என்ன நடக்கிறது ?
அரசாங்க அலுவலகம் ஒன்றில் நுழைகிறேன்;
இருகை நீட்டி வணங்கிவர
வேற்கிறார்.
கண்ணீலே ஒளிமின்னச் சொற்களில் அன்புவழிய
என்னவேண்டும்? என்கிறார். வந்தவேலை மறந்துவிட்டேன்
அமருங்கள் என்றென்னை அமர்த்திப் பாசமுடன்
அமைதிபொங்க என்குறையைக் கேட்டுப்பின் அவராக
விரைந்து செயல்பட்டு வேண்டியதை முடித்துவிட்டே
உறவோடு கைகுலுக்கி வழியனுப்பி வைக்கிறார்.
என்ன நடக்கிறது? எனக்கொன்றும் புரியவில்லை.
நியாய விலைக்கடையின் ஊழியர் வீடுவந்து
நியாய விலைக்கே என்னவேண்டும்? என்கிறார்;
பட்டியலை வாங்கி அதன்படியே பொருளையெல்லாம்
கட்டிவந்தே அளவு குறையாமல் தருகிறார்.
இதுவரை காணாத அன்பொளியை அவர்முகத்தில்
இதுபோது கண்டவுடன் இதயம் வியக்கிறது.
என்ன நடக்கிறது? எனக்கொன்றும் புரியவில்லை.
என்மகன் பட்டம் இந்தஆண்டு தான்பெற்றான்;
இன்றவனுக் கொருமடல்; ‘உடனே விரைந்துவந்து
நல்ல பணியொன்றில் அமரவேண்டி ஓராணை;
உள்ளம் மகிழாமல் அவனோ நாளைக்கு
இன்னும் உயர்வான பணிதேடி வருமென்றான்.
என்ன நடக்கிறது? எனக்கொன்றும் புரியவில்லை.
இளமைபொங்கும் அழகுமங்கை நிறைந்த நகையோடு
வழக்கமான வழியில் நள்ளிரவில்
நடக்கிறாள்
தொந்தியிலாக் காவலர்கள் இரண்டுபேர் விரைவாக
வந்தவளின் முன்னும் பின்னுமாய்ச் செல்கின்றார்;
பாச உணர்ச்சியுடன் அவளையவள் வீடுசேர்த்துப்
பாச மலராக அவர்கள் திரும்புகின்றார்.
என்ன நடக்கிறது? எனக்கொன்றும் புரியவில்லை.
தெருவோரம் ஒருவீட்டில் ‘ என்னகுறை?’ எனக்கேட்டு
வருகிறார் ஓரமைச்சர் அவர்மட்டும் தனியாக ;
அடுத்த நாளே அவ்வீட்டுக்
குறைதீர்த்துக்
கொடுத்த மகிழ்ச்சியில் குடும்பம் திளைக்கிறது.
அந்த அமைச்சர் பேருந்து நிறுத்தத்தில்
வந்த பேருந்தில் ஏறிச்
செல்கின்றார்.
என்ன நடக்கிறது? எனக்கொன்றும் புரியவில்லை.
புடவைக் கடைக்குள்ளே மனைவியுடன் நான்நுழைந்தேன்;
அடுத்து நுழைந்தார்
முதலமைச்சர் தோழியுடன்;
பருத்திப் பிரிவுக்குள் எங்களுட னேவந்து
உருக்க முடன்பேசி இதுநன்றா?
எனக்கேட்டு
என்மனைவி சொன்னபடி புடவையும் எடுத்தே
அன்போடு சென்றார்; ஆரவாரம் ஏதுமில்லை.
என்ன
நடக்கிறது? எனக்கொன்றும் புரியவில்லை.
நாட்டிலுள்ள கட்சியெலாம் ஒருங்கிணைந்து மேடையொன்றில்
கூட்டம் நடக்கிறது;
குழப்பமே அங்கில்லை;
காவலரே தேவையின்றிக் கருத்துகள் பொழிகின்ற
மேவுபுதுத் தோற்றமுடன் மேடை திகழ்கிறது;
எதிர்க்கட்சி யின்குரலை ஆள்பவர் கேட்கின்றார்;
எதிரியெனக் கருதாமல் இணைந்துநலம் பேணுகின்றார்;
மேடையொரு பூந்தோட்ட மெனமாறி எதையேனும்
நாடிவந்து பறியுங்கள்
எனவேண்டி நிற்கிறது.
என்ன நடக்கிறது? எனக்கொன்றும் புரியவில்லை.
ஊழலென்றால் என்னவென் றிளையோர்கள் கேட்கின்றார்.
ஊழலென்ற சொல்லே வழக்கின்றிப்
போகிறது;
நேர்மை வாய்மை தூய்மை
நன்மை
சீர்மை எனவெங்கும்
வளமை கொழிக்கிறது;
காவிரியில் வெள்ளம்; பச்சைப் பசும்புரட்சி
நாவிரித்துப் பாடி நடந்துசெலும் உழவரினம்;
சென்னையில் தண்ணீர்ப்
பஞ்சமே யில்லை;
எண்ணிய கணமெல்லாம் தண்ணிர் கொட்டும்.
சிங்காரச் சென்னை; குழியில்லாச்
சாலை;
இங்கென்ன நடக்கிறது? எனக்கொன்றும் புரியவில்லை.
வண்ணக் கனவென்றன் உறக்கம் கலைக்கிறது.
( நங்கநல்லூர்—13-03-04
)
; .
No comments:
Post a Comment