நீர் பேசுகிறது
நானின்றேல்
நீரில்லை; உம்மு டம்பில்
நேர்பாதிக் கதிகம்நான்; ஆட்ட மெல்லாம்
நானிருக்கும்
வரையேதான்; உடம்பி லுள்ள
நீர்வற்றிப் போய்விட்டால் அழகா யுள்ள
மேனிவற்றிப்
போய்விடுமே ! உயிரு மந்த
மேலுலகம் போய்விடுமே ! ஆகை யாலே
நானிருக்கும்
போதேநீர் செய்ய வேண்டும்
நல்லசெயல் அத்துணையும் செய்து தீர்ப்பீர் !
பட்டெடுக்க
வேண்டுமென்று படுத்து கின்ற
பாவைகண்ணில் பனித்துளிபோல் உருவெ டுப்பேன்;
பட்டெடுக்கக்
கணவனவன் மறுத்து விட்டால்
பாய்ந்துவீழ்வேன் அவள்கண்ணில் அருவி யென்ன.
பட்டெடுத்து
விட்டாலோ கடனைத் தீர்க்கப்
படுகின்ற அவன்கண்ணில் ரத்த மாவேன்;
இட்டஅடி
நோகவரு பெண்க ளுக்கே
இணையற்ற ஆயுதமாம் கண்ணீ ராவேன்.
சிவனென்னைத்
தலைமீது தாங்கிக் கொண்டான்;
திருமாலோ என்மடியில் பள்ளி கொண்டான்;
சிவகுமரன்
அறுமுகமாய் என்னி டந்தான்
தோன்றிட்டான்; கணபதியோ துணையைத் தேடிச்
சிவனேயென்
றென்கரையில் அமர்ந்து விட்டான்;
திருமகளும் கலைமகளும் பிரம்மா என்னும்
அவனுமென்றன்
மீதலர்ந்த மலர்கள் மேல்தான்;
அருந்தெய்வ மத்துணையும் அடக்கம் என்னுள்.
No comments:
Post a Comment