புதுமைப் பெண்
புதுமைப்பெண்
பேசுகின்றேன்: இங்கே நீங்கள்
பணித்திட்ட துணிச்சலொடு வாய்தி றப்பேன்;
புதுமைப்பெண்
என்றென்னைச் சொல்ல மாட்டேன்;
புதிதென்ன வாழ்கிறதாம் எம்மி டத்தில்.
புதுமையென
வேறெதையும் சொல்லற் கில்லை;
பணிபுரிதல் புதுமையெனச் சொலலாம்; ஆனால்
எதுவரைக்கும்
எம்முள்ளம் நொறுங்கு தென்ற
எல்லையினை நினைத்தாரும் பார்ப்ப தில்லை.
பேருந்தில்
நுழைந்திடவோ முடிவ தில்லை;
பெரியநெருக் கடிதன்னைப் பயன்ப டுத்திப்
பேருந்தில்
உடலூரும் பூச்சி தன்னைப்
பொசுக்கிடவோ நெற்றிக்கண் நூறு தேவை.
பேருந்தை
விட்டிறங்கித்
தலையைப் பார்த்தால்
பிசாசைப்போல் தெரிகிறது; மறுப டிக்கும்
சீருடனே
தலைவாரிப் பொட்டு வைத்துத்
தினம்பணியைத் தொடருகிறோம்; வேறென் செய்ய?
இருவருமே
பணிசெய்து பொருளீட் டித்தான்
இல்லறத்தை உருட்டுகிறோம்; காலை சென்று
இருவருமே
மாலையில்தான் திரும்பு கின்றோம்;
இதயமுள்ள ஆடவர்காள்! கொஞ்சம் இங்கே
கருதுங்கள்;
களைத்தவுடல் இருவ ருக்கும்;
கால்கைகள் ஓய்வெடுக்கக் கெஞ்சும்; ஆனால்
உருக்கமுள்ள
மணவாளன் சோர்வாய்ச் சாய
ஓடியாடி வீட்டினிலும் உழைப்ப வள்நான்.
கடுக்குங்கால் பிடித்துவிட
எம்மை நீங்கள்
கூப்பிடுதல் தவறில்லை; ஆனால் கால்கை
கடுப்பதுவும்
களைப்பதுவும் இருவ ருக்கும்
கருதுங்கால் பொதுதானே; என்றே னும்நீர்
ஒடிக்கின்ற
இடுப்புவலி தீரச் சூடாய்
ஒத்தடங்கள் தருவதற்கு நினைத்த துண்டா?
துடிப்போடு
சிலசமயம் வருவீர்; ஆனால்
தொல்லையெலாம் அங்கேதான் பிரச விக்கும்.
டால்மியாபுரம் – 08-09-1985
நல்ல கவிதை வாழ்த்துக்கள்,,,/
ReplyDeleteஅருமை. பெண்களின் உணர்வை உணர்த்தியுள்ளீர்.
ReplyDelete