வாழ்க்கை
வாசலில் வள்ளுவம்
எம்மூரில் ஒருபழக்கம்; சிலபேரை உள்விடாமல்
எம்வீட்டு வாசலிலே யேநிறுத்தி அனுப்பிவைப்பார்;
என்ன இதுவென்றால் உள்வந்தால் தீட்டென்பார்;
இன்றைக்கு வள்ளுவர்க்கும் அந்தக் கதிதானா?
வாழ்க்கை நடப்புண்மை தெளிவாகக் கண்டுணர்ந்தே
ஆழ்ந்து சிந்தித்து வாசலில் நிறுத்தினீரோ?
வள்ளுவம் உள்வீட்டில் வந்தமர்ந்துச் விட்டதென
சொல்லி மகிழும்
துணிவு நமக்குண்டா?
வாழ்க்கை உள்வீட்டில் வள்ளுவம் அமர்ந்துவிட்டால்
தாழ்வேது? துயரேது? தனியொழுக்கச் சிதைவேது?
நாமவர்சொல் கேட்கிறோமா? வள்ளுவச் சொல்லைவிட
நாமேதோ விரும்புகிறோம்; அதையேதான் செய்கிறோம்.
அன்பிற்குத் தாழில்லை என்றார்; உள்ளத்துள்
அன்பிற்குத் தாழிட்டு ஆத்திரத்தை வெளிவிடுவோம்;
இடுக்கண் வருங்கால் நகச்சொன்னார்; பிறர்க்குவரும்
இடுக்கண் களைக்கண்டு நாம்நகைக்கப் பழகிவிட்டோம்;
பொய்யாமை ஆற்றின் வேறறம்வேண் டாமென்றார்;
பொய்ம்மையே அறமாகப் பொழுதெல்லாம் போற்றுகின்றோம்;
வாய்மையைப் புதைத்துவிட்டு அதன்மேல் மேடைபோட்டுத்
தூய்மையைத் துடைத்துவிட்டுச் செயல்வீரம் காட்டுகின்றோம்;
வாய்மை சாகிறது; வழக்கின்றிப் போகிறது;
தூய்மை தொலைகிறது; துரோகந்தான் செழிக்கிறது;
ஆளவந்த பெரியவர்கள் வாக்களித்த குடிகளையே
மாளவந்த மக்களாய் மதித்தன்றோ நடத்துகின்றார்;
அல்லற்பட் டாற்றாது அழுதகண்ணீர் அழிக்குமென்றார்;
அல்லற்பட் டழுகின்றார்; அழிப்பதாய்த் தெரியவில்லை.
வள்ளுவம் உள்வீட்டில் வந்தமர்ந்துச் விட்டதெனச்
சொல்லி மகிழும் துணிவு நமக்குண்டா?
இல்வாழ்க்கை உள்வீட்டில் வள்ளுவர் உள்ளாரா?
இல்வாழும் இருவருமே வள்ளுவர்சொல் ஏற்பவரா?
வாழ்க்கைத் துணைபோற்றும் ஆண்மக்கள் குறைந்துவிட்டார்;
வாழ்க்கையிற்பெண் அடிமையென மதிப்பவர் தானதிகம்.
தற்கொண்டான் பேணத் தலைவிக்கு நேரமில்லை;
தற்கொண்டாள் போற்றத் தலைவர்க்கு நெஞ்சமில்லை.
என்னஇல்லை வள்ளுவத்தில்? அதுகூறும் நெறிமுறையில்
என்னஉண்டு நம்நெஞ்சில்? எண்ணிப் பாருங்கள்;
வள்ளுவனை உலகம் உணர்ந்துசொன்ன பின்னர்தான்
உள்ளாரா இவரொருவர் எனப்போற்றத் துவங்கினோம்நாம்.
நெறிமுறையைப் பறக்கவிட்டு நெஞ்சை விலையாக்கிக்
குறிகொள்கை ஏலமிட்டுக் கோபுரமாய்ப் பலராவார்.
தேர்தல் பெரும்புயல்தான் பொங்கிவரும் இன்றேனும்
யாரெவர் என்றுணரும் அறிவுபெற வேண்டாமா?
இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன்கண் விடலென்றார் அய்யனுமே;
எதனையும் எதனாலோ எவனோ முடிக்கின்றான்;
அதனை இனங்காணும் பகுத்துணர்வு வேண்டாமா?
வாசலில் நிற்பவரை வாழ்க்கைக்குள் வரவிடுங்கள்;
நாசமின்றி நாம்வாழ நல்லறிவு கொளுத்தட்டும்!
வள்ளுவம் ஒன்றைமட்டும் வாழ்வறமாய்க் கொள்ளுங்கள்!
உள்ளம் உயரும்; உள்ளபடி வாழ்வுயரும்.
( திருவள்ளுவர் இலக்கிய மன்றம்
30-ஆம் ஆண்டு விழா—19-02-06 )
No comments:
Post a Comment