கவியரங்கம்--40
எனக்குப் பிடித்தது---பணிவு
தலைவர்--புலவர் இராமமூர்த்தி
பழகிய நாட்க ளெல்லாம்
பசுமையாய் விரிந்தே நந்தம்
அழகிய மேடை வீச்சை
அந்தநாள் கவிதைப் பேச்சைக்
கலகல எனவே பேசிக்
களித்தஅக் காலப் போக்கை
அழகுடன் விரித்தே என்றன்
அகத்தினை நிறைத்து நிற்கும்.
நண்பரின் தலைமை யேற்று
நல்லதோர் அரங்கில் பாட
அன்புடன் இசைந்தேன்; இந்த
அருமையாம் தளத்தில் என்னை
நண்புடன் இறுகக் கட்டி
நெஞ்சினுள் நுழைந்த இந்த
அன்புடைக் குழுமம் என்றும்
அளவிலா மகிழ்வை ஈயும்.
புலவராம் இராம மூர்த்தி
பொழிந்திடும் கவிதை யிங்கே
பலசுவை காட்டும்; வண்ணப்
பாவகை நீட்டும்; அந்த
நிலவினைத் தொட்டு மீளும்;
நண்பரே! பணிவா யும்முன்
சிலகவி படைப்பேன்; ஏதும்
சுவையிலை யெனினுங் கொள்வீர்!
பணிவு
ஆயிரங் கதிர்க ளிந்த
அவனியை அணைக்கும்; மற்றோர்
ஆயிரங் கைகள் பூக்கள்
அலர்ந்திடச் செய்யும்; இன்னும்
ஆயிரம் வகையி லிங்கே
அருமையா யுயிர்வ ளர்க்கும்;
ஆயிரம் செய்து விட்டே
அமைதியாய்க் கதிர்தான் வீழும்.
நாற்றென இருந்த நன்செய்
நற்பயிர் பசுமை யாகிக்
கீற்றெலாம் மணிசு மந்து
கதிர்களே முற்றும் போது
வீற்றுயர் தலைதான் சற்றும்
வீங்கிடா தழகா யங்கே
ஏற்றிடு பணிவைப் பார்த்தே
என்மனம் பாடங் கற்கும்.
மண்ணுள மரங்கள் மற்றும்
மலர்ந்துள பூக்க ளெல்லாம்
மண்ணிலே பயன்கள் ஈய
மகிழ்வுடன் நிமிர்ந்து யர்ந்து
விண்ணினைப் பார்த்த பின்னர்
விளைபயன் நல்குங் காலம்
மண்ணினைப் பார்க்கும்; அந்த
மாண்பினிற் பணிவு காண்போம்
எத்துணை புகழ்வெ ளிச்சம்
இங்கெனைத் தாக்கி னாலும்,
எத்துணை பாராட் டுக்கள்
இதயமே தூக்கி னாலும்
எத்துணை பேர்கள் என்னை
இனியநீ ராட்டி னாலும்
எட்டுணைக் கனமு மென்றன்
இதயமே ஏற்கா தென்றும்.
செல்வமே என்னைச் சூழ்ந்து
திளைத்திடச் செய்த போதும்
கல்வியிற் சிறந்தோ ரென்னைக்
கட்டியே புகழ்ந்த போதும்
எல்லையில் புகழ்வெள் ளந்தான்
எனையிழுத் தேகும் போதும்
எள்முனை யளவும் கர்வம்
என்சிரம் ஏற்கா துண்மை.
பெரியவர் சிறியோ ரென்ற
பேதமே கொள்ளேன்; நட்புக்
குரியவ ரெல்லாம் இங்கே
உயர்ந்தவ ரென்றே கொள்வேன்;
வறியவன் ஏதுங் கல்லா
மனிதனே யெனினும் என்னுள்
உரியதோ ரிடம ளிப்பேன்;
உளத்தினிற் பணிவே கொள்வேன்.
கையொலி ஆர வாரம்;
கட்டிய புகழ்மு ழக்கம்;
கையினால் இழுத்தே உச்சி
காட்டிடும் மனிதர் கூட்டம்;
பையவே நுழைந்தென் நெஞ்சைப்
பற்றிட இடங்கொ டேன்நான்.
வையகம் வாழு மட்டும்
பணிவுதான் அணியாய்க் கொள்வேன்.
அடக்கமா யிருப்பின் நம்மை
அடக்கமே செய்வ ரென்னும்
துடிப்புடை நண்பர் சொற்கள்
துவண்டிடச் செய்யா தென்னை;
அடக்கமா யிருப்பேன்; மண்ணுள்
அடக்கமா யாக மாட்டேன்;
தொடக்கமும் முடிவும் எல்லாம்
தொடர்ந்திடு பணிவொன் றேயாம்.
மாவொடு பலவு மிங்கே
மற்றுள கனிக ளெல்லாம்
பூவுல கெல்லாம் சாய்ந்து
பூமியைப் பார்க்கும் போது
நாவுளே சொற்ப ழுத்த
நற்றமிழ்க் கவிவல் லார்க்கு
மேவிய பணிவு தோன்றின்
மண்ணிலே விண்தோன் றாதா?
.
No comments:
Post a Comment