Thursday, June 23, 2011

எத்தனை முகங்கள்


எத்தனை முகங்கள்

ஒருவனுக் கெத்தனை முகங்களடா! - அவன்
உரைகளில் எத்தனை பொய்மையடா
தெரிவது வெளியே ஒருமுகந்தான் - நமக்குத்
தெரிந்திடா திருப்பவை பலமுகமாம்

நண்பனை ஒருமுகம் அழைக்கிறது - நல்ல
நாடக   மங்கே   நடக்கிறது
நண்பனும் பலமுக நடிகன்தான் - அவனை
நறுக்கென அணைக்கிறான் பெருநடிகன்

உள்முக உணர்வுகள் வேறுவகை - அங்கே
உரையென வீழ்பவை வேறுவகை
தெள்ளத் தெளிந்த சூழ்ச்சிவகை - அங்கே
தீட்டுவ தெத்தனை கோலவகை

அரசியல் களத்தில் நரிமுகந்தான் - துள்ளி
ஆடுவே தெத்தனை கள்ள முகம்
உரசிடும் போது புலிமுகமாம் -கட்டி
உறவுறும் போது வேறுமுகம்

தார மணைப்ப தொருமுகமாம் - பெற்ற
தாயிடம் உரைகள் வேறுமுகம்
தூரத்  துறவிடம் வேறுமுகம் - தன்
சொந்த உறவிடம் வேறுமுகம்

உள்ளதை மறைப்ப தொருமுகமாம் - அவர்
உரையிலே சிரிப்பதோ வேறுமுகம்
கள்ளமே உள்ளே பொங்கிநிற்கும் - அதைக்
காட்டிடா தொளித்திடும் வேறுமுகம்

பலமுக இராவணன் உருவகந்தான் - உணர்வுப்
பரிமா ணங்களின் படப்பிடிப்பு
பலவகை யகாப் பாய்ந்தோடும் - எண்ணப்
பாய்ச்சலைக் காட்டும் கண்ணாடி

உள்முகப் பயனம் போனால்தான் - நம்முள்
உள்ள பலவகை முகந்தெரியும்
தெள்ளிய அறிவுடன் பார்த்தால் தான் - நம்
சிந்தையின் கோணல் புரியவரும்

ஒப்பனை இல்லாப் பேச்சுவகை - எங்கே
உள்வெனத் தேடுதல் வீண்வேலை
தப்பணர் வரும்பாத் தெளிந்தமுகம் - கண்ணில்
தோன்றிடின் அதுவே தெய்வமுகம்

என்முகம் எப்பொழு தொருமுகமாம் - என்றன்
இதயம் என்று தெளிவுறுமாம்
என்முகம் என்றும் என்முகமாய் - இங்கே
இலங்கிடு மாஅது தெரியவில்லை.

******** கல்கி தீபாவளி மலர்*******


No comments:

Post a Comment