Friday, July 17, 2015

புறப்படு பெண்ணே!



               புறப்படு பெண்ணே !

புறப்படு பெண்ணே! புவியை அசைக்க!
சிறப்பிடம் நோக்கியுன் சிறகை விரித்தெழு!

சிந்தனை; செயல்திறம்; துணிவுடன் ஆர்வம்
எந்தவி தத்தில்நீ இளப்பம்? துடித்தெழு!

பூவிதழ் இணைந்தொரு புயலா கட்டும்!
பூமறை சருகுகள் பறந்தோ டட்டும்!

பூட்டிய தளைகள் இன்றிலை; பெரும்புகழ்
நாட்டியுன் ஆற்றலால் புவியை அளந்துபார்!

விண்கல மேறி வலம்வருங் காலம்
பெண்கள் வீட்டுளா முடங்கிக் கிடப்பது?

எத்துறை யெனினும் உன்கொடி நாட்டு!
கத்தியே எதிர்ப்பவர் வாய்களைப் பூட்டு!

புதுமை; புரட்சி; விடுதலை வேட்கை
எதிலும் உன்செயல் ஏற்றம் பெறட்டும்!

திசைகளை அளக்கவுன் சிறகுவிரி யட்டும்!
இசைவுற உன்கண் மண்பார்க் கட்டும்!

பழமை  எல்லாமே  தீமைக  ளல்ல;
பழமையின் அறங்களைத் துடைத்து விடாதே!

பெண்செயும் கடமைகள் பேணிக் காத்துக்
கண்ணிமை போலுன் வீட்டைப் போற்று!

புவியை அசைநீ! புரட்டி விடாதே!
புவியே தலைகீ ழானால் கெடுதல்.



ஆணினம் தருகிற தீமையை அகற்று!
ஆணினத் தையே  அகற்றி விடாதே!

புறப்படு பெண்ணேபுவியை அசைக்க!
புறப்படும் உன்னுடன் ஆண்மகன் வரட்டும்;

புவியை அசைக்க நெம்புகோ லாகிப்

புவியில் உனக்காண் துணையா கட்டும்

No comments:

Post a Comment