Monday, October 13, 2014

ச.வ.கவியரங்கம்

             சந்தவசந்தக் கவியரங்கம்

         "எங்கே போய்க்கொண்டிருக்கின்றேன்?
   
        தலைமை;- யோகியார்

   அடடா! இவரொரு யோகியா? கவிதை
      அள்ளிச் சுவைக்கும் போகியரா?--இங்கே
   அடடா! இவர்தம் தலைமையில் கவிதை
      அளித்திட உள்ளம் குதிக்கிறதே!

   நல்ல கவிதைகள் கண்டால் உடனே
      நாட்டுவார் புகழ்ச்சி மண்டபத்தை;--அதில்
   வெல்லுங் கவிஞரைக் கூட்டியே அவர்தம்
      வித்தகம் காட்டி மகிழ்ந்திடுவார்.

   அவரை நினைத்துக் கவிதை வடித்தால்
      ஆயிர மாயது பெருகிடுமே!--அணைக்கும்
   அவர்கை நினைத்தால் மகிழ்வினில் திளைத்தே
      அணுவணு வாயுளம் உருகிடுமே!

   ஏதோ புன்கவி ஒன்றை அவர்முன்
      என்கவி யெனவே படைக்கின்றேன்;--அதில்
   தீதோ நன்றோ சிந்தனை யாய்ச்சில
      செய்திகள் நெய்தே கொடுக்கின்றேன்.
              --------   -------

   எங்கே வந்தேன்? எப்படி வந்தேன்?
      எங்கே போய்க்கொண் டிருக்கின்றேன்?--முன்னர்
   எங்கே இருந்தேன்? எப்படி இருந்தேன்?
      யாரெனக் கதனை உணர்த்திடுவார்?

   நானோர் கவிஞன் என்றன் ஆசை
      எங்கெங் கோவெனை இழுக்கிறது;--அந்த
   வானும் மீனும் வட்ட நிலாவும்
      வாவென் றெனையே அழைக்கிறது.

   கற்பனை வானில் காற்றுக் குதிரையில்
      கடுகி விண்ணைத் தொடுகின்றேன்;--மண்ணில்
   நிற்பன நடப்பன என்னை இழுத்தே
      நடப்பினைக் காட்ட விழுகின்றேன்.

   சுற்றி யிருப்பவை நல்லவை யா?எனைச்
      சூழ்ந்து சிரிப்பவை தூயவையா?--என்னை
   எற்றி உதைக்கிற இடர்கள் பிறர்தாம்
      இட்டவை யா?நான் தொட்டவையா?

   நெஞ்சில் தூய்மை நிரம்பி வழிய
      நாளும் வாழத் துடிக்கின்றேன்;--இங்கே
   வஞ்சமும் சூதும் வந்து மோதிட
      வாழ்க்கையில் கணமும் வெடிக்கின்றேன்.

   நல்லவர் நலிய அல்லவர் வாழும்
      நடப்பினைக் கண்டே திகைக்கின்றேன்;--மண்ணில்
   வல்லவ ரெல்லாம் நல்லவ ரில்லா
      வகைதிறம் கண்டே மலைக்கின்றேன்.

   சிரிப்பவர் தம்மை மனதுளே இருத்திச்
      சிறந்த நண்பராய் மதிக்கின்றேன்;--அவர்
   விரித்தொரு வலையில் எனையே வீழ்த்தி
      மீண்டிடா வகையெனை மிதிக்கின்றார்.

   எங்கே வந்தேன்? எங்கே வாழ்கிறேன்?
      எங்கே போய்க்கொண் டிருக்கின்றேன்?--வாழ்வில்
   எங்கே யிதைநான் நினைக்கிறேன்? ஏதோ
      எந்திரம் போலத் திரிகின்றேன்.

   விடிகிற வானம் தெரிகிற தாவெனக்
      கீழ்வான் பார்த்தே நிற்கின்றேன்;--அது
   தொடுகிற தூரம் போலத் தெரியினும்
      தொடமுடி யாமல் தவிக்கின்றேன்.

   எங்கே வாய்மை எங்கே தூய்மை
      எங்கே செம்மை தெரிகிறதோ--நான்
   அங்கே செல்லத் துடிக்கிறேன்; ஆனால்
      அதுவோ கண்ணில் தெரியவில்லை.

   போக முடிவில் அதுவரு மா?யிலை
      யோக நிறைவில் அதுவருமா?---இல்லை
   போகமும் யோகமும் கூடிய நெறியில்
      போயின் அதுதான் எனைத்தொடுமா?

   எங்கே போய்க்கொண் டிருக்கிறே னென்பதே
      இன்னும் எனக்குப் புரியவில்லை;--மண்ணில்
   இங்கே வாழ்கிறேன்; அதுநல் வாழ்வா?
      என்பதும் எனக்குத் தெரியவில்லை.


   

No comments:

Post a Comment