எதற்கு நான் பாடுகிறேன் ?
நானொரு
கவிஞன் ஐயமில்லை – இதை
நான்தான் சொல்வேன் நூறுமுறை;
நான்சொலும்
எல்லாம் நற்கவிதை – என
யார்சொல வேண்டும்? நான்தானா ?
பள்ளியில்
படித்தவை மிகச்சொற்பம் – வாழ்வில்
பட்டுக் கற்றவை மிகஅதிகம்;
சொல்லிவைப்
பேனதைக் கவிதைகளில் – யார்நான்
சொன்னதைக் கேட்டுத் திருந்துகிறார் ?
உள்ளே
பதியாக் கவிதைகளைக் –கற்போர்
உளத்தைத் திருத்தாக் கருத்துகளை
வெள்ள
மெனப்பொழிந் தென்னபயன் ?— அவை
வீணே பாறையில் விதைத்தவைதாம்.
ஆண்டுகள்
பலவாய்த் தீமைகளை – உலகின்
அடிவேர்க் கிருமி ஊழலினை
ஈண்டழித்
திடவே பாடினேன்நான்; -- மண்ணில்
எங்கே அழிந்தன அவையெல்லாம் ?
நல்லறம்
தழைக்க வேண்டுமென – இங்கே
நற்கவி மழையைப் பொழிந்திட்டேன் ;
நல்லறம்
தழைப்பதாய்த் தெரியவில்லை ;-- தீயவை
நாட்டில் குறைவதாய்த் தோன்றவில்லை.
வள்ளுவர்
சொல்லா அறிவுரையா ? –அவர்
வகுத்துக் காட்டா நெறிமுறையா ?
உள்ளே
அவருரை பதிந்ததுண்டா? – குறளால்
உயர்ந்து மன்பதை நிமிர்ந்ததுண்டா ?
எத்துணை
எத்துணை நீதிநூல்கள் ? –அறமாய்
எத்துணை எத்துணை பெட்டகங்கள் ?
எட்டுணை
யேனும் ஏற்றதுண்டா ? –மண்தான்
ஏற்றம் பெற்றே உயர்ந்ததுண்டா ?
பின்னெதற்
கிங்கே எழுத்தெல்லாம் ? –வெறும்
பொழுது போக்காய்ப் படிப்பதற்கா ?
இன்னும்
எதற்குநான் பாடுகிறேன் ? –என்னை
ஏற்று நடக்கவோர் ஆள்வருமா ?
No comments:
Post a Comment