Friday, October 3, 2014

மகனே!

               சிவகாசி--14-08-88
        கவிதைப் பட்டிமன்றம்
     ( பெற்றோர் பால் கொண்ட பிரியத்தைக்
       கடைசிவரை காப்பாற்றுபவர் மகனா? மகளா? )
           "மகனே"--அணித்தலைமை
       நடுவர்:- இளங்கம்பன்

   எனக்கிரண்டு மக்கள்; ஆணொன்று; பெண்ணொன்று;
   எனக்காசை அதன்மேலும்; அரசாங்கம் விடவில்லை.

   கண்ணிரண்டைக் காப்பதுபோல் கண்மணிகள் காத்தேன்நான்;
   பின்னவர்க்கு வாழ்க்கை பின்னமிலா தமைத்துவிட்டேன்.

   என்வீட்டில் விளக்கேற்ற மருமகள் வந்துவிட்டாள்;
   இன்னொரு வீட்டிலேற்ற என்மகள் போய்விட்டாள்.

   கண்ணிரண் டென்றேனே இப்பொழுது தானெனக்குக்
   கண்ணிரண்டின் வேறுபாடு கணக்காகப் புரிகிறது.

   கண்ணைப்போற் காத்தாலும் கருத்தெல்லாம் கொடுத்தாலும்
   என்றைக்கும் மகளென்பாள் வேறில்லம் செல்பவள்தான்.

   எந்தமக ளுமிங்கேயே இருப்பதாகச் சொல்வதில்லை;
   அந்தமகள் சொன்னாலும் அதைநாம் ஏற்பதில்லை.

   நாற்றங்கால் நாற்று நல்விளைச்சல் தருதற்குப்
   பாத்திவிட்டு வயல்நாடிப் பண்போடு செல்கிறது;

   ஏழிசையும் தன்னுள் இருத்திவைத்த வீணையின்று
   ஏழிசையை மீட்டும் எழிற்கையை அடைகிறது;

   கடலில் பிறந்தமுத்து கட்டழகுக் கணவன்
   உடலில் தவழ்வதற்கே ஓடிப்போய்ச் சேர்கிறது.

   இதுதான் சிறப்பென் றெல்லோரும் போற்றுவதால்
   அதுதான் தொடர்கிறது; ஆருமதை வெறுப்பதில்லை.

   அப்படித்தான் என்மகளும் அவள்வீடு சென்றுவிட்டாள்;
   எப்படியெல் லாம்வளர்த்தேன்? என்றெண்ணி நான்பார்ப்பேன்.

   அவளுலகம் தனியுலகம்; அவளாட்சி திகழுலகம்;
   அவள்சுற்றம் இப்போது தனிச்சுற்றம்; புதுச்சுற்றம்.

   ஒருநாள் மகள்வந்தாள்; ஓடிப்போய் வரவேற்றுத்
   திருநாள் வந்ததுபோல் கொண்டாடித் தீர்த்தேன்நான்.

   மறுநாளே புறப்பட்டாள்; வாட்டமுடன் "மகளேநீ
   இருப்பாய் சிலநாட்கள்; என்னுள்ளம் மகிழுமென்றேன்.

   அதற்கவள் என்னசொன்னாள் அறிவீரா? "அப்பாநான்
   இதற்குமேல் முடியாது; என்வீட்டில் பலவேலை".

   என்றாள்; நானவளை ஏக்க முடன்பார்த்தேன்.
   அன்றிருந்த அவள்தானா? இல்லையிது ரசவாதம்.

   என்னுடன் உணவுண்ணும் நேரத்தும் அவள்கணவன்
   உண்பானா? மாட்டானா? என்றே கலங்குகிறாள்.

   வாய்திறந்தால் கணவன் புகழே வருகிறது;
   வாய்மூடி னாலுமவள் மனமதையே நினைக்கிறது.

   இந்த வேறுபாட்டில் நான்கவலை கொள்வதில்லை.
   அந்தவேற் றுமைதானே பெண்மையின் தனிச்சிறப்பு;

   செம்புலப் பெயல்நீர் போலக் கலந்துவிட்ட
   அன்புவாழ்க்கை கண்டுள்ளம் ஆனந்தம் அடைகிறது.

   ஆனாலும் அந்த ஆனந்தப் பண்ணுக்குள்
   போனமகள் பற்றியவோர் சோகராகம் இழைகிறது.

   தங்கத் தேர்போலத் தவழ்ந்து வருமழகில்
   அங்கம் பூரித்தேன்; தேர்வீதி வேறாச்சே!

   வெள்ளிக் கொலுசணிந்து விளையாடுங் கோலத்தில்
   உள்ளம் பறிகொடுத்தேன்; ஆடுகளம் வேறாச்சே!

   கைவீசச் சொல்லியவள் கைவிரல் அசைவினிலே
   மெய்வீசி மகிழ்ந்தேன்நான்; வீசுமிடம் வேறாச்சே!

   போன இடத்தில் பிரியத்தைக் காட்டுவதே
   போனவட்கும் நன்மை; பெற்றவர்க்கும் நற்பெருமை.

   மகன்கதை அப்படியா? விழுந்தாலும் எழுந்தாலும்
   மகன்கை யதுதானே வாழ்க்கையின் ஊன்றுகோல்.

   தன்பெற்றோர் தன்வீடு என்றுணரும் பற்றுள்ளம்
   என்றைக்கும் மாறாது; இனியஉற வதுதானே!

   துள்ளிக் குதித்தமகன் துடிப்பொடுங்கிப் பெருஞ்சுமையை
   உள்ளத்தில் சுமக்கும் ஓவியத்தைப் பார்க்கின்றேன்.

   மருமகளைப் புண்படுத்தி மகிழுவ தாயெண்ணி
   ஒருமகனைத் திருமகனை உருக்குலையச் செய்கின்றாள்;

   அவளுக்குப் பரிவாக அவனோர் வார்த்தைசொன்னால்
   இவளுக்குப் பெருநெருப்பு இதயத்தில் மூள்கிறது.

   சொல்லை நெருப்பாக்கிச் சூடு போடுகின்றாள்;
   நல்லமகன் அதைவாங்கி நடக்கிறான் மெதுவாக;

   தாயைப் பார்ப்பானா? தாரத்தைப் பார்ப்பானா?
   சேயைப் பிடித்தசனி சென்மச் சனியாச்சு.

   மகன்பாடு பெரும்பாடு; மத்தளம் படும்பாடு.
   மகன்பாவம் அத்தனையும் மனசுக்குள் சுமக்கின்றான்.

   எல்லாச் சுமைகளையும் தாங்கும் சுமைதாங்கி;
   எல்லா இடிகளையும் வாங்கும் இடிதாங்கி.

   அத்தனையும் தாங்கி அளவற்ற பிரியத்தை
   மொத்தமெனப் பெற்றோர்பால் காட்டுபவன் மகனேதான்.

   தன்னை நம்பிவந்த தளிருக்கும் வாழ்வுவேண்டும்;
   அன்னை குரலுக்கும் ஆறுதல் தரவேண்டும்;

   ஒருகயிறு இருபுறமும் முறுக்கப் படுகிறது;
   முறுக்கு பெரிதானால் கயிறறுந்து போகாதா?

   என்றைக்கும் பெற்றோர்பால் கொண்ட பிரியத்தைக்
   குன்றாமல் காப்பவன் குடும்பத்து மகனேதான்.

   பிறந்தமண்ணில் காலூன்றிப் பெரும்பிரியம் காட்டுபவன்
   பிறந்த மகன்தான்;  போன மகளில்லை

   தாய்க்கும் மனைவிக்கும் தந்தைக்கும் தன்னுடைய
   சேய்க்கும் பிரியத்தைத் தினம்செலுத்து கிறானவன்தான்.

   மகன்கொண்ட பிரியமென்றும் மாறாது; மாறாது.
   மகனவன் மாறிவிட்டால் மகனில்லை; தந்தையில்லை.

   என்றுசொல்லி வாதத்தை இங்குவைத்து எல்லோர்க்கும்
   நன்றிசொல்லி முடிக்கின்றேன். நன்றி; வணக்கம்.

   


No comments:

Post a Comment