பாட்டுணர்வு நமக்கெதற்கு
?
அன்புடைய
கவிஞர்காள்! உங்கள் நெஞ்சின்
அலைவீச்சில் எதிர்நீச்சல் போட்ட துண்டா ?
அன்றாடப்
பயன்கருதி நெஞ்சம் ஓடும்;
ஆர்ப்பாட்டப் பாட்டிற்குச் சுருதி சேர்க்கும்;
வென்றானைப்
பாராட்டிப் பரணி பாடும்;
மேன்மேலும் பொருள்சேர்க்க வழிகள் நாடும்;
நின்றாடும்
இந்தநெஞ்சும் அறிவும் மோதி
நிகழ்த்துகின்ற போரினைநீர் வென்ற துண்டா ?
உம்கவிதை
தீயோரைச் சுட்ட துண்டா ?
உயர்பதவி இருப்போர்கள் தவறு செய்தால்
உம்கவிதை
அதைச்சீறிப் பாய்ந்த துண்டா
?
ஒடுங்காமல் நடுங்காமல் நிமிர்ந்த துண்டா ?
வம்புசெய்யும் குண்டர்தம்
அடித டிக்கே
வளையாமல் அவர்குற்றம் சொன்ன துண்டா ?
உம்கவிதை
கட்சிக்குள் அடைபட் டாலும்
உண்மையினை அஞ்சாமல் உரைத்த துண்டா ?
குடியாட்சி
தடியாட்சி ஆன போது
கொதிவெந்நீர் மழையாகிப் பொழிந்த துண்டா ?
குடியாட்சி
வேரினிலே வெந்நீர் கொட்டும்
கொடும்பாவி முகத்தினிலே உமிழ்ந்த துண்டா ?
நொடிப்பொழுதில் அதர்மங்கள்
கிருமி யாகி
நாட்டினையே அழிப்பதைநீர் எதிர்த்த துண்டா ?
கடிக்கவரும்
புலிஓநாய் இவைகள் முன்னே
கம்பீர மாய்க்கவிதை படித்த துண்டா?
இத்தனையும்
செய்துபார்க்க
எனக்கும் ஆசை;
இடுப்பொடிந்து போய்விடுமோ என்ற அச்சம்;
இத்தகைய
அச்சமொடு பேடி மையும்
யார்யார்க்கோ அடிமையாகும் கோழை நெஞ்சும்
எத்தகைய
மனிதனுக்குங் கூடா தென்றே
இடித்துரைத்தான் நம்கவிஞன்; ஆனால் உள்ளே
எத்தகைய
புரட்சித்தீ கொழுந்து விட்டே
எரிந்தாலும் அதைப்பாடத் தயங்கு கின்றோம்.
ஏனென்று
நானிங்கே சொலவா வேண்டும் ?
இதயத்து நெருப்பைவெளிக் கொட்டித் தீர்த்தால்
ஏனென்று
கேட்பதற்கே நாதி யின்றி
இந்தமண்ணில் அக்கவிஞன் எரிப டானா ?
தேனென்று
நஞ்சினையே பாடித் தீர்த்தால்
செத்தாநாம் போய்விடுவோம் ? என்று தானே
நானின்று
நினைக்கின்றேன்; அய்யோ பாவம் !
நெஞ்சுறுதி புதைத்தவனுக் குய்தி உண்டா ?
காவலர்கள்
செயுந்தவற்றைப்
பாடி னால்நான்
கண்மூடித் திறப்பதற்குள் சிறைவா சம்தான்;
மேவிவரும்
அராசகத்தைத் திட்டி னாலென்
மென்னிநெரி பட்டுயிரை இழப்ப துண்மை;
தாவிவருங்
குண்டர்க்கு முன்னே என்றன்
சத்தியமும் நேர்மையுமே பதுங்கி யோடும்;
பாவிமகன்
என்கையில் கவிஎ தற்கு ?
பாட்டுணர்வைக் கடலுக்குள் எறிந்தா லென்ன ?
கண்ணதாசன்—பிப்-
2002
No comments:
Post a Comment