எழுப்ப வேண்டாம்
துன்பங்கள் குறையவில்லை;
நாட்டி லுள்ள
துயரங்கள் குறையவில்லை; நலிவோர் கண்ணில்
இன்பங்கள் தெரிவதில்லை;
ஆள்வ தற்கு
யார்யாரோ வருகின்றார்; அவர்க்கு மட்டும்
இன்பங்கள் கூரைகளைப்
பிய்த்துக் கொண்டே
எப்படியோ சொரிகிறது; நாளு மிந்தத்
துன்பத்தைக் காணாமல்
ஏழை மக்கள்
தூங்கட்டும் அவர்களைநாம் எழுப்ப வேண்டாம்.
ஆட்சியாளர் மிகச்சிறந்த
கெட்டிக் காரர்;
அன்றாடம் சாகின்ற ஏழை மக்கள்
காட்சியிலே நன்மைகளைக்
காட்டல் இந்தக்
காலத்தில் நடப்பதில்லை எனத்தெ ரிந்தே
ஆட்சியினை ஆராய்ந்து
பார்க்கா வண்ணம்
அன்றாடம் மயக்கங்கள் கூட்டு கின்ற
மாட்சிகளைத் திறந்துவிட்டார்;
மக்க ளெல்லாம்
மயக்கத்தில் கிடக்கின்றார்; எழுப்ப வேண்டாம்.
ஆண்டவனைக் கேட்டுக்கேட்
டயர்ந்து போனார்;
ஆள்பவனைக் கும்பிட்டுத் தளர்ந்து போனார்;
பூண்டதொரு வறுமையிந்தப்
பிறவி தன்னிற்
போகாது; கண்முன்னே சுகத்தில் நீந்தும்
ஆண்டவர்கள் ஆடுகின்ற
ஆட்டம் இங்கே
அணுவளவும் குறையாதென் றுணர்ந்து நொந்து
மாண்டுவிட மனமின்றி
ஏதோ ஒன்றின்
மயக்கத்தில் மூழ்குகின்றார்; எழுப்ப வேண்டாம்.
எதிலேனும் மயங்கட்டும்
தமிழர்; சொந்த
இதயத்தை மயக்கத்தில் இழந்து விட்டே
எதையேனும் செய்கின்ற
மாந்தர் கூட்டம்
எதைச்செயவும் மாட்டாமல் மயங்கல் நன்றே.
இதயமென ஒன்றுளதே
அதனை விற்றே
இரக்கமென ஒன்றுளதே அதைய ழித்தே
எதையேனும் செய்துவிட்டுத்
திணறும் மக்கள்
இருக்கட்டும் மயக்கத்தில்; எழுப்ப வேண்டாம்.
எழுந்துவந்தால்
எதையேனும் தப்பாய்ச் செய்வார்;
இருக்கின்ற மற்றவர்கள் அதனால் சாவார்.
விழுந்துவிட்ட
தறியாமல், நாட்டில் தீமை
விளைந்துவிட்ட தறியாமல், ஊழ லெங்கும்
அழுந்திவிட்ட தறியாமல்,
வாக்குச் சீட்டை
அளிக்குமுறை யறியாமல் கிடக்கும் மக்கள்
எழுந்துவந்து தவறுகளைப்
புதுப்பிக் காமல்
இருக்கட்டும் மயக்கத்தில்; எழுப்ப வேண்டாம்.
மயக்கங்கள் நீங்காத
வரைக்கு மிந்த
மாநிலத்தில் நல்லதுதான்; எழை மக்கள்
மயக்கங்கள் நீங்கியிங்கே
கொதித்தெ ழுந்தால்
மடமடெனக் கொடுமையெலாம் சரிந்தி டாதா?
மயக்குங்கள் அதனால்தான்
திறந்து விட்டார்;
மயக்கத்தில் மக்களினை ஆழ்த்தி விட்டால்
தயக்கமின்றித்
தப்புக்கள் செயலா மென்னும்
தத்துவந்தான் ஆள்வோர்க்கு வேத மாகும்.
மதுரை—28-03-1985
மயக்கத்தில் மக்களினை ஆழ்த்தி விட்டால்
ReplyDeleteதயக்கமின்றித் தப்புக்கள் செயலா மென்னும்
தத்துவந்தான் ஆள்வோர்க்கு வேத மாகும்.-
உண்மை, மிக அருமை