Friday, September 27, 2019


                   ஏன் சிரித்தாய் ?
என்னைப் பார்த்தே ஏன்நீ சிரித்தாய் ?
   ஏளனப் பார்வை ஏன்நீ பார்த்தாய் ?
வண்ணக் கனவை மட்டும் தின்றே
   வாழும் கவிஞன் பாவம் என்றா ?
எண்ணச் சுழலில் நீந்தித் திளைத்தே
   இனிய பாடல் இசைப்பவன் என்றா ?
மண்ணில் வாழும் தகுதி பெறவே
   மல்லுக் கட்டும் மனிதன் என்றா ?

காலை மண்ணில் புதைத்துக் கொண்டே
   கனவில் விண்ணைச் சுற்றுவான் என்றா ?
காலை உணவிற் கிலையே யெனினும்
   கவிதையே உணவாய்க் கொள்ளுவா னென்றா ?
சாலை ஓரத் தரித்திரர் தம்மைத்
   தோளுற அணைத்துக் குலவுவா னென்றா ?
வேலை யென்பதே கவிதை படைப்பது;
    வேறெது மறியா வெள்ளறி வுணர்ந்தா?

என்னதான் எண்ணிநீ சிரித்திட் டாலும்
   என்மனம் கற்பனைச் சிறகி லேதான்
மண்ணையும் விண்ணையும் வலம்வரும் என்பேன்;
   மாறிலை; என்னுளம் கவிதை என்றே
எண்ணும்; செய்யும்; வேறு மாறாம்
   எண்ணம் எனக்கிலை; இன்னல் எனக்கிலை;
கண்ணும் கருத்தும் கவிதையே காணும்
   கனவில் வாழ்கிறேன்; நீசிரித் துக்கொள்.



Thursday, August 29, 2019


              வள்ளற் பெருமான் வழியில்………
           கவியரங்கத் தலைமை
              காரைக்குடி—14-09-1982
    வடலூர் வள்ளலார் வெள்ளிவிழா

ஆறு திருமுறையில் ஆண்டவன் திருவடிப்
பேறு பெறும்நெறியைப் பிழையின்றிக் காட்டியவர்;
உள்ளத்தை உருக்கும் ஒப்பரிய பாடலெனும்
வெள்ளத்தைப் பாய்ச்சியேநம் வேதனையை விரட்டியவர்;
வாடிய பயிர்கண்ட போதெல்லாம் வாடியவர்;
நீடிய பிணிகண்டே நெஞ்சமெலாம் துடித்தவர்;
பசியென்ற நெருப்பொன்று ஏழைகளை எரிக்குங்கால்
புசிப்பதற் குணவளித்தல் புண்ணியம் என்றவர்;
அணையாத அடுப்பை மூட்டியே வயிறெல்லாம்
நனைத்தவர்; அதன்பின்னர் ஒளியினைக் காட்டியவர்;
காவிரியும் கங்கையும் வேறுவேறு நதியெனினும்
மேவியவை சேருமிடம் மேன்மைக் கடல்தானே!
எங்கெங்கோ ஓடி எதையெதை யோதழுவிப்
பொங்கிச் சென்றாலும் புகலிடம் கடல்தானே!
ஆண்டவனை வணங்க அவரவர் மனத்துள்ளே
பூண்டநெறி பலவெனினும் போகுமிடம் ஒன்றுதானே!
அதற்குள்ளே பலபகையா? உழக்குக்குள் கிழக்குமேற்கா?
பதரான நெஞ்சங்கள் பாவத்தை விளைக்கலாமா?
என்றெல்லாம் அவ்விதயம் எண்ணிநொந்த காரணத்தால்
நின்று நிலைக்கின்ற சன்மார்க்க நெறிகண்டார்.
சன்மார்க்கம் வள்ளற் பெருமான் தருமார்க்கம்;
நன்மார்க்கம் இதைவிட்டால் நாட்டில் வேறில்லை;
அம்மார்க்கம் கைக்கொண்டால் அகமெல்லாம் வெளுப்பாகும்;
எம்மான் பேரிறைவன் இனிய அருள்கிடைக்கும்;
அந்த வழிதன்னில் அடிவைக்க எண்ணியேநான்
இந்த உலகத்தை ஏறெடுத்துப் பார்க்கின்றேன்;
எத்துணையோ சான்றோர் எடுத்தெடுத்துச் சொல்லிவைத்த
தத்துவங்கள், நெறியெல்லாம் தீண்டாமைக் காளாச்சு;
வள்ளுவனார் சொல்லாத வழிமுறையா? அதனைநாம்
உள்ளத்திற் கொண்டே ஒழுகிய தடமுண்டா?
ஆண்டாண்டு காலம் அறிவுரையை இம்மனிதப்
பூண்டுக்குச் சொல்லிப் போய்விட்டார் சான்றோர்கள்.
தப்பின்றி அந்நெறியிற் செல்பவரே இல்லாமல்
எப்போதும் நெறிமுறைகள் ஏங்கித் தவங்கிடக்கும்;
கள்ளத்தை உதறிக் கயமையை எறிந்துவிட்டே
வள்ளற் பெருமானின் வழிநாடி வாருங்கள்;
உள்ளத்தைக் குளிப்பாட்டி உண்மையெனும் நீறுபூசிப்
பள்ளத்தை விட்டேறிப் பெருமானை நாடுங்கள்!
ஆணவத்தை முழுதும் அகற்றுங்கள்! அந்த
வானவனைக் காணும் வழிஉமக்குத் தெளிவாகும்;
துள்ளலை விட்டுத் தொடங்குங்கள்; மன்றாடும்
வள்ளலைக் காணும் வாய்ப்புப் பிறந்துவரும்;
சாதி சமயமெனும் சழக்கை ஒழியுங்கள்!
சோதியைக் காணத் தூய வழிபிறக்கும்;
பொய்யை ஒழித்துவிட்டுப் புறப்படுங்கள்; மன்றாடும்
ஐயரைக் கண்டுய்ய அரிய வழிதெரியும்;
மரணமிலாப் பெருவாழ்வு வாழும் வழியொன்று
இருக்கிறது; அந்நெறியில் இதயம் புகுத்துங்கள்;
என்றழைக்கும் வள்ளற் பெருமானின் இனியகுரல்
என்றும் வாழ்விக்கும்; எப்போதும் நலமீயும்.
  


             

Thursday, July 25, 2019


                                  கல்லூரி வகுப்பறை
அழகப்பா கல்லூரிமுத்தமிழ் விழா—02—04—1981
  கல்லூரிக்குள் நாங்களும் பேசுகின்றோம்.
          வகுப்பறை

கல்லூரி வகுப்பறைநான்; கல்வி தருகின்ற
எல்லா வகுப்பறைக்கும் ஏற்ற முடையவன்நான்;
பாத்திகட்டி நீர்பாய்ச்சிப் பண்பென்ற அடியுரங்கள்
சேர்த்து வளர்த்தபயிர் சிரிக்கும் பெருங்கழனி;
கண்ணாக வளர்த்துக் கருத்தோடு பார்த்தகொடி
வண்ண மலரினங்கள் வாரித் தருந்தோட்டம்;
சொன்னால் புரியாத சிறுபிஞ்சு நெஞ்சங்கள்
எண்ணத் துணிகின்ற இளம்பருவ ஆடுகளம்;
கட்டுக்குள் ளடங்காத முரட்டுக் காளைகளைக்
கட்டிவைத்துத் தீனிதரக் கட்டிவைத்த ஒருதொழுவம்;
ஆசிரிய வள்ளல்கள் அருங்கல்வி எனும்பொருளைக்
கூசாமல் அள்ளிக் கொடுக்கின்ற நன்முற்றம்;
இந்நாட்டு மன்னர்தம் இதயத்தைப் புடம்போட்டுப்
பொன்னாக மாற்றவெனப் போட்ட உலைக்களம்.
என்பெருமை தனையெண்ணி இதயம் நிமிர்கிறது;
உண்மை நிலைகண்டென் தலைசற்றுக் குனிகிறது.
வகுப்பறை இருக்கின்றேன்; வகுப்பும் நடக்கிறது;
வகுப்பறைக் காட்சிகளோ வயிற்றெரிச்சல் தருகிறது.
ஆசிரியர்  நடத்தும்  அரிய  பாடங்கள்
பேசுகின்ற மாணவர்தம் பேச்சில் கரைகிறது;
ஆசிரியர் பேசுகிறார்; மாணவரும் பேசுகிறார்;
பேசுகிற இருபேச்சும் பின்னிக் குழைகிறது.
வாரித் தரப்பொருளை வகைவகையாய் எடுத்துவந்த
பேரா  சிரியரோ பெருமயக்கங் கொள்ளுகிறார்.
பேசாதீர்! என்றுசொல்லிப் புலம்பி ஓய்ந்துவிட்டுப்
பேசாமல் தவிக்கின்றார் பெரும்புலமைப் பேராசான்.
மணியடித்தால் விடுதலை; இருவருமே நினைக்கின்றார்.
இனிய   எதிர்காலச்  சமுதாயம்  மலர்கிறது.
வகுப்பறை இருக்கின்றேன்; வகுப்பும் நடக்கிறது;
வகுப்பறைக் காட்சிகளோ வயிற்றெரிச்சல் தருகிறது.
சிந்தனையாளர்; பேரறிஞர்; முதிர்புலவர்; எல்லோரும்
வந்துவந்து கருத்தை வாரி வழங்குகின்றார்;
சிந்தும் மணிகளையார் சீந்திப் பார்க்கின்றார்?
வந்த உடனேயே வழிபார்த்துத் துடிக்கின்றார்.
இருகாதும் அங்கே இருக்காது; அப்படியே
இருந்தாலும் திறக்காது; இருபுறமும் முடிமறைக்கும்.
திறந்துள்ள காதுவழிச் செல்பவையோ நேர்கோட்டில்
விரைந்து வெளியாகிக் காற்றோடு கலந்துவிடும்;
கேளாத காதுக்குத் தினம்சொல்லிச் சலிக்கின்ற
மேலான ஆசிரியர் மேன்மைகண்டு போற்றுகிறேன்;
வகுப்பறை இருக்கின்றேன்; வகுப்பும் நடக்கிறது;
வகுப்பறைக் காட்சிகளோ வயிற்றெரிச்சல் தருகிறது.
         _________ _________ ________



       

Monday, July 22, 2019

இளமையின் வழக்கு


                  இளமையின் வழக்குகல்வியின் மீது
             திருக்கோயிலூர்—02—05—1987
கிழடுகளாய்த் திட்டமிட்டே இளைய வர்க்குக்
     குழிதோண்டி வைக்கின்றார்; வாழ்க்கை தன்னில்
இளமையுடன் இனிமையினைக் கடந்து விட்ட
     எரிச்சலினால் தீமைசெய்ய நினைக்கின் றார்கள்;
அழகென்று கருதியிவர் திட்ட மிட்டே
      அமைத்திருக்கும் கல்விநெறி எமக்கு மோசம்;
இளையவரைப் பழிவாங்க வென்றே மூத்தோர்
     எடுத்திட்ட கொள்ளியென்றே கருது கின்றேன்.

ஆடைபற்றிக் கவலையின்றி, உடம்பில் சேரும்
     அழுக்குபற்றிக் கவலையின்றிக், காடும் மேடும்                                   ஓடியுழைத் திருந்திட்ட ஒருவ னைப்போய்
     உயர்த்துவதாய்ப் படிக்கவைத்தீர்; நடந்த தென்ன?
ஆடைபூணக் கற்றிட்டான்; அழுக்கு நீக்கும்
     அரியகலை கற்றிட்டான்; ஆனால் அந்தோ
ஓடியுழைப் பதைமட்டும் மறந்து விட்டான்;
     ஓடுகிறான்; ஓடுகிறான்; வேலை தேடி.

படித்திட்டால் பட்டமுண்டு; வேலை இல்லை;
     பாரதத்துத் தெருக்களெலாம் வேலை தேடும்
படித்தவர்கள்; தொழிற்கல்வி நிலையுங் கூடப்
     பரிதாப மாகிறது; “ யார்க்கும் காய்ச்சல்
அடிக்கிறதா?” எனவீடு வீடாய்த் தேடி
     அன்றாடம் மருத்துவர்கள் வரப்போ கின்றார்.
இடிந்தவீடு புதியவீடு பணிகள் உண்டா? “
     எனத்தேடிப் பொறியாளர் வரப்போ கின்றார்.

என்னகல்வி தருகின்றீர்? நாட்டி லிங்கே
     இருக்கின்ற சூழலுக்குள் வெற்றி காண
என்னசொல்லித் தருகின்றீர்? எம்கண் முன்னே
     எழுத்தறியாப் பேதையெலாம் உயர்ந்து வாழ்வை
வண்ணமுற அனுபவிக்க அவனி டம்போய்
     வாய்பொத்திப் பரிந்துரைகள் கேட்க வைக்கும்
அந்நிலையைத் தருவதன்றிக் கல்வி யிங்கே
     ஆக்கிவைத்த ஆக்கங்கள் என்ன? சொல்வீர்!

உண்மையிலே இளைஞரினை உயர்த்த வேண்டி
     உருவான கல்வியெனில் உலக வாழ்வில்
என்னவகை வெற்றிபெற இயலு மந்த
     இனியகல்வி தனையன்றோ கொடுக்க வேண்டும்;
வண்ணமயில் சோலைக்குள் ஆடு தற்கும்,
     வாத்தினங்கள் நீருக்குள் நீந்து தற்கும்
என்னவகைக் கால்களுள? அதனைப் போல
     இளைஞர்க்கும் அமைப்புகளைத் தரவேண் டாமா?

உண்மைக்கு மதிப்பில்லா உலகில் நீங்கள்
     உண்மைசொல்லித் தரலாமா? கொஞ்சங் கூட
எண்ணத்தில் தூய்மையில்லா உலகில் நீங்கள்
     வாய்மைசொல்லித் தரலாமா? எதிரி லுள்ளோர்
கண்ணுக்குள் வஞ்சமொன்றே வாழும் போது
     கண்ணோட்டம் சொல்லாமா? இன்றை வாழ்வில்
என்னசொல்லித் தந்திட்டால் வெற்றி காண்பான்?
     இளைஞர்க்கே அதையன்றோ தருதல் வேண்டும்!

தில்லுமுல்லுக் கொருபாடம்; பகையை வீழ்த்தும்
     சூழ்ச்சிவகைக் கொருபாடம்; கள்ளச் சந்தை
சொல்லுதற்கே ஒருபாடம்; கணக்கை மாற்றிச்
     சுருட்டுதற்கே ஒருபாடம்; தேர்தல் நின்று
வெல்லுதற்கே ஒருபாடம்; வாக்கை வாங்கும்
     வித்தைகளுக் கொருபாடம்; என்று கல்வி
சொல்லிவைத்தால் இளைஞர்கள் பிழைப்பார்; இன்று
     சொல்லுகின்ற கல்விவகை எதற்கே ஆகும்?

பட்டங்கள் பறக்கிறது; கல்வி தந்த
     பண்பெல்லாம் திகைக்கிறது; நாட்டி லுள்ள
சட்டங்கள் நடிக்கிறது; சிலபேர் கையில்
     சமுதாயம் துடிக்கிறது; இதனை மாற்றத்
தட்டுங்கள்; நொறுக்குங்கள்; சமுதா யத்தில்
     தடமொன்று புதிதாகப் போடும்! என்று
தட்டியெழுப் பிடும்வகையில் கல்வி வேண்டும்;
     தடுமாற வைக்கின்ற கல்வி வேண்டாம்.