Sunday, February 9, 2014

கவியரங்கம் -39

                         

     


              கவியரங்கம்--39


             தலைவர்--- இலந்தை

இலந்தைக் கனிகள் சுவைத்துச் சுவைத்தே
   இதயம் கள்வெறி கொள்கிறது --அந்த
இலந்தை என்றன் இனிய நண்பர்
   என்றே உள்ளம் குதிக்கிறது.

சந்த வசந்தம் எனுமோர் தளத்தில்
   சுவைக்கனிக் கவிதை உதிர்கிறது;--என்றும்
அந்த வசந்தக் கனியைச் சுவைத்தோர்
   அருமை உள்ளம் திமிர்கிறது.

அவர்தம் தலைமை அதிலென் கவிதை
   அடடா! என்ன பெருமகிழ்ச்சி! --இங்கே
அவரின் முன்னே எதனை இடநான்?
   அதுவும் கவிதை எனவருமா?

      சொல்லக் கொதிக்குதடா நெஞ்சம்

சொல்லக் கொதிக்கு தடாநெஞ்சம்--வெளியே
   சொல்ல நடுங்கு தடாமேனி
மெல்லத் தவழ்ந்தி டுமாநன்மை--ஓடி
   மறைந்து தொலைந்தி டுமாதீமை?

வெள்ளையன் போய்வெகு நாளாச்சு--இந்த
   மண்ணும் வளமும் நமதாச்சு;
கொள்ளை நலங்கள் கூடிவரும்--என்ற
   குடிகளின் நினைப்பே என்னாச்சு?

நோய்கள் பலப்பல பல்கிடவே--நாடு
   நோய்வாய்ப் பட்டு நலிகிறது;
நோயினைத் தீர்க்க வாக்களித்தே--நாட்டை
   நோயிட மேநாம் நல்குகிறோம்;

நோயினைத் தீர்க்க வழியில்லை--நாளும்
   நோய்நமைத் தீர்க்க வாடுகிறோம்;
வாயினைத் திறக்கவும் அஞ்சுகிறோம்--இந்த
   வாழ்வு நமக்கெலாம் ஒருகேடா?

நல்லவன் யாரெனத் தேடுகிறோம்--அந்த
   நாயகன் கண்ணிலே தெரியவில்லை;
உள்ளவர் தனிலே நல்லவரைத்--தேடி
   ஒப்படைத் திடவும் வழியில்லை;

நாட்டை உயர்த்திடத் தேர்ந்தெடுத்தால்--அவர்
   நாள்தொறும் வெகுவாய் உழைத்திட்டே
வீட்டை உயர்த்திடல் பார்க்கின்றோம்--அந்த
   வினையின் கொள்முதல் அறுக்கின்றோம்;

கதிரவன் ஒளிபுகா இடங்களிலும்--நாட்டில்
   கையூட் டொளிர்ந்திடக் காண்கின்றோம்;
எதுசரி? என்றால் தவறுகளைத்--தலைகள்
   இதுசரி யென்றிடல் காண்கின்றோம்.

தாழ்ந்தவர் உயர்ந்து நிமிர்ந்திடவே--நாட்டில்
   தனிவழி எதுவும் தெரியவில்லை;
தாழ்ந்தவ ரென்றும் தாழ்ந்தவரே--என்னில்
   தனிக்குடி யரசெலாம் எதற்காக?

ஒழுக்கமும் நெறியும் பண்புகளும்--இதயம்
   உள்நுழைந் திடவே மறுக்கிறது;
இழுக்கமும் பிழைநெறி முனைப்புகளும்--என்றும்
   எளிதாய் உள்நுழைந் திருக்கிறது.

பாரதம் எங்கே போகிறது? --நாட்டுப்
   பழம்பெரும் சிறப்பேன் மறைகிறது?
பாரதம் உலகின் வழிகாட்டி --என்று
   புகழ்பெறும் நிலையும் வந்திடுமா?

என்னவோ இளைஞர் உள்ளமெலாம் --தீமை
   இழுத்திடச் சென்றிடல் காண்கின்றோம்;
வண்ணமாய்த் தோன்றும் தீமைகளை--அவர்
   வாரி அணைத்திடல் பார்க்கின்றோம்.

நினைக்க நினைக்கவே வெடிக்கிறது;--நெஞ்சம்
   நெருப்பில் புழுவாய்த் துடிக்கிறது;
நினைப்பும் செயலும் உயர்ந்திடவே--நாட்டில்
   நன்னெறிச் சூழல் விளைந்திடுமா?
          ------     -----



No comments:

Post a Comment