Tuesday, June 24, 2014

சண்முகன் வருகை

           சண்முகன் வருகை

சண்முகாஉன் மைந்தன்நான் உன்பணிகள் தமையேற்றுப்
         பணிசெய்ய முந்திநின்றால்
   சைத்தானின் மைந்தனொரு தாக்கிலெனை எற்றுகிறான்;
         தலைகீழாய் விழுகின்றேன்;
என்மனத்தி லுனையன்றி எப்பொருட்கு மிடமின்றி
         இவ்வுலகில் வாழுகின்றேன்;
   அன்பனெனைத் துன்பத்தில் அலைக்கழிய விட்டுவேறு
         யாருக்குத் துணைநிற்பாய்?
வன்மத்தை வஞ்சகத்தை ஆயுதமாய்க் கையேந்தி
          நல்லவரை அழிப்பவர்கள்
   வாய்குழறிக் கையுதறிக் காலுதறி மண்வீழ்ந்து
          மறுகியழ வேண்டாமா?
இன்முகத்து வள்ளியினை இறங்கிவந்து மணங்கொண்ட
          இனியவனே! வருகவேநீ!
   எழில்குன்றக் குடியதனில் இலங்குமயில் மலைமீதில்
          இருப்பவனே! வருகவேநீ!

வஞ்சகந்தான் தலைவிரித்துப் பேயாட்டம் ஆடிநல்லோர்
            வாழ்க்கையைச் சிதைத்துநிற்கும்;
    வாய்முழுதும் பல்லாகிச் சூழ்ச்சியிங்கே நல்லவரை
             வகையாகக் குதறிநிற்கும்;
கொஞ்சமேனும் வெற்றியினைச் சத்தியங்கள் காண்பதில்லை;
             குப்புறவே வீழ்ந்திருக்கும்;
     குவலயத்தில் சத்தியத்தை முருகாநீ கைவிட்டால்
              காசினியே அழிந்திடாதா?
கிஞ்சித்தும் தயங்காதே! கய்வேலை நிமிர்த்திவிடு! 
              கயவரினை அழிக்கஏவு!
      கண்மூடித் திறப்பதற்குள் கயமையெங்கும் அழியட்டும்;         
              கண்களெல்லாம் சிரித்திடட்டும்.
கொஞ்சுமிள வஞ்சியினை முருகாகி மணந்தவனே!
              கோலமுடன் வருகவேநீ!
      கொள்ளையெழில் தவழ்குன்றக் குடியதனில் வாழ்சேவற்
              கொடியவனே! வருகவேநீ!

உன்னுடைய அடியவர்கள் உள்ளத்திற் கோழையாகி
                ஒடுங்கியிங்கே சுருண்டுவிட்டோம்;
       உண்மையிலே கொடுமைகள் கண்ணுக்குத் தெரிந்தாலும்
                 ஒழிப்பதில்லை மயங்கிவிட்டோம்;
என்னவகைக் காரணமோ என்றனுக்குப் புரியவில்லை
                 இழந்துவிட்டோம் தைரியத்தை;
       இருகண்கள் கொடுமையினைக் கண்டாலும் எதிர்ப்பதில்லை;
                 மனிதராய்ப் பிறந்துவிட்டோம்;
மன்னவனே! அழகான முருகாகி வந்தவனே!
                 மக்களைநீ விட்டுவிட்டால்
        மண்மீதில் வஞ்சகரே தலையைவிரித் தாடுவர்பின்
                 நல்லவரே வாழமாட்டார்;
கண்ணனைய வள்ளியினைக் கானகத்தில் கைப்பிடித்த
                 காளையே வருகவேநீ!
         கலையழகு நிலவுகுன்றக் குடியதனில் நிலவுகின்ற
                  கட்டழகே! வருகவேநீ!

ஆசையொடு சபலங்கள் அன்றாடம் எம்மனதை
                 ஆட்டிவாழ்வை அலைக்கழிக்கும்;
         ஆடுகிற பம்பரமாய் ஆசைக்க யிற்றிலெங்கள்
                  அகமெல்லாம் ஆடிநிற்கும்;
பேசுகிற பேச்சிலெலாம் பொய்மையதே கலந்திருக்கும்
                  பண்பதுவோ தொலைந்திருக்கும்;
          பக்குவமில் லாமனமோ பாரெல்லாம் பறந்துவரும்
                   பதவிகளுக் கேங்கிநிற்கும்;
வீசுகிற காற்றெல்லாம் விடக்காற்றாய் வீசயெங்கள்
                    மேனியதில் நடுநடுங்கும்;
           விளையாடுங் கொடுமையினை வேரோடு கருவறுக்க
                     வேலவனே! வேலெடுப்பாய்!
பாசமிகு பெண்ணிரண்டைப் பக்கத்தி லணைத்துவரும்
                     பண்புமலை! வருகவேநீ
            பரிவுமிகு குடியதனில் பாங்காக அமர்ந்துள்ள
                      பொன்மலையே! வருகவேநீ!!

நல்லவர்கள் யாரென்று தெரியவில்லை; இந்நாட்டு
                     நடப்பெனக்குப் புரியவில்லை;
           நடிப்பவர்க ளேகுறுக்கும் நெடுக்குமெனத் திரிவதனால்
                     நிசமுகங்கள் தோணவில்லை;
வெல்லமென மொழிபவர்கள் நெஞ்சுக்குள் வஞ்சமன்றி
                    வேறுண்மை காணவில்லை;
            விளையாடுங் களமெதுபின் வினையாகுங் களமெதென்ற
                    வேறுபாடு புரியவில்லை;;
கள்ளமதை மூலதன மெனவைப்போர் ஊதியத்தின்
                    கணக்குகளோ குறையவில்லை;
            கண்மூடிப் பொய்சொல்வோர் விண்மூடும் மாளிகைகள்
                    கட்டுவதில் குறைச்சலில்லை.
புள்ளிமயில் ஊர்பவனே! புரியவைக்க வேவிரைந்து
                     புயலாகி வருகவேநீ!
            புகழோங்கு குன்றத்தில் பொலிவோங்க விளங்குமிளம்
                     புதுவடிவே! வருகவேநீ!

வேதனைகள் உன்னடியார் தமக்குத்தான் என்றிட்டால்
                    விளைநலம்பின் யாருக்கோ?
             வஞ்சகங்கள் சத்தியத்தை வென்றிட்டால் சண்முகனே!
                     வேல்கையில் பின்னெதற்கோ?
நாதியின்றி யுனைமட்டும் நம்பிடுவோர்க் கிடர்வந்து
                     நலிவுறுத்தல் என்னநீதி?
             நல்லமனம் உள்ளவர்கள் நைவதிலும் அல்லவர்கள்
                     நிமிர்வதிலும் நியாயமென்ன?
மீதியின்றித் தீமைகளை வேரறுக்க வில்லையெனில்
                   வீரவேலுக் கதுவழகா?
             வருந்துகிற துயர்நீக்க விரைந்துவர வில்லையெனில்
                    மயிலுக்கு மதுவழகா?
மோதிவரும் இடர்நொறுக்க மின்னுகிற வேலோடு
                   மயிலேறி வருகவேநீ!
             முந்துகின்ற புகழ்குன்றக் குடியதனில் வளர்திருவே!
                    முருகவேளே! வருகவேநீ! 

குள்ளநரி பலகூடித் திட்டங்கள் தீட்டியிங்கே
                 கொடுமைகளைப் படைத்துநிற்கும்;
            கொள்ளைகள் நடத்திப்பின் பங்கீடு செய்துமனக்
                 களிப்பதனில் மிதந்துநிற்கும்;
பள்ளத்தில் நல்லவர்கள் படித்தவர்கள் புதைபட்டுப்
                 பாவமெனக் கிடப்பதுவும்
            பண்பாட்டைப் புதைத்தவர்கள் பலபாட்டி லுயர்வதுவும்
                 பலபேர்கள் போற்றுவதும் 
உள்ளத்தைக் குடைகிறதே! நியாயமா? என்றுன்னை
                 ஒருவார்த்தை கேட்கிறேன்நான்;
            உண்மையைநீ சொல்லிவிடு! நல்லவர்கள் போவதற்காம்
                  உலகத்தைக் காட்டுவாய்நீ!
புள்ளிமயில் தோகைவிரித் தாடுகின்ற மயிலாடு
                  பாறையென வருகவேநீ!
            வளர்குன்றக் குடியிலுயர் மலைமீது சிரிக்கின்ற
                  வேலவனே! வருகவேநீ!

அடியார்கள் துடிப்பதுவும் அருளாளர் நொடிப்பதுவும்
                  அழகல்ல வேல்முருகா!
            அன்றாடக் கணக்கெடுப்பில் நின்றாடி மகிழவேண்டும்
                   அகந்தூய்மை கொண்டவர்கள்;
செடியாய வல்வினைகள் தீர்க்குமொரு வேலுக்குச்
                   சிறுவினைகள் பொருட்டலவே!
             சிங்கார முருகனே!உன் மங்காத புகழடியார்
                    சிறுதுன்புங் காணலாமா?
விடியாத பொழுதுகளுன் னடியார்க்கு வரலாமா?
                    வினைத்தொடர்பு தொடரலாமா?
             வேல்தாங்கும் வேலவாஉன் னடிதாங்கும் அடியார்தம்
                     வேதனைகள் தீர்த்தருள்வாய்!
துடிப்பாக மயில்மீது தோன்றுமிளஞ் சூரியனே!
                    சுந்தரனே! வருகவேநீ!
              தோன்றுபுகழ்க் குடிதன்னில் தோற்றமிகு மலையமர்ந்த
                    தூயவனே! வருகவேநீ!
            
                                    குன்றக்குடி--30-05-88   
                 


          
                          
 


   













                 

No comments:

Post a Comment