Thursday, June 23, 2011

பூமிக்குள் இல்லை புதையல்


பூமிக்குள் இல்லை புதையல்

மண்ணில் உள்ளது புதைய லென்றே
மனசு மயங்குதடா - அட
எண்ணிப் பார்நீ ! உனக்குள் ளேதான்
உள்ளது புதையலடா !

மண்ணைத் தோண்டி என்ன காண்பாய்
வைரம் பொன்தானே- உன்
எண்ணத் துள்ளே தோண்டிப் பார்நீ
எத்தனை புதையலடா ?

துணிவைத் தோண்டிக் கையில் எடுநீ !
சிகரம் வணங்குமடா உள்ளக்
கனிவைத் தோண்டிக் காட்டடா - வன்மைக்
கல்லும் கரையுமடா !

அன்பைத் தோண்டிக் குவியடா! - அந்த
ஆண்டவன் வசப்படுவான் - உன்னை
இன்பில் ஆழ்த்தி அவனும் மகிழ்வான்
சத்திய வார்த்தையடா

பொறுமையை எடுத்தே அணிந்துகொள்! - இந்தப்
பூமியுன் கையாகும் - தோன்றும்
வெறுப்பினைச் சலிப்பை எறி ! உன் வீட்டில்
வெற்றி தவங்கிடக்கும்

தளரா முயற்சியைத் தோண்டி எடுவுனைத்
தழுவிடும் வெற்றியடா! - உன்றன்
உளத்தில் துடிப்பை இணைத்திடு! பூமியே
உன்னிடம் தஞ்சமடா!

இடுக்கணைக் கண்டு சிரிக்கிற ஆற்றல்
உள்ளது புதையலென - அதை
எடுத்துநீ அணியடா! அந்த இடுக்கணே
உனைக்கண் டஞ்சுமடா!

எல்லாம் உன்னுளே புதைந்து கிடக்கையில்
எதைநீ தோண்டுகிறாய்? - உலகை
வெல்லும் புதையல் மண்ணுளே இல்லை
உன்னுளே உள்ளதடா!





1 comment: