வீட்டுக்குள் கணந்தோறும் மோதல்; பெண்கள்
விளையாட்டாய் நாள்தோறும் சாதல்; நெஞ்சக்
கூட்டுக்குள் அன்பில்லாக் கார ணத்தால்
கொட்டிவிட்ட நெல்லியெனச் சிதறி, ஏதோ
காட்டுக்குள் வாழ்கின்ற விலங்கி னம்போல்
கடுகடுப்பை முணுமுணுப்பை ஒருமு றைப்பை
வீட்டுக்குள் காட்டுகின்றார்; அங்கே அன்பு
விளைந்திட்டால் அதுமகிழ்ச்சிக் கூட மாகும்.
தாயொருத்தி பிள்ளையிடம் காட்டு கின்ற
தனியன்புக் கீடில்லை; தூய அந்தத்
தாயன்பே மருமகளின் மேலும் பாய்ந்தால்
தனிமகிழ்ச்சி கிட்டாதா? அவளும் இவளைத்
தாயெனவே ஏற்றுள்ளம் பிணைத்துக் கொண்டு
சரியன்பைப் பரிமாறிக் கொண்டால் அந்தத்
தூயமனை வரலாறு படைத்தி டாதா?
தனிவளங்கள் தானாகச் சேர்ந்தி டாதா?
தூயஅன்பு வீட்டுக்குள் நிலவு மானால்
தூசுகளே சேராது; கோணற் புத்தி,
மாயவலை, உள்ளத்தை மறைத்த பேச்சு,
மயக்கங்கள், தயக்கங்கள் இருக்க மாட்டா;
தூயஅன்பின் சுவைமட்டும் உணர்ந்து விட்டால்
தொல்லுலகில் வேறுசுவை தேட மாட்டோம்;
நேயமுடன் அன்புவலை விரிப்போம்; அங்கே
நிகழ்கால உயிரினங்கள் கவர்ந்து வாழ்வோம்.
சமுதாயச் சீர்கேட்டைப் பார்க்கின் றோம்நாம்;
சரிந்துவிட்ட பண்பாட்டின் கார ணத்தால்
சமுதாயம் வன்முறையால் கிழிபட் டிங்கே
சாகின்ற கொடுமையினைக் காண்கின் றோம்நாம்;
சமுதாயக் காற்றோடு தூய அன்பைத்
தவழவிட்டுச் சுவாசித்தோ மானால் இங்கே
திமுதிமெனத் தலைவீழும் செய்தி யெங்கும்
தெரியாமல் உணர்வொன்றாய் வாழ லாமே!
கண்ணப்பன் தின்றஎச்சில் அமுத மென்றே
காளத்தி நாதருமே கொண்டா ரன்றோ!
எண்ணத்தில் அன்புமிக்க கங்கை வேடன்
எடுத்தளித்த மீன்வகைகள் ஏற்றான் ராமன்;
கன்னத்தில் குழிகண்ட சபரி தந்த
காயெச்சில் நாதனுக்கே இனித்த தன்றோ!
எண்ணித்தான் பாருங்கள்; இறைவ னுக்கே
இனிப்பதெல்லாம் தூயஅன்பு ஒன்று தானே!
அன்புவலை வீச்சுக்குள் பரம்பொ ருள்தான்
அகப்பட்டு மகிழுமெனில் மண்மீ துள்ள
என்பொடுதோல் போர்த்தவர்கள் எந்த மட்டு?
யாரவர்தாம் அன்புக்குள் அகப்ப டாதார்?
எண்ணத்தில் தூயஅன்பு மட்டும் போதும்;
எண்ணியவை தானாக முடியும் கண்டீர்!
எண்ணத்தில் பொங்கட்டும் அன்பே! அந்த
இயக்கத்தில் வசப்படட்டும் பிரபஞ் சங்கள்.
No comments:
Post a Comment