ஏன் சிரித்தாய் ?
என்னைப்
பார்த்தே ஏன்நீ சிரித்தாய் ?
ஏளனப் பார்வை ஏன்நீ பார்த்தாய் ?
வண்ணக்
கனவை மட்டும் தின்றே
வாழும் கவிஞன் பாவம் என்றா ?
எண்ணச்
சுழலில் நீந்தித் திளைத்தே
இனிய பாடல் இசைப்பவன் என்றா ?
மண்ணில்
வாழும் தகுதி பெறவே
மல்லுக் கட்டும் மனிதன் என்றா ?
காலை
மண்ணில் புதைத்துக் கொண்டே
கனவில் விண்ணைச் சுற்றுவான் என்றா ?
காலை
உணவிற் கிலையே யெனினும்
கவிதையே உணவாய்க் கொள்ளுவா னென்றா ?
சாலை
ஓரத் தரித்திரர் தம்மைத்
தோளுற அணைத்துக் குலவுவா னென்றா ?
வேலை
யென்பதே கவிதை படைப்பது;
வேறெது மறியா வெள்ளறி வுணர்ந்தா?
என்னதான்
எண்ணிநீ சிரித்திட் டாலும்
என்மனம் கற்பனைச் சிறகி லேதான்
மண்ணையும்
விண்ணையும் வலம்வரும் என்பேன்;
மாறிலை; என்னுளம் கவிதை என்றே
எண்ணும்;
செய்யும்; வேறு மாறாம்
எண்ணம் எனக்கிலை; இன்னல் எனக்கிலை;
கண்ணும்
கருத்தும் கவிதையே காணும்
கனவில் வாழ்கிறேன்; நீசிரித் துக்கொள்.
No comments:
Post a Comment