Friday, April 27, 2012


              விந்தைத் தீ!

தொட்டாற் சுடுவது தீயெனும் உண்மையைத்
  தாரணி முழுதுமே அறிந்திருக்கும்;-இது
விட்டாற் சுடுது; தொட்டாற் குளிருது;
  மேதினி தனிலொரு விந்தைத்தீ!

பார்வைப் பொறியினில் பற்றிடு தீயிது
  பருவ வயசினில் எரியும்தீ1-அவள்
பார்வை நீரினில் அணையும் தீயிது
  பசக்கென நெஞ்சைக் கசக்கும்தீ!

நினைவில் ராகம் இசைத்திடு தீயிது
  நெஞ்சினிற் குளிக்கும் இன்பத்தீ!-இன்பக்
கனவினை நனவாய் மாற்றியே கண்ணுள்
  காட்சிகள் விரிக்குமோர் உணர்வுத்தீ!

படுக்கையை முள்ளென மாற்றும் தீயிது
  பகலிர வெல்லாம் மறக்கும்தீ!-ஒரு
நொடியினை யுகமாய் மாற்றி வதைக்கும்
  நுட்பத் தீயிது கொடுமைத்தீ!

வீரமும் சருகாய் எரிக்கும் தீயிது
  வீரனாய்க் கோழையை ஆக்கும்தீ!-எந்தச்
சாரமு மில்லாச் சக்கையைக் கூடவோர்
  சரித்திர மாக்கும் மாயத்தீ!

உணர்வு நரம்பினில் எரியும் தீயிது
  உவகைப் பண்ணினை இசைக்கும்தீ!-காதல்
உணர்வு கலந்தவள் பார்த்திடு பார்வையில்
  உள்ளம் நனைத்திடும் புதுமைத்தீ!

அவள்பிரி வதனிற் பொசுக்கிடு தீயிது
  ஆசைக் கனவாய் எரியும்தீ!-வந்தே
அவள்மடி வீழ்ந்தே அணைக்கும் அணைப்பினில்
  அணையும் தீயுளம் அணைக்கும்தீ!

பிரிவினாற் சுட்டிடு மவளே வந்தெனைப்
  பாம்பெனப் பின்னி யணைக்கட்டும்!-அந்தப்
பரிவுத் தழுவலால் எரியும் தீயினைப்
  பக்குவ மாக அணைக்கட்டும்!

Thursday, April 12, 2012

பாட்டுத் திறத்தாலே...


          பாட்டுத் திறத்தாலே

நானென்ன இந்தமண்ணில் பிறந்து சாகும்
  நால்வரிலே ஒருவனாயிங் கதுதா னில்லை;
நானெடுத்த பாட்டாலே அற்பு தங்கள்
  நடத்திவிட்டே ஓய்வேன்நான்; சுந்த ரர்தம்
தேனனைத்த பாட்டாலே முதலை யுண்ட
  சிறுவனையே மீட்டுவர முடிந்த தென்றால்
ஏனென்றன் பாட்டாலே நடந்தி டாதா?
  இறைவனவன் விந்தையினை நிகழ்த்தி டானா?

ஒருநொடியில் காட்சியெலாம் மாற வேண்டும்;
  உயர்கவிதை வரிபாடி முடிக்கு முன்னே
பெருமழையில் குப்பைகூளம் போவ தைப்போல்
  பெருந்தீமை புரிவோர்கள் அழிந்து போக
வருபவர்கள் நெஞ்செல்லாம் தூய்மை யொன்றே
  விளங்கவேண்டும்; அவராட்சி பீட மேறித்
தெருவெல்லாம் தூய்மையினை விதைக்க வேண்டும்;
  தருமத்தை நேர்மையினை நிறைக்க வேண்டும்;

சிரிப்பவனின் நெஞ்சமுமே சிரிக்க வேண்டும்;
  சிந்தனையில் முதிர்ந்தோர்கோ லோச்ச வேண்டும்;
வறுமையென்றால் என்னவென்று சிறுவ ரெல்லாம்
  வீதிவீதி யாயலைந்து தேட வேண்டும்;
தெருவெல்லாம் முளைத்திருக்கும் காவற் கூடம்
  சிந்தைகவர் படிப்பகமாய் மாற வேண்டும்;
பெருவயிறே யில்லாத காவ லர்கள்
  படிப்பகத்தில் ஆசானாய்த் திகழ வேண்டும்;

நள்ளிரவில் தனியாக அழகு நங்கை
  நகையோடு பத்திரமாய் நடக்க வேண்டும்;
அள்ளுகின்ற பாசமுடன் காவ லர்கள்
  அவளையவள் வீட்டினிலே சேர்க்க வேண்டும்;
இல்லையொரு தீமையெனக் கும்மி கொட்டி
  இளையபெண்கள் ஆசைதீர ஆட வேண்டும்;
கள்ளமனம் இல்லாமல் ஆட வர்கள்
  கைகோர்த்தே அவருடனே இணைய வேண்டும்;

இத்தனையும் என்பாட்டால் நடக்க வேண்டும்;
  என்பாட்டின் பரிசாக இவற்றை யெல்லாம்
அத்தனவன் அருளவேண்டும்; இல்லை யென்றால்
  ஆண்டாண்டு காலமாகப் பாட்டுப் பாடி
மெத்தவுமே பாராட்டு புகழ்கள் பெற்று
  விளங்குவதால் பயனென்ன? ஏதோ காற்றில்
அத்தனயும் போகாமல் நன்மை ஈய
  அத்தனைநான் வேண்டுகிறேன்; அருளு வானா?