Saturday, February 4, 2012

வேண்டும்

                   வேண்டும்

ஒருநொடியில் காட்சியெலாம் மாற வேண்டும்;
  உயர்கவிதை வரிபாடி முடிக்கு முன்னே
பெருமழையில் குப்பையெலாம் போவ தைப்போல்
  பெருந்தீமை புரிந்தவர்கள் அழிந்து போக
வருபவர்கள் நெஞ்சமெல்லாம் தூய்மை யொன்றே
  விளங்கவேண்டும்; அவராட்சி பீட மேறித்
தெருவெல்லாம் தூய்மையினை விதைக்க வேண்டும்;
  தருமத்தை நேர்மையினை நிறைக்க வேண்டும்;

சிரிப்பவனின் நெஞ்சமுமே சிரிக்க வேண்டும்;
  சிந்தனையில் முதிர்ந்தவர்கோ லோச்ச வேண்டும்;
வறுமையென்றால் என்னவென்று சிறுவ ரெல்லாம்
  வீதிவீதி யாயலைந்து தேட வேண்டும்;
தெருவெல்லாம் முளைத்திருக்கும் காவற் கூடம்
  சிந்தைகவர் படிப்பகமாய் மாற வேண்டும்;
பெருவயிறே இல்லாத காவ லர்கள்
  படிப்பகத்தில் ஆசானாய்த் திகழ வேண்டும்;

நள்ளிரவில் தனியாக அழகு நங்கை
  நகையோடு பத்திரமாய்த் திரிய வேண்டும்;
அள்ளுகின்ற பாசமுடன் காவ லர்கள்
  அவளையவள் வீட்டினிலே சேர்க்க வேண்டும்;
இல்லையொரு தீமையெனக் கும்மி கொட்டி
  இளையபெண்கள் ஆசைதீர ஆட வேண்டும்;
கள்ள்மனம் இல்லாமல் ஆட வர்கள்
  கைகோர்த்தே அவருடனே இணைய வேண்டும்;

vinthayadi nee enakku


       விந்தையடி நீ எனக்கு!

நெஞ்சக் கவலைகள் என்னைப் பிழிகையில்
  நீயென் மடியமர்வாய் -உன்
பிஞ்சுக் கைவிரல் பட்டதும் பஞ்செனப்
  பறக்குது கவலையெல்லாம்

கண்ணொளி மங்கியென் கருத்து மயங்கையில்
  கண்மணி நீவருவாய் -உன்
கண்ணொளி என்னிரு கண்ணின் மணிகளில்
  கவினொளி ஏற்றுதடி!

தத்தி நடந்திடும் உன்னிரு கால்களில்
  துன்பம் மிதிபடுதே! -நீ
கத்தி அழுதிடும் இசையினால் சஞ்சலம்
  காற்றில் மறைந்திடுதே!

ஒருகண் சந்திரன் ஒருகண் சூரியன்
  உன்முகம் வானமடி!-அந்த
இருசுட ரிணைந்தே ஒருபொழு தொளிர்தல்
  எத்தனை விந்தையடி!

உன்னைத் தூக்கிநான் முத்த மிடுகையில்
  என்கையில் சொர்க்கமடி!-நீ
கண்ணைச் சுழற்றியே என்னைப் பார்க்கையில்
  காலடி வானமடி!

என்னவோ வித்தைகள் என்னவோ மாயங்கள்
  எல்லாம் உன்னிலடி!-என்
எண்ணம் சிந்தனை எல்லாம் இனித்திடும்
  விந்தையுன் கண்ணிலடி!

Thursday, February 2, 2012

கவிதை இன்பம்


         கவிதை இன்பம்

கற்கண்டும் மலைத்தேனும் சுவைத்துப் பார்த்தேன்
   கனிச்சாறும் நறும்பாலும் குடித்துப் பார்த்தேன்
சொற்கொண்டே எனையிழுத்துக் கட்டிப் போட்டுச்
  சுவைநல்கும் மனைவியையும் தீண்டிப் பார்த்தேன்
எற்குமனம் இனிக்கவில்லை கம்ப நாடன்
  ஏட்டினிலே நடமாட வைத்த அந்தச்
சொற்கண்டே நான்மயங்கி நின்றேன்; இன்பச்
  சுவையென்றால் அதுதானென் றடித்துச் சொல்வேன்                                                                                                                                                                                                                                                                                  

ஏதேனும் ஒருசொல்லில் நமைம யக்கும்
  இன்பத்தேன் வெள்ளமெனப் பொங்கி வீழும்
ஏதோவோர் மாந்தரினை அவன்வி ளக்கும்
  இணையற்ற கவிதைவீச்சில் பேச்சி ழந்தே
ஏதோவோர் மயக்கத்தில் ஆழ்கின் றோமே
  அதுதானே கவிதையின்பம் அதனை விட்டு
தீதேதோ தரவல்ல இன்பம் நாடித்
  திரியலாமோ? கவியின்பம் தேடு வோமே

குயில்பாட்டின் சொல்லழகும் கவிதை வீச்சும்
  குரங்கினையும் மாட்டினையும் வியந்து போற்றிக்
குயில்சொல்லும் கற்பனையும் குரங்கின் கூனைக்
  கொலுநேர்த்தி எனச்சொல்லும் அழகும் கோடை
வெயில்நடுவே குளிர்மரத்தின் நிழலின் பம்போல்
  விள்ங்கியுள்ளம் வருடிமகிழ் வளிக்கும் அந்த
மயலூட்டும் கவிதையின்பம் தானே வாழ்வில்
  வழித்துணையாய் வ்ருமின்பம் பிறவெல் லாம்வீண்













இன்னும் கொஞ்சம்


இன்னும் கொஞ்சம் என்ப தேதோ
தன்னுள் அடங்கா ஆசைபோல் தோன்றும்

அடைந்ததே போதுமென் றமைதி கொண்டால்
அடையும் முயற்சியும் அடங்கிப் போகும்

மேலே மேலே என்பதே நம்மை
மேலே பறக்கச் செய்யும் மந்திரம்

படிப்பா? இன்னும் இன்னும் படிபடி!
படிப்பதில் திருப்தி என்பதே இல்லை;

எழுத்தா? இன்னும் இன்னும் எழுது1
எழுதுதற் கென்ன பொருளா இல்லை?

முயற்சியா? மேலும் மேலும் முயல்வாய்!
முயற்சியே உன்னை மேலே நிறுத்தும்;

வானம் என்ன எட்டாப் பொருளா?
வானை நோக்கி உயரே பற!பற!

கிட்ட நெருங்கின் எட்டிப் போகும்
விட்டு விடாதே! அதுவும் வசப்படும்;

விண்மீன் கூட உன்மீ னாகும்
எண்ணம் மட்டும் உயர்வா யிருந்தால்;

முழுமதி உன்னிடம் வந்துற வாடும்
உழைப்பில் முயற்சியில் முழுமை யிருந்தால்;

இன்னும் கொஞ்சம் என்று வளர்ந்தே
விண்ணில் பிறைமதி முழுமதி யானது;

அடையும் குறிக்கோள் பெரிதா கட்டும்;
அடையும் முயற்சி உயர்வா கட்டும்;

இன்னுங் கொஞ்சம் என்பது நீயே
உண்ணும் ஊக்க மருந்தா கட்டும்;

இன்னுங் கொஞசம் எட்டி அடிவை!
மண்ணில் எல்லாம் உன்றன் அடிக்கீழ்!