Sunday, March 17, 2013

கீதை--சாங்கியயோகம்

             கீதை ; சாங்கிய யோகம்

அருச்சுனன் தேரில் அமர்ந்து விட்டான்;
கருத்திலே குழப்பம்; வில்லை எறிந்தான்;

கண்ணன் கூறுகிறான்;

வீரனே! பார்த்தா! வில்லை எடுநீ!
சோர்வினை அகற்று; குழப்பம் தவிர்நீ!

மறப்போர் வீரன் போர்க்களந் தன்னில்
மறந்தும் உளச்சோர் வடைதல் தகாது;

அருச்சுனன் கூறுகிறான்;

யாரைக் கொல்லநான் வில்லை எடுக்க?
யாரின் மேலென் அம்பை விடுக்க?
துரோணர், பீஷ்மர் யாரவர்? என்றன்
சீருயர் வதனில் மகிழ்ந்தவ ரன்றோ!
எப்படி அவர்தமை நானே கொல்வது?
இப்படி ஒருகளம் அமையவும் வேண்டுமோ?

கண்ணன் கூறுகிறான்;

பார்த்தா! அவரைப் பார்த்தா கலக்கம்?
சீர்த்த தன்றுநின் சிந்தைக் குழப்பம்;
போர்க்கள வீரன் கடமை போர்செயல்;
போர்செயுங் கடமையுன் பிறப்பில் வந்தது;
பின்வாங் குதலோ தடுமா றுதலோ
உன்புக ழுக்கே அழியா இழுக்கு;
கொல்வதா இவரையெனக் குழம்புகின் றாயே
கொல்வது யாரைக் கொஞ்சம் சிந்தி!
எதிரே நிற்கும் உடலையா? அன்றி
எதிரில் நிற்போர் ஆன்மா தனையா?
எதைநீ கொல்வாய்? யோசித் துப்பார்;
அதைநீ உணர்ந்தால் குழப்பம் நீங்கும்;
ஆன்மா என்றும் அழிவிலா ஒன்று;
ஆன்மா அழித்தல் யார்க்கும் இயலா;
உடலை யாநீ அழிப்பாய்? அந்த
உடலின் இயல்பே பிறந்து சாவது;
குழந்தைமை செத்து இளமை பிறக்கும்;
இளமை செத்து முதுமை பிறக்கும்;
குழந்தைமை இளமை முதுமை என்றே
அழகிய உடல்கள் கழற்றி எறிந்தே
வேறோர் உடலை ஏற்றே ஆன்மா
சீராய் வாழும்; இதுவே உண்மை;
இருப்பவை என்றும் இருப்பவை யாகும்;
இருப்பில் லாதன இருப்பதே இல்லை;
எதையும் அழிக்க எதையும் படைக்க
எதனா லேனும் உன்னால் இயலா;
செய்கநீ! செய்கநீ! சிந்தையி லென்றும்
செயற்பயன் பற்றிச் சிறிதுமெண் ணாதே!
கடமையில் தானதி கார முண்டு;
கடமைப் பலனில் அதிகார மில்லை;
பின்னர் ஏன்நீ தயங்கு கின்றாய்?
நன்றாய் ஆன்ம ஞானம் பெறுவாய்!
முக்குணங் கடந்தே இருநிலை வென்று
எக்குணச் சார்பும் இன்றி இயங்கு;
தன்னுளே தானாய்த் தனக்குள் நிறைந்தே
என்றும் நிலைக்கும் அறிவைப் பெறுவாய்;
நற்செயல் தீச்செயல் இரண்டும் துறப்பாய்;
எச்செயல் தனிலும் சிறத்தலே யோகம்;
புலன்களை உணர்ச்சி தாக்கி விடாமல்
புலன்களை ஆமைபோல் உள்ளே இழுப்பாய்!
ஐம்புலன் மனத்தை அலையச் செய்யும்;
அம்மனம் அறிவைப் பாறையில் மோதும்;
ஆசைகள் உனக்குளே அடக்கமா கட்டும்!
ஆசைகள் புதைத்தே அமைதியைப் பற்று;
அலையா நிலையே பிரம்ம நிலையாம்;
அலையா ததைநீ அடைவாய்; சிறப்பாய்;
செயலற் றெதுவும் இருப்பதே இல்லை;
செயல்புரி யாமல் பிரபஞ்ச மில்லை;
தெளிந்த அறிவுடன் செயலற் றிருப்பதும்
தெளிந்தொரு செயலைச் செய்வது போல்தான்;
செய்கநீ! செய்கநீ! சிந்தையி லென்றும்
செயற்பயன் பற்றிச் சிறிதுமெண் ணாதே!

          -வில்லிவாக்கம்-07-11-2006

No comments:

Post a Comment