Wednesday, January 23, 2013

சொல்லின் செல்வன்

       சொல்லின் செல்வன்

சொல்லின் செல்வ னானவன்;
   சூட்சு மங்க ளுணர்ந்தவன்;
வில்லின் வீரன் இராமனை
   வியக்க வைத்த தூயவன்;
கல்லின் வலிய மேனியான்;
   கடலைத் தாண்டும் வலியினான்;
சொல்லிப் பாட அனுமனே
   தூய நன்மை அருளுவான்;

அஞ்ச னைக்குப் பிறந்தவன்;
   அஞ்சி லொன்றைத் தாண்டியே
அஞ்சி லொன்றை வைத்துமே
   அச்சம் வென்ற விறலவன்;
செஞ்சொற் கிள்ளை சீதையின்
   சிந்தை நோயைத் தீர்த்தவன்;
நெஞ்சில் அவனைப் போற்றியே
   நித்தம் நன்மை எய்துவோம்.

வேத கீதன் நாமமே
   வாயில் வந்த போதிலே
நாத போதம் யாவுமே
   நம்மை வந்து சேருமே!
சீதை நாதன் தூதனைச்
   சிந்தை யேற்றிப் போற்றினால்
யாதும் தீமை யின்றியே
   என்றும் நன்மை யோங்குமே!

நன்மை வந்து சேருமே!
   நாளும் செல்வங் கூடுமே!
தின்மை ஒழிந்து தீயுமே!
   சஞ்ச லங்கள் பொசுங்குமே!
இன்மை யென்ப தின்றியே
   எதுவும் நிறைந்து திகழுமே!
செம்மைத் தூதன் அனுமனின்
   தூய அடிகள் போற்றுவோம்.
        (வேறு)
சொல்லாலே இராமபிரான் உளங்க வர்ந்த
   தூயானைத், தேவர்தம் துயர்கள் தீர்க்க
வில்லெடுத்த நெடியோனின் தொண்ட னாகி
   விறலரக்கர் தமையழித்த வென்றி யானை,
அல்லெடுத்த வனத்திற்குள் தவமி ருந்தாள்
   அல்லலினைத் தீர்த்திட்ட அழகன் தன்னைச்
சொல்லொண்ணாத் துயரத்துள் இராமன் மூழ்கச்
   சிரஞ்சீவி கொணர்ந்தானை வணங்குவோமே!

வேதத்தின் கரைகண்ட வித்தை யானை
   வீரத்தின் எல்லைகண்ட விறல்வல் லானை
நாதத்தின் முதற்பொருளாய்த் திகழ்கின் றானை
   நல்லொழுக்கம் தலைநின்ற மாணி யானைக்
காதத்தைக் கடந்தொளிரும் கால்வல் லானைக்
   காற்றுக்குப் பிறந்தானைத் தேவ ருக்கும்
தீதகற்றத் தென்னிலங்கை தீவைத் தானைச்
   சித்துவல்ல மறையானை வணங்கு வோமே! 

Monday, January 14, 2013

கோபுரம்

                    இவைகள் பேசினால்--கோபுரம்

கோயிலில்லா ஊரினிலே யாரும் என்றும்
   குடியிருக்க வேண்டாமென் றறைந்தார் முன்னோர்;
கோயிலுக்கேன் அத்தகைய சிறப்பை ஈந்தார்?
   கோபுரத்துக் கேனந்த உயரம் தந்தார்?
வாய்தவறி வந்தசொல்லா? சொன்ன வர்தாம்
   வழிதவறிச் செல்பவரா? இல்லை; தங்கள்
வாய்திறந்தால் தெய்வத்தின் பேரு திர்க்கும்
   வாய்மையினை உடையவர்தாம் உணர்ந்து சொன்னார்;
          கோபுரம் பேசுகிறது;
உள்ளிருக்கும் முழுமுதலை வணங்கு தற்கே
   உள்நுழையும் போதினிலே கோபு ரம்போல்
உள்ளங்கள் உயரவேண்டும்; சின்னப் புத்தி
   ஒருசிறிதும் கூடாது; தூய்மை சேர்த்துக்
கள்ளமிலா நெஞ்சோடு பணிந்தால் தானே
   கடவுளருள் முழுமையாகப் பெறலாம்; அந்த
நல்லதொரு தத்துவத்தைக் காட்டு தற்கே
   நிமிர்ந்துநிற்பேன் கோபுரம்நான்; அறிந்து கொள்க!

உயர்ந்தவன்நான் அய்யமில்லை; என்மே லேதான்
   உயிரினங்கள் குடியிருக்கும்; பக்க மெல்லாம்
உயிரில்லாச் சிற்பங்கள் சிரிக்கும்; நாளும்
   உயிருள்ள வௌவாலும் புறாவும் வந்தே
அயர்வோடு குடியிருப்ப தன்றி எல்லா
   அசிங்கமுமே செய்துவைக்கும்; சினக்க மாட்டேன்;
மயக்கத்தில் கிடந்தாலும் குப்பை கூளம்
   மட்டின்றிச் சேர்த்தாலும் திட்ட மாட்டேன்.

வான்தொட்டு நிற்கின்ற தோற்றத் தாலே
   மண்தொட்டு வாழ்கின்ற மனிதர் நெஞ்சை
நான்தொட்டுப் பார்க்கின்றேன் அய்யய் யோஅந்
   நாற்றத்தை என்னசொல்வேன்? சாக்க டைக்குள்
தேன்சொட்டை வீழ்த்துதல்போல் 'இறைவா!' என்று
   தன்வாயால் உதிர்க்கின்றார்; இத்து ணையும்
ஏன்கெட்டுப் போனதென்றே எண்ணிப் பார்ப்பேன்;
   எனக்கொன்றும் புரியாமல் நெடிதாய் நிற்பேன்.

சிலசமயம் என்கீழே பலபேர் நின்று
   சதித்திட்டம் தீட்டிடுவார்; பாவம் செய்யக்
கலங்காமல் அவர்பேசும் பேச்சில் என்றன்
   கட்டுடலும் நடுங்கிவிடும்; யாரைத் தீர்க்க
அழகாகத் திட்டமிட்டுப் பேசி னாரோ
   அவர்வருவார்; எல்லோரும் அணைத்துக் கொள்வார்;
உளமொன்று செயலொன்றைக் கண்டே நான்தான்
   உதிர்த்திடுவேன் காரைகளை; வேறென் செய்ய?

நாட்டிலெங்கும் சத்தியத்தைக் காண வில்லை;
   நடப்பிலெங்கும் நேர்மையதே தெரிய வில்லை;
வீட்டிலெங்கும் அன்புக்கோ வேலை யில்லை;
   வெளியிலெங்கும் கருணைக்கோ இடமே யில்லை;
காட்டிலுள்ள விலங்கினங்கள் ஊர்க்குள் வந்து
   காலிரண்டில் நடந்துதிரி வனவே போல
நாட்டுநடப் பிருக்கிறதே! இந்த மண்ணில்
   நானுயர்ந்து நிற்பதற்கே நாணு கின்றேன்.

வாய்திறந்தால் பொய்மையன்றி வருவ தில்லை;
   மனந்திறந்த பேச்சுக்கு வழியே யில்லை;
சேய்பிறந்து வரும்போதே கையை நீட்டிச்
   சில்லரைகள் கேட்கிறது; நீதி எங்கோ
போய்மறைந்து கிடக்கிறது; நேர்மை லஞ்சப்
   புதருக்குள் மறைகிறது; இந்த மண்ணிற்
போயுயர்ந்து நான்மட்டும் நிற்ப தாலே
   புண்ணியந்தான் ஏதுமுண்டா? நாணு கின்றேன்.
             ------ காரைக்குடி 10-11-91  




Wednesday, January 9, 2013

தீபம்

                          இவைகள் பேசினால்---தீபம்

திருக்கோயிற் கருவறைக்குள் தெய்வத்தோ டுறவாடி
இருக்கும்  தீபம்நான்; இதயத்தைக் காட்டுகிறேன்;

எனக்கும் வாயுண்டு; வயிறுண்டு; ஏற்றுங்கால்
கணக்காக எரிகின்ற சுடராகும் நாக்குண்டு;

என்வயிற்றில் எண்ணெயூற்றி இடுதிரியை வைத்துத்
தன்குறைகள் தீர்க்க என்முகத்தில் நெருப்புவைப்பார்

தீபம்நான் சிரிக்கின்றேன்; திரித்திரியாய் எரிகின்றேன்;
பாவம் என்னுணுணர்வைப் பாரில்யார் பார்க்கின்றார்?

இருட்டுக் குடியிருக்கும் இடத்தில் வேறெந்தப்
பொருட்டும் இறைவன் புலப்படவே மாட்டான்;

திருக்கோயிற் கருவறையின் தெய்வத்தை வணங்குங்கால்
இருக்கின்ற இருட்டைப் போக்கவே நானெரிவேன்;

நானளித்த ஒளியால் நல்லறையின் இருட்டுப்
போனதென்ன வோஉண்மை; பக்தர் நிலையென்ன?

இதயமே இன்றித்தான் பலபேர் வருகின்றார்;
இதயமெலாம் இருட்டாகப் மீதிப்பேர் வருகின்றார்;

அய்யோ எனஅலறி என்நாவை ஆட்டுகின்றேன்;
பய்யவே காற்றில்நான் ஆடுவதாய் நினைக்கின்றார்;

கோயிலுக் குள்ளேனும் குப்பைகளை அகற்றிவிட்டுத்
தூய்மை யுளத்தோடு தொழுதல் கூடாதா?

உள்ளத்துக் குப்பைகளை ஒன்றாகக் கொண்டுவந்து
கள்ளத் துடன்தொழுதால் கடவுள் மகிழ்வாரா?

தீபம்நான் சிரிக்கின்றேன்; திரித்திரியாய் எரிகின்றேன்;
பாவம் என்னுணர்வைப் பாரில்யார் பார்க்கின்றார்?

எனக்குள்ளும் சாதிவகுப் பிருக்கிறது; அதனாலே
பிணக்குகள் வருவதில்லை; போராட்டம் நடப்பதில்லை;

குத்துவிளக் காய்நிற்பேன்; கோலஎழிற் சரவிளக்காய்ச்
சத்தமின்றித் தொங்கிடுவேன்; சின்னத் தீபமாவேன்;

பஞ்சமுக விளக்காவேன்; பரமனையே நோக்கிநின்று
அஞ்சுபுலன் தனையடக்கி யாள்கவெனக் காட்டிநிற்பேன்;

முகம்பலவே கொண்டும்நான் ஒருமுகமே காட்டுகின்றேன்;
முகமொன்றைக் கொண்டவரோ பலமுகங்கள் காட்டுகின்றார்;
             (வேறு)
இறைவனொடு மிகஅருகில் நாளும் உள்ள
   என்னெஞ்சம் அவனிடமோர் வரமே கேட்கும்;
குறைநெஞ்சம்; கொள்ளிமனம்; கெடுதல் செய்யக்
   குதிக்கின்ற பாவியுள்ளம்; இவற்றை யிங்கே
இறைவன்முன் பலரறியச் சுட்டிக் காட்ட
   எனக்காற்றல் தரச்சொல்லி வேண்டு வேன்நான்;
தரங்கெட்ட பாவிகளின் கையால் என்றன்
   திரியெரிதல் என்னாலே தாங்க வில்லை;

கோயிலுக்குள் மந்திரத்தைச் சொல்லு கின்ற
   குருக்களுளங் கூடஅங்கே இணைவ தில்லை;
வாயசைந்து மந்திரங்கள் சிந்தும்; அந்த
   மனிதரவர் சிந்தனையோ வெளியே மேயும்;
வாயிங்கே எனஅழைத்தே நாவ சைப்பேன்;
   வழிபாட்டில் என்னசைவை யார்தான் பார்ப்பார்?
தீயணைந்து போகாமல் எண்ணெ யோடு
   திரிசேர்ப்பார்; என்னுள்ளங் காண மாட்டார்;

என்வயிற்றில் எண்ணெயினைத் தாங்கிக் கொள்வேன்;
   இடுதிரியை நாவாக நீட்டி வைத்தே
என்நாவின் நுனியினிலே தீயை வைக்க
   எரிகின்றேன்; என்வயிறோ எரிவ தில்லை;
என்கண்முன் சிலபேர்கள் வந்து நிற்பார்;
   இனிமையொடு திரியாகும் நாவு கொஞ்சும்;
எண்ணெயின்றி அவர்வயிறோ எரியும்; நாட்டில்
   இந்தவொரு கண்றாவிக் கென்ன செய்வேன்?
              -திருக்கோயிலூர்---01-05-82

ஆலயமணி

                   இவைகள் பேசினால்---ஆலயமணி

ஆலயமணி பேசுகிறேன்;
;
நாக்குடையோ னாக நானிருந்த போதிலும்
வாக்கெதுவும் இதுகாறும் வாய்திறந் துதிர்த்ததில்லை;

நாக்கில் வருபவைகள் நல்லன தருபவையாய்ப்
பார்க்காத காரணத்தால் பேச்சொழிந் திருந்தேன்நான்

பேசத் தெரிந்தவர்கள் பேச்செல்லாம் தீமையினை
வீசக் கண்டதல்லால் வேறு விளைச்சலில்லை;

நாவடக்கம் எங்குமில்லை; மாறாகப் பலபேரை
நாஅடக்கம் செய்கிறது; நடைமுறை உண்மையிது;

கேட்டால் செவிகைக்கும் கெட்டழிந்த சொற்கள்தாம்
நாட்டு மேடைகளில் நாட்டிய மிடுகிறது;

நாக்கிருந்தும் பேசாமை நல்லதென நானிருந்தேன்;
வாக்களிக்கச் சொல்லியெனை வம்பி லிழுத்துவிட்டீர்

பேச்சு வந்தவுடன் பெரியோ ரிடம்கேள்வி
வீச்செறி தல்தானே வாடிக்கைச் செயலாகும்;

என்னை உணர்ந்தவன்நான்; மண்ணை உணரவில்லை;
விண்ணை உணர்வமெனில் வெகுதொலைவு; எட்டவில்லை;

ஆறுகாலப் பூசை அன்றாடம் நடக்கிறது;
மாறுதலே இல்லாமல் மணியோசை கேட்கிறது;

என்நாக்கால் எனையேநான் அடித்துக் கொள்கின்றேன்;
மண்ணுளோர் போல மற்றவரை அடிப்பதில்லை;

ஆண்டாண்டு காலமாய் ஆலய மணியோசை
பூண்டுக்கும் புழுவுக்கும் மனிதர்க்கும் கேட்கிறது;

ஆண்டவன் இருப்பதையும் அவன்நம்மைக் காப்பதையும்
ஆண்டவன் பூசை பெறுவதையும் அறிவிப்பேன்;

எங்கே இருந்தாலும் எப்பணி செய்தாலும்
அங்கே இருந்தபடி வழிபடநான் ஒலிசெய்வேன்;

கேட்டவுடன் கைகூப்பி வணங்குவோ ரிருக்கின்றார்;
கேட்டாலும் கேட்காத மானிடரும் இருக்கின்றார்;

ஆண்டவனிடம் கேட்கின்றேன்!
எல்லாமாய் இருப்பவனே! எங்கும் திகழ்பவனே!
எல்லார்க்கும் மூச்சாய் இழையோடித் திரிபவனே!

என்னோசை கேட்டவுடன் உன்வாசல் தனைநாடி
மண்மீதில் பக்தியுள்ள மாந்தர் வருகின்றார்;

வருகின்ற மக்களைநான் படிக்கின்றேன்; அவர்க்குநலம்
தருகின்ற நீயவரின் தராதரம் பார்த்தாயா?

வேற்றுமைகள் கண்டுநெஞ்சம் வேகிறது; துன்பத்திற்(கு)
ஆற்றாமல் நாவசைப்பேன்; ஆலய மணியொலிக்கும்;

அய்யா எனக்கதறும் அவரை உதைத்துவிட்டுப்
பய்யவே வந்துசெய்வார் பாலாபி ஷேகங்கள்;

செல்வத்தாற் குளிப்பாட்டிச் செல்வாக்கால் விசிறிவிட்டுன்
நல்லருளை நாடிப் பலபேர் வருகின்றார்;

பட்டாடை மேனிப் பளபளப்பில் உன்பார்வை
கெட்டா போய்விடும்? கண்திறந்து பார்த்தாயா?

நடக்கும் நாடகங்கள் என்னெஞ்சைக் குத்திடவே
இடிப்பேன்நான் இருபக்கம்; அதுதான் மணியோசை;

கோயில் நாடிவரும் அடியவர்காள்! இறையருளின்
வாயில் எதுவென்று மனத்தளவில் அறிவீரா?

மணியோசை கேட்டதும்கை கூப்புகிறீர்; எளியவர்கள்
மனவோசை அறியாமல் மாதேவன் அருள்வருமா?

வஞ்சத்தை விதைத்துவிட்டு அறுவடை காணுங்கால்
கெஞ்சி  யழுதாலும் கடைத்தேற வழிவருமா?

நாள்தோறும் கெட்ட வழிநடந்து மேல்போகும்
நாள்வருங் காலத்தில் நைந்தழுதால் நலம்வருமா?

உலகத்தைக் கண்டுங்கள் உளக்கோணல் தாங்காமல்
பலவகையில் கதறுமென் மனவோசை மணியோசை.
;



Friday, January 4, 2013

திருநீறு

                         இவைகள் பேசினால்----திருநீறு

திருநீறு பேசுகின்றேன்; தெளிவாகச் சொன்னால்வெண்
சிறுபொடியன் பேசுகின்றேன்; சிந்தை திறக்கின்றேன்;

என்னைப் பூசுகின்றார்; இறைவனிடம் பேசுகின்றார்;
கண்ணைக் குவிக்கின்றார்; காரியமெல் லாம்சரிதான்;

நெற்றியை வெளுப்பாக்கத் திருநீறு பூசியவர்
சற்றேனும் உள்ளத்தை வெளுப்பாக்க வேண்டாமா?

நெற்றியி லுள்ளநான் நெஞ்சினுக் குள்பார்த்தால்
பற்றி எரிகிறது; பாவந்தான் தெரிகிறது;

சாண மெனப்பிறந்து சுடுநெருப்பில் தவம்செய்து
மோன வழிகாட்டும் திருநீறாய் உயர்ந்தவன்நான்;

மந்திர மாவேன்; மாமருந்தும் நானாவேன்;
சுந்தர மாவேன்; தோற்றப் பொலிவாவேன்;

பொன்வைத்துக் காலடியில் பொருள்குவித்து நின்றாலும்
என்னைத்தான் அதற்கீடாய்ப் பிரசாத மெனவீவார்;

தொட்டெடுத்து என்னைத் துளித்துளியாய் வீசுங்கால்
நட்டுவனா ராகஅந்தக் குருக்களும் மாறுகின்றார்;

என்னை யிவர்போடக் காசை யவர்போடப்
பண்டமாற்று நடக்கிறது; பக்திமாற்றுக் காணவில்லை;

மறுபடியும் வேக மனம்விரைந்து துடிக்கிறது;
பிறந்தஇடப் பெருமை பளிச்செனத் தெரிகிறது;

நீர்கழித்த பொருளை நல்லுணவாய்க் கொண்டுதினம்
நீர்கொழுக்கப் பாலீயும் நற்பசுவே பிறந்தஇடம்;

பசுக்கழித்த பொருள்நான்; பக்குவமாய் வெந்தபின்னே
விசுக்கென்று நீரணியும் வெண்ணீறா யாகிவிட்டேன்;

என்னை அணியும்நீர் என்தாயின் பெரும்பண்பு
தன்னை உணர்ந்தால் தாரணி உயராதா?

உமக்கோ விருப்பமில்லை; இருந்தாலும் நேரமில்லை;
நமக்கென்ன வென்றே நானும் கிடக்கின்றேன்;

இல்லாத இடமில்லை; இயங்காத துறையில்லை;
நல்லார்கள் பொல்லார்கள் வேறுபா டெனக்கில்லை;

புருவ நெரிப்பினிலே புரிந்துவிடும் மனமென்றே
புருவத்தின் மேற்பட்டை அடிப்பார் சிலபேர்கள்;

நல்லவர்கள் விதிவிலக்கு; நானவரைச் சொல்லவில்லை;
பொல்லாதார் வேடம் புனைவதையே சொல்லுகிறேன்;

வேடங்கள் போடுங்கள்; வித்தைகள் காட்டுங்கள்;
மூடி மறைத்தொழுக நான்தா னாகிடைத்தேன்?

என்னை எடுத்தணிந்து ஏதேதோ செய்துநெஞ்சைப்
புண்ணாக்கிப் போடாதீர்! பாவமெனை விட்டிடுங்கள்!

மருத்துவர்க்கும் எட்டாமல் மாயவித்தை காட்டுகின்ற
பெருநோய்கள் என்பூச்சில் பறந்தோடி மறைந்ததுண்டு;

வேலுக்கு முன்னே வெம்பிணிகள் நின்றிடுமா?
வேலின் நெற்றியினில் விளங்குபவன் நான்தானே!

பரமன் பார்வையிலே பாவங்கள் தொலையாதா!
பரமன் நுதலேறிப் பொலிபவன் நான்தானே!

சூலைநோய் ஒழித்துத் திருநாவுக் கரசரையிப்
பாலழைத்துத் தந்து பணிசெய்தோன் நான்தானே

என்னைக் குழைத்தே எழில்மேனி பூசிடும்நீர்
நன்றாய் இதயத்தை வெளுப்பாக்கிப் பழகுங்கள்

பூசுவது வெண்ணீறு; பேசுவது பாவமெனப்
பேசுகின்ற பேச்சைப் பாரினிலே ஓட்டுங்கள்!

வெண்ணீறு நெற்றியில் பொலியட்டும்! நல்ல
பண்பாடு நெஞ்சத்திற் பழுத்து முதிரட்டும்!

திருநீற்றைக் குழைக்குங்கால் சிந்தை குழையட்டும்!
இருப்போரின் நெஞ்சம் இல்லாதார்க் கிரங்கட்டும்!

நல்லனவே எண்ணட்டும்! நாளும் முடிந்தவரை
நல்லனவே செய்ய நெஞ்சங்கள் முந்தட்டும்!
       -----           ----
           --அலவாக்கோட்டை--10--09--81