்டம்

கள்ளமிலா மானினங்கள் எல்லாமென் காட்டிலுண்டு;


காட்டுக்குள் பேரரசைக் கட்டுக்குள் ஆண்டவன்நான்;

நாட்டுக்குள் உனைத்தாங்கி நாற்றிசையும் சுற்றுகிறேன்;


புதரை வீடாக்கி விலங்கினந்தான் வாழ்கிறது;

புதராக்கி வீட்டை மனிதஇனம் சாகிறது;


அன்றாடம் வருகின்ற அடியவர் செயலெல்லாம்

உன்கீழே இருக்கும்நான் ஒழிவின்றிக் காண்கின்றேன்;


சிங்கம்நான் என்நோக்கில் திசையெல்லாம் பார்க்கின்றேன்;

அசிங்கங்கள் தாமே அகமெல்லாம் தெரிகிறது;


நரிகண்டேன்; புலிகண்டேன்; நாய்கண்டேன்; உன்முன்னே

வருகின்ற கூட்டத்தில் மனிதரைத்தான் காணவில்லை;


தனக்கொருகண் போனாலும் சரிதான்; அடுத்தவன்

தனக்கிருகண் போகட்டும் என்பவர்தாம் ஏராளம்;


குப்பை நெஞ்சங்கள்; கோணல் நினைப்புகள்;

அப்பனுக்கும் அம்மைக்கும் அபிஷேகம் குறைவில்லை;


உள்ளத்தில் வஞ்சம்; உதட்டசைவில் தேவியின்பேர்;

கள்ளத் தொழுகையிலே சக்தியா மயங்கிடுவாய்?


ஏமாற்ற நினைத்தே ஏமாறி நெஞ்சத்தைத்

தாமாற்ற நினைக்காமல் தடுமாற்றம் கொள்கின்றார்;


சிங்கம்நான் சிரிக்கின்றேன்; தேவியே! உன்கீழென்

அங்கங்க ளிருப்பதனால் அமைதியுட னிருக்கின்றேன்;


தப்புத் தாளம் சங்கீத மாகிறது;

தப்பாத தாளம் எங்கேயோ புதைகிறது;


தனியாக நேர்மை ஆவர்த்தனம் புரிகிறது;

இனிமை யுடன்கேட்க ஆளின்றிப் போகிறது;


நேர்மை வழிசென்ற பயணம் முறிகிறது;

நேர்மை யற்றவழிப் பயணம் தொடர்கிறது;


வஞ்சத்தை விதைக்கின்றார்; வளமைபயி ராகிறது;

நெஞ்சத்தை விற்கின்றார்; நல்லவிலை போகிறது;


வஞ்சத்தைப் பயிராக்கி வன்கொடுமை விளைத்தவர்கள்

மிஞ்சியதைக் காசாக்கி உண்டியலில் கொட்டுகின்றார்;


கொட்டி உண்டியலில் பணத்தைக் குவித்துவிட்டாற்

பட்டுப்போம் பாவமெனப் பாவம் நினைக்கின்றார்;


தள்ளும் படியளவே அவர்செய்த பாவங்கள்

தள்ளுபடி யாகுமென நம்பித் தள்ளுகின்றார்;


சிங்கம்நான் சிரிக்கின்றேன்; தேவியே! உன்கீழென்

அங்கங்க ளிருப்பதனால் அமைதியா யிருக்கின்றேன்.

               --  --

                     சிவகாசி--16--07--82 


No comments:

Post a Comment