Thursday, November 23, 2017

யாருமில்லா மேடையில்

      யாருமில்லா மேடையில்

யாரு மில்லா மேடையி லேநான்
   நாட்டிய மாடுகின்றேன்; -- கேட்க
யாரு மில்லா அவையினி லேநான்
   பாடல் பாடுகின்றேன்.

மலரின் அசைவை அதுதரும் மணத்தை
   நுகர  வாருமென்றேன்; -- அந்த
மலரே வாடி உதிர்ந்திடு வரையில்
   மனிதர் நெருங்கவில்லை.

தென்னையின் கீற்றுச் சலசலப் பொலியின்
   தேனிசை கேளுமென்றேன்; -- அங்கே
தென்னையின் அடியில் நிற்பவர் கூடச்
   சலசலப்  புணரவில்லை.

சாதிக ளெழுப்பும் சச்சர வொலியின்
   சத்தம்  அடக்குமென்றேன்; -- அந்தச்
சாதிகள் இரைச்சல் இன்னிசை யெனவே
   சுவைத்தலை யேகண்டேன்.

ஊழல் எனவொரு புற்றுநோய் நாட்டை
   உருக்குலைக் குதென்றேன்நான்; -- அந்த
ஊழலில் குளித்தே திளைப்பவர் என்குரல்
   உதறிடல் கண்டுநொந்தேன்.

யாரு மில்லா மேடையி லாடும்
   நாட்டியம் என்னபயன் ? – கேட்க
யாரு மில்லா அவையினி லேஎன்
   பாடலால் என்னபயன் ?


          தினமணி—கவிதைமணி—21-11-17

Wednesday, September 20, 2017

புதுமைப் பெண்

                                   புதுமைப் பெண்

புதுமைப்பெண் பேசுகின்றேன்: இங்கே நீங்கள்
   பணித்திட்ட துணிச்சலொடு வாய்தி றப்பேன்;
புதுமைப்பெண் என்றென்னைச் சொல்ல மாட்டேன்;
   புதிதென்ன வாழ்கிறதாம் எம்மி டத்தில்.
புதுமையென வேறெதையும் சொல்லற் கில்லை;
   பணிபுரிதல் புதுமையெனச் சொலலாம்; ஆனால்
எதுவரைக்கும் எம்முள்ளம் நொறுங்கு தென்ற
   எல்லையினை நினைத்தாரும் பார்ப்ப தில்லை.

பேருந்தில் நுழைந்திடவோ முடிவ தில்லை;
   பெரியநெருக் கடிதன்னைப் பயன்ப டுத்திப்
பேருந்தில் உடலூரும் பூச்சி தன்னைப்
   பொசுக்கிடவோ நெற்றிக்கண் நூறு தேவை.
பேருந்தை விட்டிறங்கித் தலையைப் பார்த்தால்
   பிசாசைப்போல் தெரிகிறது; மறுப டிக்கும்
சீருடனே தலைவாரிப் பொட்டு வைத்துத்
   தினம்பணியைத் தொடருகிறோம்; வேறென் செய்ய?

இருவருமே பணிசெய்து பொருளீட் டித்தான்
   இல்லறத்தை உருட்டுகிறோம்; காலை சென்று
இருவருமே மாலையில்தான் திரும்பு கின்றோம்;
   இதயமுள்ள ஆடவர்காள்! கொஞ்சம் இங்கே
கருதுங்கள்; களைத்தவுடல் இருவ ருக்கும்;
   கால்கைகள் ஓய்வெடுக்கக் கெஞ்சும்; ஆனால்
உருக்கமுள்ள மணவாளன் சோர்வாய்ச் சாய
   ஓடியாடி வீட்டினிலும் உழைப்ப வள்நான்.

கடுக்குங்கால் பிடித்துவிட எம்மை நீங்கள்
   கூப்பிடுதல் தவறில்லை; ஆனால் கால்கை
கடுப்பதுவும் களைப்பதுவும் இருவ ருக்கும்
   கருதுங்கால் பொதுதானே; என்றே னும்நீர்
ஒடிக்கின்ற இடுப்புவலி தீரச் சூடாய்
   ஒத்தடங்கள் தருவதற்கு நினைத்த துண்டா?
துடிப்போடு சிலசமயம் வருவீர்; ஆனால்
   தொல்லையெலாம் அங்கேதான் பிரச விக்கும்.

                        டால்மியாபுரம் – 08-09-1985




எழுப்ப வேண்டாம்

                                 எழுப்ப வேண்டாம்

துன்பங்கள் குறையவில்லை; நாட்டி லுள்ள
   துயரங்கள் குறையவில்லை; நலிவோர் கண்ணில்
இன்பங்கள் தெரிவதில்லை; ஆள்வ தற்கு
   யார்யாரோ வருகின்றார்; அவர்க்கு மட்டும்
இன்பங்கள் கூரைகளைப் பிய்த்துக் கொண்டே
   எப்படியோ சொரிகிறது; நாளு மிந்தத்
துன்பத்தைக் காணாமல் ஏழை மக்கள்
   தூங்கட்டும் அவர்களைநாம் எழுப்ப வேண்டாம்.

ஆட்சியாளர் மிகச்சிறந்த கெட்டிக் காரர்;
   அன்றாடம் சாகின்ற ஏழை மக்கள்
காட்சியிலே நன்மைகளைக் காட்டல் இந்தக்
   காலத்தில் நடப்பதில்லை எனத்தெ ரிந்தே
ஆட்சியினை ஆராய்ந்து பார்க்கா வண்ணம்
   அன்றாடம் மயக்கங்கள் கூட்டு கின்ற
மாட்சிகளைத் திறந்துவிட்டார்; மக்க ளெல்லாம்
   மயக்கத்தில் கிடக்கின்றார்; எழுப்ப வேண்டாம்.

ஆண்டவனைக் கேட்டுக்கேட் டயர்ந்து போனார்;
   ஆள்பவனைக் கும்பிட்டுத் தளர்ந்து போனார்;
பூண்டதொரு வறுமையிந்தப் பிறவி தன்னிற்
   போகாது; கண்முன்னே சுகத்தில் நீந்தும்
ஆண்டவர்கள் ஆடுகின்ற ஆட்டம் இங்கே
   அணுவளவும் குறையாதென் றுணர்ந்து நொந்து
மாண்டுவிட மனமின்றி ஏதோ ஒன்றின்
   மயக்கத்தில் மூழ்குகின்றார்; எழுப்ப வேண்டாம்.

எதிலேனும் மயங்கட்டும் தமிழர்; சொந்த
   இதயத்தை மயக்கத்தில் இழந்து விட்டே
எதையேனும் செய்கின்ற மாந்தர் கூட்டம்
   எதைச்செயவும் மாட்டாமல் மயங்கல் நன்றே.
இதயமென ஒன்றுளதே அதனை விற்றே
   இரக்கமென ஒன்றுளதே அதைய ழித்தே
எதையேனும் செய்துவிட்டுத் திணறும் மக்கள்
   இருக்கட்டும் மயக்கத்தில்; எழுப்ப வேண்டாம்.


எழுந்துவந்தால் எதையேனும் தப்பாய்ச் செய்வார்;
   இருக்கின்ற மற்றவர்கள் அதனால் சாவார்.
விழுந்துவிட்ட தறியாமல், நாட்டில் தீமை
   விளைந்துவிட்ட தறியாமல், ஊழ லெங்கும்
அழுந்திவிட்ட தறியாமல், வாக்குச் சீட்டை
   அளிக்குமுறை யறியாமல் கிடக்கும் மக்கள்
எழுந்துவந்து தவறுகளைப் புதுப்பிக் காமல்
   இருக்கட்டும் மயக்கத்தில்; எழுப்ப வேண்டாம்.

மயக்கங்கள் நீங்காத வரைக்கு மிந்த
   மாநிலத்தில் நல்லதுதான்; எழை மக்கள்
மயக்கங்கள் நீங்கியிங்கே கொதித்தெ ழுந்தால்
   மடமடெனக் கொடுமையெலாம் சரிந்தி டாதா?
மயக்குங்கள் அதனால்தான் திறந்து விட்டார்;
   மயக்கத்தில் மக்களினை ஆழ்த்தி விட்டால்
தயக்கமின்றித் தப்புக்கள் செயலா மென்னும்
   தத்துவந்தான் ஆள்வோர்க்கு வேத மாகும்.

                      மதுரை—28-03-1985