Thursday, October 10, 2024

இன்று புதிதாய்ப் பிறந்தோம்

                              இன்று புதிதாய்ப் பிறந்தோம்


சென்றதெலாம் சென்றதென எண்ணிக் கொள்வோம்;

   செய்வனவே சிறந்தவையாய்ச் செய்வோம்; நாம்தாம்

அன்றாடம் காணுகின்ற எல்லாம், மக்கள்

   அகமகிழச் செய்கின்ற நிகழ்வாய் மாறி

வென்றிடவே காண்போம் ! அந்த வெற்றி

   விளைநிலமாய் இவ்வுலகை மாற்றி, நன்மை 

என்றைக்கும் நிற்குமொரு மண்ப டைப்போம்;

   இன்றுபுதி தாய்ப்பிறந்தோம் என்றே வாழ்வோம்.


துளிர்க்கின்ற தப்புணர்வை முளைக்கும் போதே

   திருகியெறிந் திடுவோம்நாம்; மனதுக் குள்ளே

தளிர்க்கின்ற நல்லுணர்வுக் குரமே போட்டுத்

   தன்னிகரில் இன்பத்துப் பயிர்வி ளைப்போம்.

வெளிச்சத்தில் மட்டுமல்ல இருட்டுக் குள்ளும்

   விளங்குமொரு பேரின்பம் விளையக் காண்போம்.

தளிர்க்கொடியைக் கொழுகொம்பே அணைக்கக் காண்போம்;

   தாரணியில் இன்றைக்கே பிறந்தோ மென்போம்.


நமைத்தாக்கி நோகடித்த துன்ப மெல்லாம்

   நொடிப்பொழுதில் மறைந்திடவே காண்போம்; இங்கே

நமைச்சுற்றி வாழ்வோர்க ளெல்லாம் தூய்மை

   நலங்கொழிக்கும் சான்றோராய்த் திகழக் காண்போம்;

நமையாள்வோர் நெறிபிறழா ஆட்சி செய்ய

   நல்லோர்கள் துணைநிற்கக் காண்போம்; என்றும்

நமையின்பம் தழுவிடவே காண்போம்; இந்த

   நாட்டினிலே புதிதாகப் பிறந்தோம் என்போம். 

இன்று இனிக்கவில்லை

                        இன்று இனிக்கவில்லை


அன்றைக் கினித்ததெல்லாம் இன்றைக்கும் இனிக்கிறதா ?

என்றைக்கும் இனிக்கும் இனியபொருள் இருக்கிறதா ?


காதலித்து மணந்தவன்நான்; கண்கள் மொழிபேசக்

காதலெனும் காவியத்துக் கதைத்தலைவ னாயிருந்தேன்;


காணாத பொழுதெல்லாம் வீணான பொழுதாக

நான்நொந்து கிடப்பேன்; நிமிடங்கள் யுகமாகும்;


கண்ணில் அவள்தெரிய எண்ணம் சிறகடிக்கும்;

விண்ணில் பறப்போம்; வெண்ணிலவில் சோறுண்போம்;


விண்மீனைக் கோர்த்தெடுத்து மின்னற் கொடிதொடுத்துக்

கண்மணி  யவளுக்குக் கண்ணாரச் சூட்டுவேன்நான்;


பஞ்சுக் கையிரண்டால் பரிவுட னெனையணைத்துக்

கொஞ்சி மகிழ்ந்திடுவாள்; கொஞ்சமும் எனைப்பிரியாள்.


அப்படி யெம்வாழ்க்கை அன்றைக் கினித்தது;

இப்பொழு தப்படியா ? எப்படிச் சொல்லுவேன்நான் ?


பிள்ளைகள் பெற்றாலே இப்பிள்ளை புறம்போக்கா ?

இல்லறச் சுமைவந்தால் இவனென்ன வெளிச்சுமையா ?


என்னவோ கோளாறு; அருகில் நெருங்கினாலே

கண்ணோ சுடுகிறது;  கையோ உதைக்கிறது.


அன்றைக் கினித்ததெல்லாம் இன்றைக் கினிக்கவில்லை;

என்றைக்கும்  இனிக்கும்  இனியபொருள் இருக்கிறதா ?

இறைவனைக் கேட்டேன்

        இறைவனைக் கேட்டேன்.

இறைவனைக் கேட்டேன் பதிலில்லை-இங்கே

இருப்பவர் பதிலும் சரியில்லை


நல்லவர் வாழ்க்கை நலிகிறதே-நாளூம்

நடப்பினில் துன்பம் நிறைகிறதே

அல்லவர் வாழ்க்கை உயர்கிறதே-இந்த

அமைப்பெலாம் உன்றன் செயல்தானா?    (இறை)


வஞ்சகம் கைகொட்டிச் சிரிக்கிறதே-நல்ல

வாய்மையும் தூய்மையும் சரிகிறதே

சஞ்சலம் அறத்தையே சூழ்கிறதே-இந்தச்

சூழலைப் படைத்தவன் நீதானா?           (இறை)


நல்லன செய்யத் துடித்திருப்பான்-அவன்

நலிந்து கிடக்கிறான் அடித்தளத்தில்

அல்லன செய்பவன் மேல்தளத்தில்-இந்த

அடித்தளம் மேல்தளம் சரிதானா ?                   (இறை)


கள்ளியில் முல்லைகள் பூப்பதில்லை-எந்தக்

கானலும் தாகமே தீர்ப்பதில்லை

கள்ளமே அரியணை அமர்கிறதே-இந்தக்

காட்சி அமைப்பெலாம் சரிதானா ?            (இறை)


காக்கை மயிலென ஆவதில்லை-எந்தக்

காலமும் தோகையை விரிப்பதில்லை

சேர்க்கையில் காக்கை சிறக்கிறதே-இந்தச்

செப்பிடு வித்தைகள் சரிதானா ?                (இறை)


நீதியும் நேர்மையும் சாகிறதே-தூய

நெஞ்சங்கள் தீயினில் வேகிறதே

சாதிகள் சிறகினை விரிக்கிறதே-இந்தச்

சந்தையில் அறங்களே விலைபெறுமா?        (இறை)


கீதையை ஏனடா சொல்லிவைத்தாய்?-எந்தக்

கிறுக்கனும் அதன்வழி நடப்பதில்லை

போதையின் நெறிபுகும் மக்களுக்கே-உன்றன்

கீதையின் போதனை சுகம்தருமா?              (இறை)


யாரடா அறநெறி தொடர்ந்திடுவார்? இங்கே

யாரடா நாளுமே இடர்ப்படுவார்?

பாரடா கவுரவர் சிரிப்பதனை-அந்தப்

பாண்டவர் கைகளை நெரிப்பதனை


சங்கெடுத் தூதடா சமர்வரட்டும்-அந்தச்

சமரினில் முடிவொன்று தான்வரட்டும்

இங்கெடுத் தெறியடா சக்கரத்தைத்-தீமை

இலையென அழித்துவிட் டதுவரட்டும்…


இறைவனுக்குகந்தது

                  இறைவனுக்குகந்தது

              --தமிழில் வழிபாடு--


மண்ணுலக ஆசை மயக்கத்தில் தடுமாறி

கண்கெட்ட பின்னேயென் கடைவாசல் வருகின்றீர்;


செய்யும் பாவத்தைத் தொகைதொகையாய்ச் செய்துவிட்டே

உய்யும் வழிநாடி  ஓடியென்முன்  வருகின்றீர்;


நடமாடும் மனிதர்தம் நரிச்செயலில் மிகநொந்து

படமாடும் பரமனென்முன் பணிவாக நிற்கின்றீர்;


விதைத்தவை அறுக்குங்கால் வேதனை தாங்காமல்

வதைநீக்க வேண்டி வாய்திறந்து புலம்புகின்றீர்;


வாருங்கள்; புலம்புங்கள்; வருந்தி உருகுங்கள்;

பாருங்கள் பசிதீரப்  பரமன் திருமுகத்தை;


நீங்கள் வருவதுவும் நின்றே உருகுவதும்

தேங்காய் பழங்கொண்டு வழிபாடு செய்வதுவும்


கண்டு மகிழ்கின்றேன்; கண்ணிலருள் கூட்டிக்

கொண்டணைத்து மகிழ்வித்துக் குளிரக் காத்துள்ளேன்;


உள்ளங் கரைந்தோடி ஒப்பரிய என்பாதங்

கொள்ள வேண்டுமெனில் கனிவுவர வேண்டாமா?


உங்கள் நினைப்பும் உளங்கனிந்த வேண்டுதலும்

தங்கு தடையின்றித் தாவிவர வேண்டாமா?


நினைப்பை வெளிக்காட்ட மொழிதடை யாயிருந்தால்

நினைப்புத்தா னெப்போதென் நேர்முகத்தை எட்டுவது?


தமிழ்நாட்டில் தமிழ்பேசும் நீங்கள் வழிபாட்டைத்

தமிழிலே செய்தால்தான் சிந்தை வெளியாகும்;


தூய திருமேனி; தொண்டிற் கனிந்தவுடல்;

வாய்மை கொப்புளிக்கும் வண்மைத் திருப்பாட்டு;


உழவாரப் படையேந்தி ஒப்பரிய தொண்டுகளை

அழகாகச் செய்தவராம் அப்பர் மொழியென்ன?


நெருப்பறையில் வைத்தே வேகவைத்த காலத்தும்

விருப்புடனே தமிழ்பாடி வெப்பத்தை வென்றாரே!


நீற்றறையைத் தென்றலென நிகழ்த்திக் காட்டியதும்

மாற்றரிய கல்புணையாய் மாகடலைக் கடந்ததுவும்


அண்டிவந்த யானை அப்பரை மிதிக்காமல்

மண்டியிட்டு வணங்கி மறுவழியிற் போனதுவும்


நஞ்சும் அமுதாகி நல்லுயிர் காத்ததுவும்

செஞ்சொல்லா லான தமிழ்ப்பாட்டின் திறந்தானே!


நொந்தஉள்ளம் கடைத்தேற நெஞ்சார வணங்கும்நீர்

செந்தமிழில் வழிபாடு செய்தே உய்யுங்கள்;


என்தோழன் ஆரூரன் எப்போதும் என்னை

அன்போடு அழைத்தே அதிகவேலை வாங்கினானே!


தெருவிலே தூதாகச் சென்றேனே! அவனுள்ளம்

வருந்தாமல் துணைசேர்த்து வாழ்வின்பங் கூட்டினேனே!


எல்லாம் எதற்காக?  இனிமையாய் அவனிடத்தில்

உள்ள தமிழ்கேட்கும் ஒப்பரிய  ஆர்வந்தான்;


அர்ச்சனை பாட்டே!  ஆதலால் என்னைச்

சொற்றமிழ் பாடுகெனச் சுந்தரர்க்குச் சொன்னேனே!


அப்பாட்டைக் கேட்டே அகமகிழ்ந்து திளைத்தேனே!

செப்புங்கள் அப்பாட்டை என்செவி துறக்கலாமா?


தேன்மழையா யென்செவியில் தினம்பொழிந்த பாடலுக்காய்

நான்ஏங்கி நிற்கின்றேன்; நல்லதமிழ் பாடுங்கள்;


இழிபாட்டைப் போக்கவுங்கள் இதயந் திறந்திடுங்கள்;

வழிபாட்டைச் செந்தமிழில் மனமகிழச் செய்திடுங்கள்;


ஆற்றலிலா வொன்றா? அழகில் லாவொன்றா?

போற்றாம லேனிந்தப் பைந்தமிழைப் புறக்கணிப்பீர்?


மறைக்கதவம் தமிழ்ப்பாட்டால் திறந்தேனே! என்செவியாம்

இருகதவம்  தமிழுக்காய் நான்திறக்க மாட்டேனா?


அழகான தமிழ்ப்பாட்டால் வழிபாடு செய்யுங்கள்;

குழைவோடு வணங்குங்கள்; கும்பிட்டே உய்யுங்கள்;


நானப்பன்; நீர்மக்கள்; நம்மிடையே என்றென்றும்

தேனான தமிழ்மொழியே வழிபாட்டில் திகழட்டும்.


எனக்கும் இனிக்கும்; உமக்கும் புரியும்;

மனக்கவலை சருகாக மந்திரத் தமிழெரிக்கும்.


திருமுறைகள் செய்யாத விந்தையினை இவ்வுலகில்

ஒருமுறையும் பிறமொழிதான் செய்யாது; உண்மையிது.


கூடுங்கள் என்முன்னே; கூடித் தமிழ்ப்பாடல்

பாடுங்கள் என்முன்னே; பணிந்து வேண்டுங்கள்;


கூப்புங்கள் கையிரண்டை; கொட்டுங்கள் தமிழ்ப்பாட்டை;

கேட்பதற்  கேங்கும்நான் கேட்டு மகிழ்கின்றேன்.

                 திருப்புத்தூர்--31-05-82 

இளமையின் வழக்கு—கல்வியின் மீது

                   இளமையின் வழக்கு—கல்வியின் மீது

             திருக்கோயிலூர்—02—05—1987

கிழடுகளாய்த் திட்டமிட்டே இளைய வர்க்குக்

     குழிதோண்டி வைக்கின்றார்; வாழ்க்கை தன்னில்

இளமையுடன் இனிமையினைக் கடந்து விட்ட

     எரிச்சலினால் தீமைசெய்ய நினைக்கின் றார்கள்;

அழகென்று கருதியிவர் திட்ட மிட்டே

      அமைத்திருக்கும் கல்விநெறி எமக்கு மோசம்;

இளையவரைப் பழிவாங்க வென்றே மூத்தோர்

     எடுத்திட்ட கொள்ளியென்றே கருது கின்றேன்.


ஆடைபற்றிக் கவலையின்றி, உடம்பில் சேரும்

     அழுக்குபற்றிக் கவலையின்றிக், காடும் மேடும்                                   ஓடியுழைத் திருந்திட்ட ஒருவ னைப்போய்

     உயர்த்துவதாய்ப் படிக்கவைத்தீர்; நடந்த தென்ன?

ஆடைபூணக் கற்றிட்டான்; அழுக்கு நீக்கும்

     அரியகலை கற்றிட்டான்; ஆனால் அந்தோ

ஓடியுழைப் பதைமட்டும் மறந்து விட்டான்;

     ஓடுகிறான்; ஓடுகிறான்; வேலை தேடி.


படித்திட்டால் பட்டமுண்டு; வேலை இல்லை;

     பாரதத்துத் தெருக்களெலாம் வேலை தேடும்

படித்தவர்கள்; தொழிற்கல்வி நிலையுங் கூடப்

     பரிதாப மாகிறது; “ யார்க்கும் காய்ச்சல்

அடிக்கிறதா?” எனவீடு வீடாய்த் தேடி

     அன்றாடம் மருத்துவர்கள் வரப்போ கின்றார்.

“இடிந்தவீடு புதியவீடு பணிகள் உண்டா? “

     எனத்தேடிப் பொறியாளர் வரப்போ கின்றார்.


என்னகல்வி தருகின்றீர்? நாட்டி லிங்கே

     இருக்கின்ற சூழலுக்குள் வெற்றி காண 

என்னசொல்லித் தருகின்றீர்? எம்கண் முன்னே

     எழுத்தறியாப் பேதையெலாம் உயர்ந்து வாழ்வை

வண்ணமுற அனுபவிக்க அவனி டம்போய்

     வாய்பொத்திப் பரிந்துரைகள் கேட்க வைக்கும்

அந்நிலையைத் தருவதன்றிக் கல்வி யிங்கே

     ஆக்கிவைத்த ஆக்கங்கள் என்ன? சொல்வீர்!


உண்மையிலே இளைஞரினை உயர்த்த வேண்டி

     உருவான கல்வியெனில் உலக வாழ்வில்

என்னவகை வெற்றிபெற இயலு மந்த

     இனியகல்வி தனையன்றோ கொடுக்க வேண்டும்;

வண்ணமயில் சோலைக்குள் ஆடு தற்கும்,

     வாத்தினங்கள் நீருக்குள் நீந்து தற்கும்

என்னவகைக் கால்களுள? அதனைப் போல

     இளைஞர்க்கும் அமைப்புகளைத் தரவேண் டாமா?


உண்மைக்கு மதிப்பில்லா உலகில் நீங்கள்

     உண்மைசொல்லித் தரலாமா? கொஞ்சங் கூட

எண்ணத்தில் தூய்மையில்லா உலகில் நீங்கள்

     வாய்மைசொல்லித் தரலாமா? எதிரி லுள்ளோர்

கண்ணுக்குள் வஞ்சமொன்றே வாழும் போது

     கண்ணோட்டம் சொல்லாமா? இன்றை வாழ்வில்

என்னசொல்லித் தந்திட்டால் வெற்றி காண்பான்?

     இளைஞர்க்கே அதையன்றோ தருதல் வேண்டும்!


தில்லுமுல்லுக் கொருபாடம்; பகையை வீழ்த்தும்

     சூழ்ச்சிவகைக் கொருபாடம்; கள்ளச் சந்தை

சொல்லுதற்கே ஒருபாடம்; கணக்கை மாற்றிச்

     சுருட்டுதற்கே ஒருபாடம்; தேர்தல் நின்று

வெல்லுதற்கே ஒருபாடம்; வாக்கை வாங்கும்

     வித்தைகளுக் கொருபாடம்; என்று கல்வி

சொல்லிவைத்தால் இளைஞர்கள் பிழைப்பார்; இன்று

     சொல்லுகின்ற கல்விவகை எதற்கே ஆகும்?


பட்டங்கள் பறக்கிறது; கல்வி தந்த

     பண்பெல்லாம் திகைக்கிறது; நாட்டி லுள்ள

சட்டங்கள் நடிக்கிறது; சிலபேர் கையில்

     சமுதாயம் துடிக்கிறது; இதனை மாற்றத்

தட்டுங்கள்; நொறுக்குங்கள்; சமுதா யத்தில்

     தடமொன்று புதிதாகப் போடும்! என்று

தட்டியெழுப் பிடும்வகையில் கல்வி வேண்டும்;

     தடுமாற வைக்கின்ற கல்வி வேண்டாம்.   

   

இவைகள் பேசினால்--கோபுரம்

     இவைகள் பேசினால்--கோபுரம்


கோயிலில்லா ஊரினிலே யாரும் என்றும்

   குடியிருக்க வேண்டாமென் றறைந்தார் முன்னோர்;

கோயிலுக்கேன் அத்தகைய சிறப்பை ஈந்தார்?

   கோபுரத்துக் கேனந்த உயரம் தந்தார்?

வாய்தவறி வந்தசொல்லா? சொன்ன வர்தாம்

   வழிதவறிச் செல்பவரா? இல்லை; தங்கள்

வாய்திறந்தால் தெய்வத்தின் பேரு திர்க்கும்

   வாய்மையினை உடையவர்தாம் உணர்ந்து சொன்னார்;

          கோபுரம் பேசுகிறது;

உள்ளிருக்கும் முழுமுதலை வணங்கு தற்கே

   உள்நுழையும் போதினிலே கோபு ரம்போல்

உள்ளங்கள் உயரவேண்டும்; சின்னப் புத்தி

   ஒருசிறிதும் கூடாது; தூய்மை சேர்த்துக்

கள்ளமிலா நெஞ்சோடு பணிந்தால் தானே

   கடவுளருள் முழுமையாகப் பெறலாம்; அந்த

நல்லதொரு தத்துவத்தைக் காட்டு தற்கே

   நிமிர்ந்துநிற்பேன் கோபுரம்நான்; அறிந்து கொள்க!


உயர்ந்தவன்நான் அய்யமில்லை; என்மே லேதான்

   உயிரினங்கள் குடியிருக்கும்; பக்க மெல்லாம்

உயிரில்லாச் சிற்பங்கள் சிரிக்கும்; நாளும்

   உயிருள்ள வௌவாலும் புறாவும் வந்தே

அயர்வோடு குடியிருப்ப தன்றி எல்லா

   அசிங்கமுமே செய்துவைக்கும்; சினக்க மாட்டேன்;

மயக்கத்தில் கிடந்தாலும் குப்பை கூளம்

   மட்டின்றிச் சேர்த்தாலும் திட்ட மாட்டேன்.


வான்தொட்டு நிற்கின்ற தோற்றத் தாலே

   மண்தொட்டு வாழ்கின்ற மனிதர் நெஞ்சை

நான்தொட்டுப் பார்க்கின்றேன் அய்யய் யோஅந்

   நாற்றத்தை என்னசொல்வேன்? சாக்க டைக்குள்

தேன்சொட்டை வீழ்த்துதல்போல் 'இறைவா!' என்று

   தன்வாயால் உதிர்க்கின்றார்; இத்து ணையும்

ஏன்கெட்டுப் போனதென்றே எண்ணிப் பார்ப்பேன்;

   எனக்கொன்றும் புரியாமல் நெடிதாய் நிற்பேன்.


சிலசமயம் என்கீழே பலபேர் நின்று

   சதித்திட்டம் தீட்டிடுவார்; பாவம் செய்யக்

கலங்காமல் அவர்பேசும் பேச்சில் என்றன்

   கட்டுடலும் நடுங்கிவிடும்; யாரைத் தீர்க்க

அழகாகத் திட்டமிட்டுப் பேசி னாரோ

   அவர்வருவார்; எல்லோரும் அணைத்துக் கொள்வார்;

உளமொன்று செயலொன்றைக் கண்டே நான்தான்

   உதிர்த்திடுவேன் காரைகளை; வேறென் செய்ய?


நாட்டிலெங்கும் சத்தியத்தைக் காண வில்லை;

   நடப்பிலெங்கும் நேர்மையதே தெரிய வில்லை;

வீட்டிலெங்கும் அன்புக்கோ வேலை யில்லை;

   வெளியிலெங்கும் கருணைக்கோ இடமே யில்லை;

காட்டிலுள்ள விலங்கினங்கள் ஊர்க்குள் வந்து

   காலிரண்டில் நடந்துதிரி வனவே போல

நாட்டுநடப் பிருக்கிறதே! இந்த மண்ணில்

   நானுயர்ந்து நிற்பதற்கே நாணு கின்றேன்.


வாய்திறந்தால் பொய்மையன்றி வருவ தில்லை;

   மனந்திறந்த பேச்சுக்கு வழியே யில்லை;

சேய்பிறந்து வரும்போதே கையை நீட்டிச்

   சில்லரைகள் கேட்கிறது; நீதி எங்கோ

போய்மறைந்து கிடக்கிறது; நேர்மை லஞ்சப்

   புதருக்குள் மறைகிறது; இந்த மண்ணிற்

போயுயர்ந்து நான்மட்டும் நிற்ப தாலே

   புண்ணியந்தான் ஏதுமுண்டா? நாணு கின்றேன்.

             ------ காரைக்குடி 10-11-91  

இவைகள் பேசினால்---ஆலயமணி

  இவைகள் பேசினால்---ஆலயமணி 

   ஆலயமணி பேசுகிறேன்;


நாக்குடையோ னாக நானிருந்த போதிலும்

வாக்கெதுவும் இதுகாறும் வாய்திறந் துதிர்த்ததில்லை;


நாக்கில் வருபவைகள் நல்லன தருபவையாய்ப்

பார்க்காத காரணத்தால் பேச்சொழிந் திருந்தேன்நான்


பேசத் தெரிந்தவர்கள் பேச்செல்லாம் தீமையினை

வீசக் கண்டதல்லால் வேறு விளைச்சலில்லை;


நாவடக்கம் எங்குமில்லை; மாறாகப் பலபேரை

நாஅடக்கம் செய்கிறது; நடைமுறை உண்மையிது;


கேட்டால் செவிகைக்கும் கெட்டழிந்த சொற்கள்தாம்

நாட்டு மேடைகளில் நாட்டிய மிடுகிறது;


நாக்கிருந்தும் பேசாமை நல்லதென நானிருந்தேன்;

வாக்களிக்கச் சொல்லியெனை வம்பி லிழுத்துவிட்டீர்


பேச்சு வந்தவுடன் பெரியோ ரிடம்கேள்வி

வீச்செறி தல்தானே வாடிக்கைச் செயலாகும்;


என்னை உணர்ந்தவன்நான்; மண்ணை உணரவில்லை;

விண்ணை உணர்வமெனில் வெகுதொலைவு; எட்டவில்லை;


ஆறுகாலப் பூசை அன்றாடம் நடக்கிறது;

மாறுதலே இல்லாமல் மணியோசை கேட்கிறது;


என்நாக்கால் எனையேநான் அடித்துக் கொள்கின்றேன்;

மண்ணுளோர் போல மற்றவரை அடிப்பதில்லை;


ஆண்டாண்டு காலமாய் ஆலய மணியோசை

பூண்டுக்கும் புழுவுக்கும் மனிதர்க்கும் கேட்கிறது;


ஆண்டவன் இருப்பதையும் அவன்நம்மைக் காப்பதையும்

ஆண்டவன் பூசை பெறுவதையும் அறிவிப்பேன்;


எங்கே இருந்தாலும் எப்பணி செய்தாலும்

அங்கே இருந்தபடி வழிபடநான் ஒலிசெய்வேன்;


கேட்டவுடன் கைகூப்பி வணங்குவோ ரிருக்கின்றார்;

கேட்டாலும் கேட்காத மானிடரும் இருக்கின்றார்;


ஆண்டவனிடம் கேட்கின்றேன்!

எல்லாமாய் இருப்பவனே! எங்கும் திகழ்பவனே!

எல்லார்க்கும் மூச்சாய் இழையோடித் திரிபவனே!


என்னோசை கேட்டவுடன் உன்வாசல் தனைநாடி

மண்மீதில் பக்தியுள்ள மாந்தர் வருகின்றார்;


வருகின்ற மக்களைநான் படிக்கின்றேன்; அவர்க்குநலம்

தருகின்ற நீயவரின் தராதரம் பார்த்தாயா?


வேற்றுமைகள் கண்டுநெஞ்சம் வேகிறது; துன்பத்திற்(கு)

ஆற்றாமல் நாவசைப்பேன்; ஆலய மணியொலிக்கும்;


அய்யா எனக்கதறும் அவரை உதைத்துவிட்டுப்

பய்யவே வந்துசெய்வார் பாலாபி ஷேகங்கள்;


செல்வத்தாற் குளிப்பாட்டிச் செல்வாக்கால் விசிறிவிட்டுன்

நல்லருளை நாடிப் பலபேர் வருகின்றார்;


பட்டாடை மேனிப் பளபளப்பில் உன்பார்வை

கெட்டா போய்விடும்? கண்திறந்து பார்த்தாயா?


நடக்கும் நாடகங்கள் என்னெஞ்சைக் குத்திடவே

இடிப்பேன்நான் இருபக்கம்; அதுதான் மணியோசை;


கோயில் நாடிவரும் அடியவர்காள்! இறையருளின் 

வாயில் எதுவென்று மனத்தளவில் அறிவீரா?


மணியோசை கேட்டதும்கை கூப்புகிறீர்; எளியவர்கள்

மனவோசை அறியாமல் மாதேவன் அருள்வருமா?


வஞ்சத்தை விதைத்துவிட்டு அறுவடை காணுங்கால்

கெஞ்சி  யழுதாலும் கடைத்தேற வழிவருமா?


நாள்தோறும் கெட்ட வழிநடந்து மேல்போகும்

நாள்வருங் காலத்தில் நைந்தழுதால் நலம்வருமா?


உலகத்தைக் கண்டுங்கள் உளக்கோணல் தாங்காமல்

பலவகையில் கதறுமென் மனவோசை மணியோசை.!

இவைகள் பேசினால்---தீபம்

 


                          இவைகள் பேசினால்---தீபம்


திருக்கோயிற் கருவறைக்குள் தெய்வத்தோ டுறவாடி

இருக்கும்  தீபம்நான்; இதயத்தைக் காட்டுகிறேன்;


எனக்கும் வாயுண்டு; வயிறுண்டு; ஏற்றுங்கால்

கணக்காக எரிகின்ற சுடராகும் நாக்குண்டு;


என்வயிற்றில் எண்ணெயூற்றி இடுதிரியை வைத்துத்

தன்குறைகள் தீர்க்க என்முகத்தில் நெருப்புவைப்பார்


தீபம்நான் சிரிக்கின்றேன்; திரித்திரியாய் எரிகின்றேன்;

பாவம் என்னுணர்வைப் பாரில்யார் பார்க்கின்றார்?


இருட்டுக் குடியிருக்கும் இடத்தில் வேறெந்தப்

பொருட்டும் இறைவன் புலப்படவே மாட்டான்;


திருக்கோயிற் கருவறையின் தெய்வத்தை வணங்குங்கால்

இருக்கின்ற இருட்டைப் போக்கவே நானெரிவேன்;


நானளித்த ஒளியால் நல்லறையின் இருட்டுப்

போனதென்ன வோஉண்மை; பக்தர் நிலையென்ன?


இதயமே இன்றித்தான் பலபேர் வருகின்றார்;

இதயமெலாம் இருட்டாக மீதிப்பேர் வருகின்றார்;


அய்யோ எனஅலறி என்நாவை ஆட்டுகின்றேன்;

பய்யவே காற்றில்நான் ஆடுவதாய் நினைக்கின்றார்;


கோயிலுக் குள்ளேனும் குப்பைகளை அகற்றிவிட்டுத்

தூய்மை யுளத்தோடு தொழுதல் கூடாதா?


உள்ளத்துக் குப்பைகளை ஒன்றாகக் கொண்டுவந்து

கள்ளத் துடன்தொழுதால் கடவுள் மகிழ்வாரா?


தீபம்நான் சிரிக்கின்றேன்; திரித்திரியாய் எரிகின்றேன்;

பாவம் என்னுணர்வைப் பாரில்யார் பார்க்கின்றார்?


எனக்குள்ளும் சாதிவகுப் பிருக்கிறது; அதனாலே

பிணக்குகள் வருவதில்லை; போராட்டம் நடப்பதில்லை;


குத்துவிளக் காய்நிற்பேன்; கோலஎழிற் சரவிளக்காய்ச்

சத்தமின்றித் தொங்கிடுவேன்; சின்னத் தீபமாவேன்;


பஞ்சமுக விளக்காவேன்; பரமனையே நோக்கிநின்று

அஞ்சுபுலன் தனையடக்கி யாள்கவெனக் காட்டிநிற்பேன்;


முகம்பலவே கொண்டும்நான் ஒருமுகமே காட்டுகின்றேன்;

முகமொன்றைக் கொண்டவரோ பலமுகங்கள் காட்டுகின்றார்;

             (வேறு)

இறைவனொடு மிகஅருகில் நாளும் உள்ள

   என்னெஞ்சம் அவனிடமோர் வரமே கேட்கும்;

குறைநெஞ்சம்; கொள்ளிமனம்; கெடுதல் செய்யக்

   குதிக்கின்ற பாவியுள்ளம்; இவற்றை யிங்கே

இறைவன்முன் பலரறியச் சுட்டிக் காட்ட

   எனக்காற்றல் தரச்சொல்லி வேண்டு வேன்நான்;

தரங்கெட்ட பாவிகளின் கையால் என்றன்

   திரியெரிதல் என்னாலே தாங்க வில்லை;


கோயிலுக்குள் மந்திரத்தைச் சொல்லு கின்ற

   குருக்களுளங் கூடஅங்கே இணைவ தில்லை;

வாயசைந்து மந்திரங்கள் சிந்தும்; அந்த

   மனிதரவர் சிந்தனையோ வெளியே மேயும்;

வாயிங்கே எனஅழைத்தே நாவ சைப்பேன்;

   வழிபாட்டில் என்னசைவை யார்தான் பார்ப்பார்?

தீயணைந்து போகாமல் எண்ணெ யோடு

   திரிசேர்ப்பார்; என்னுள்ளங் காண மாட்டார்;


என்வயிற்றில் எண்ணெயினைத் தாங்கிக் கொள்வேன்;

   இடுதிரியை நாவாக நீட்டி வைத்தே

என்நாவின் நுனியினிலே தீயை வைக்க

   எரிகின்றேன்; என்வயிறோ எரிவ தில்லை;

என்கண்முன் சிலபேர்கள் வந்து நிற்பார்;

   இனிமையொடு திரியாகும் நாவு கொஞ்சும்;

எண்ணெயின்றி அவர்வயிறோ எரியும்; நாட்டில்

   இந்தவொரு கண்றாவிக் கென்ன செய்வேன்?

              -திருக்கோயிலூர்---01-05-82

இவைகள் பேசினால் --சிங்கவாகனம்

 இவைகள் பேசினால் --சிங்கவாகனம்

                    இவைகள் பேசினால்--

        சிங்கவாகனம் பராசக்தியிடம்


தாயே! பராசக்தி! தனிக்கருணை மாமழையே!

வாய்திறந் தழுவோரை வாரி யணைப்பவளே!


பெற்றவளும் நீதானே! பிள்ளைகள்யாம் பெருந்துன்பம்

உற்றக்கால் எமைத்தாங்கி உதவுவதும் நீதானே!


யாராட்சி பீடத்தில் அமர்ந்தாலும் உன்னுடைய

சீராட்சித் திறந்தானே செகமெல்லாம் காக்கிறது;


உன்னுடைய கண்மேகம் அருள்பொழிய வில்லையெனில்

மண்ணில்  உயிரெல்லாம்  வாடிக்  கருகாதா?


மண்ணைத் தாங்குகின்ற மாகாளி! பராசக்தி!

உன்னைத் தாங்குவதால் உயர்வுபெற்ற சிங்கம்நான்;


வீரத் திருக்கோலம் தாயேநீ எடுக்குங்கால்

சீரோ டுனைத்தாங்கிச் சிறப்போடு திகழ்பவன்நான்;


பாவத்தைச் சுமக்கின்ற பஞ்சைகளின் மத்தியிலே

தேவியைச் சுமப்பதனால் செம்மாந்து திரிபவன்நான்;


குள்ளநரி ஓநாய்கள் கொல்லும் புலிக்கூட்டம்

கள்ளமிலா மானினங்கள் எல்லாமென் காட்டிலுண்டு;


காட்டுக்குள் பேரரசைக் கட்டுக்குள் ஆண்டவன்நான்;

நாட்டுக்குள் உனைத்தாங்கி நாற்றிசையும் சுற்றுகிறேன்;


புதரை வீடாக்கி விலங்கினந்தான் வாழ்கிறது;

புதராக்கி வீட்டை மனிதஇனம் சாகிறது;


அன்றாடம் வருகின்ற அடியவர் செயலெல்லாம்

உன்கீழே இருக்கும்நான் ஒழிவின்றிக் காண்கின்றேன்;


சிங்கம்நான் என்நோக்கில் திசையெல்லாம் பார்க்கின்றேன்;

அசிங்கங்கள் தாமே அகமெல்லாம் தெரிகிறது;


நரிகண்டேன்; புலிகண்டேன்; நாய்கண்டேன்; உன்முன்னே

வருகின்ற கூட்டத்தில் மனிதரைத்தான் காணவில்லை;


தனக்கொருகண் போனாலும் சரிதான்; அடுத்தவன்

தனக்கிருகண் போகட்டும் என்பவர்தாம் ஏராளம்;


குப்பை நெஞ்சங்கள்; கோணல் நினைப்புகள்;

அப்பனுக்கும் அம்மைக்கும் அபிஷேகம் குறைவில்லை;


உள்ளத்தில் வஞ்சம்; உதட்டசைவில் தேவியின்பேர்;

கள்ளத் தொழுகையிலே சக்தியா மயங்கிடுவாய்?


ஏமாற்ற நினைத்தே ஏமாறி நெஞ்சத்தைத்

தாமாற்ற நினைக்காமல் தடுமாற்றம் கொள்கின்றார்;


சிங்கம்நான் சிரிக்கின்றேன்; தேவியே! உன்கீழென்

அங்கங்க ளிருப்பதனால் அமைதியுட னிருக்கின்றேன்;


தப்புத் தாளம் சங்கீத மாகிறது;

தப்பாத தாளம் எங்கேயோ புதைகிறது;


தனியாக நேர்மை ஆவர்த்தனம் புரிகிறது;

இனிமை யுடன்கேட்க ஆளின்றிப் போகிறது;


நேர்மை வழிசென்ற பயணம் முறிகிறது;

நேர்மை யற்றவழிப் பயணம் தொடர்கிறது;


வஞ்சத்தை விதைக்கின்றார்; வளமைபயி ராகிறது;

நெஞ்சத்தை விற்கின்றார்; நல்லவிலை போகிறது;


வஞ்சத்தைப் பயிராக்கி வன்கொடுமை விளைத்தவர்கள்

மிஞ்சியதைக் காசாக்கி உண்டியலில் கொட்டுகின்றார்;


கொட்டி உண்டியலில் பணத்தைக் குவித்துவிட்டாற்

பட்டுப்போம் பாவமெனப் பாவம் நினைக்கின்றார்;


தள்ளும் படியளவே அவர்செய்த பாவங்கள்

தள்ளுபடி யாகுமென நம்பித் தள்ளுகின்றார்;


சிங்கம்நான் சிரிக்கின்றேன்; தேவியே! உன்கீழென்

அங்கங்க ளிருப்பதனால் அமைதியா யிருக்கின்றேன்.

               --  --

                     சிவகாசி--16--07--82 


இவைகள் பேசினால்----திருநீறு

        இவைகள் பேசினால்----திருநீறு

திருநீறு பேசுகின்றேன்; தெளிவாகச் சொன்னால்வெண்

சிறுபொடியன் பேசுகின்றேன்; சிந்தை திறக்கின்றேன்;

என்னைப் பூசுகின்றார்; இறைவனிடம் பேசுகின்றார்;

கண்ணைக் குவிக்கின்றார்; காரியமெல் லாம்சரிதான்

நெற்றியை வெளுப்பாக்கத் திருநீறு பூசியவர்

சற்றேனும் உள்ளத்தை வெளுப்பாக்க வேண்டாமா?

நெற்றியி லுள்ளநான் நெஞ்சினுக் குள்பார்த்தால்

பற்றி எரிகிறது; பாவந்தான் தெரிகிறது;

சாண மெனப்பிறந்து சுடுநெருப்பில் தவம்செய்து

மோன வழிகாட்டும் திருநீறாய் உயர்ந்தவன்நான்;

மந்திர மாவேன்; மாமருந்தும் நானாவேன்;

சுந்தர மாவேன்; தோற்றப் பொலிவாவேன்;

பொன்வைத்துக் காலடியில் பொருள்குவித்து நின்றாலும்

என்னைத்தான் அதற்கீடாய்ப் பிரசாத மெனவீவார்;

தொட்டெடுத்து என்னைத் துளித்துளியாய் வீசுங்கால்

நட்டுவனா ராகஅந்தக் குருக்களும் மாறுகின்றார்;

என்னை யிவர்போடக் காசை யவர்போடப்

பண்டமாற்று நடக்கிறது; பக்திமாற்றுக் காணவில்லை;

மறுபடியும் வேக மனம்விரைந்து துடிக்கிறது;

பிறந்தஇடப் பெருமை பளிச்செனத் தெரிகிறது;

நீர்கழித்த பொருளை நல்லுணவாய்க் கொண்டுதினம்

நீர்கொழுக்கப் பாலீயும் நற்பசுவே பிறந்தஇடம்;

பசுக்கழித்த பொருள்நான்; பக்குவமாய் வெந்தபின்னே

விசுக்கென்று நீரணியும் வெண்ணீறா யாகிவிட்டேன்;

என்னை அணியும்நீர் என்தாயின் பெரும்பண்பு

தன்னை உணர்ந்தால் தாரணி உயராதா?

உமக்கோ விருப்பமில்லை; இருந்தாலும் நேரமில்லை;

நமக்கென்ன வென்றே நானும் கிடக்கின்றேன்;

இல்லாத இடமில்லை; இயங்காத துறையில்லை;

நல்லார்கள் பொல்லார்கள் வேறுபா டெனக்கில்லை;

புருவ நெரிப்பினிலே புரிந்துவிடும் மனமென்றே

புருவத்தின் மேற்பட்டை அடிப்பார் சிலபேர்கள்;

நல்லவர்கள் விதிவிலக்கு; நானவரைச் சொல்லவில்லை;

பொல்லாதார் வேடம் புனைவதையே சொல்லுகிறேன்;

வேடங்கள் போடுங்கள்; வித்தைகள் காட்டுங்கள்;

மூடி மறைத்தொழுக நான்தா னாகிடைத்தேன்?

என்னை எடுத்தணிந்து ஏதேதோ செய்துநெஞ்சைப்

புண்ணாக்கிப் போடாதீர்! பாவமெனை விட்டிடுங்கள் !

மருத்துவர்க்கும் எட்டாமல் மாயவித்தை காட்டுகின்ற

பெருநோய்கள் என்பூச்சில் பறந்தோடி மறைந்ததுண்டு;

வேலுக்கு முன்னே வெம்பிணிகள் நின்றிடுமா?

வேலின் நெற்றியினில் விளங்குபவன் நான்தானே!

பரமன் பார்வையிலே பாவங்கள் தொலையாதா!

பரமன் நுதலேறிப் பொலிபவன் நான்தானே!

சூலைநோய் ஒழித்துத் திருநாவுக் கரசரையிப்

பாலழைத்துத் தந்து பணிசெய்தோன் நான்தானே

என்னைக் குழைத்தே எழில்மேனி பூசிடும்நீர்

நன்றாய் இதயத்தை வெளுப்பாக்கிப் பழகுங்கள்!

பூசுவது வெண்ணீறு; பேசுவது பாவமெனப்

பேசுகின்ற பேச்சைப் பாரினிலே ஓட்டுங்கள்!

வெண்ணீறு நெற்றியில் பொலியட்டும்! நல்ல

பண்பாடு நெஞ்சத்திற் பழுத்து முதிரட்டும்!

திருநீற்றைக் குழைக்குங்கால் சிந்தை குழையட்டும்!

இருப்போரின் நெஞ்சம் இல்லாதார்க் கிரங்கட்டும்!

நல்லனவே எண்ணட்டும்! நாளும் முடிந்தவரை

நல்லனவே செய்ய நெஞ்சங்கள் முந்தட்டும்!

----- ----

--அலவாக்கோட்டை--10--09--81


இவைகள் பேசினால் -- அபிஷேக எண்ணெய் (முருகன்)

                         இவைகள் பேசினால்---

      அபிஷேக எண்ணெய்  (முருகன்)


தொட்டாலே கைமணக்கும் தூய மேனி

   தொடஆசைப் பட்டதுண்டு; நெடுநா ளாகக்

கட்டான ஆறுமுகன் உடலைத் தீண்டும்

   காற்றாக மாறஆசைப் பட்ட துண்டு;

எட்டாத ஆசையென விட்டு விட்டேன்;

   இன்றைக்கிங் கவ்வாசை தீரப் பெற்றேன்;

இட்டமெலாந் தீருமட்டும் தழுவி வீழும்

   எண்ணெயென என்னையேநீர் மாற்றி விட்டீர்.


வள்ளிமகள் காதலுக்காய் மரமாய் நின்றான்;

   மான்தேடும் வேட்டுவனாய் அலைந்து நொந்தான்;

உள்ளத்தில் ஊற்றெடுக்கும் இளமை மூடி

   ஒருவிருத்த னாய்வடிவம் பூண்டு சென்றான்;

வள்ளிமகள் தழுவலிலே குழைந்த மேனி

   வழிகின்ற எண்ணெயென்றன் தழுவல் தன்னில்

உள்ளபடி மகிழ்ந்திடுமா? தெரிய வில்லை;

   ஒப்பரிய வகையினிலே நான்ம கிழ்ந்தேன்.


அழுக்கடையாத் திருமேனி தன்னைக் கூட

   அன்றாடங் குளிப்பாட்டுந் தத்து வத்தை

அழுக்கடையும் சிறுமேனி மனிதர் இங்கே

   அறிந்ததாகத் தெரியவில்லை; அறிந்தார் தாமும்

அழுக்கழிக்கும் விளம்பரத்துப் பொருளால் மேனி

   அலசிவிட்டு வருவாரே யல்லால் நெஞ்சின்

அழுக்கினையே போக்கிவிட்டுக் கோயில் நாடும்

   அறிவுணர்ச்சி பெற்றவராய்த் தோன்ற வில்லை.


பளபளக்கும் பட்டாடை மறைப்புக் குள்தான்

   பஞ்சமகா பாதகங்கள் குடியி ருக்கும்;

சலசலக்கும் சிறுபேச்சின் மத்தி யில்தான்

   சண்டாளத் திட்டங்கள் உருவெ டுக்கும்;

கலகலப்பாய்ச் சிரிக்கின்ற சிரிப்புக் குள்தான்

   கட்டாரி போல்வஞ்சம் மறைந்தி ருக்கும்;

நிலைகலங்கி நெஞ்சத்தை மேய விட்டு

   நேயன்முன் நிற்பதனால் பயனும் உண்டா?


வள்ளியுடன் இருந்தாலும் அவனுக் கென்ன

   வஞ்சகங்கள் புரியாதா? இன்பங் கொஞ்சும்

உள்ளமுடன் இருந்தாலும் அவனுக் கென்ன

   உள்ளங்கள் தெரியாதா? வேலின் கூர்மை

உள்ளபடி அறிந்திருந்தும் வேலன் முன்னே

   உள்ளொன்று புறமொன்றாய் நிற்கின் றாரே

வள்ளியுட னிருப்பதனால் தீமை தன்னை

   மன்னிப்பான் வள்ளலவன் எனும்நி னைப்பா?


சந்தையிலே தரங்கெட்டு நாறிப் போன

   சரக்காகி மனம்நொந்து போன நான்தான்

எந்தைபிரான் இளையமகன் மேனி தன்னில்

   இறங்கிவிளை யாடுகின்ற பொருளாய் வந்து

இந்தவொரு பிறப்பெடுத்த பயனைப் பெற்றேன்;

   எண்ணெய்நான் அவன்குளிக்கக் குளிர்ச்சி பெற்றேன்;

கந்தனவன் கேசாதி பாதம் தொட்டுக்

   கடைத்தேறி விட்டேன்நான்; மனம்நி றைந்தேன்