Friday, November 1, 2013

தாயே!

                            தாயே!

என்னருந் தாயே! இளநலச் செல்வி!
   என்னுயி ரியக்கிடு முணர்வே!
பன்னரும் புகழைத் தன்னுளே கொண்டோய்!
   பாரிலெம் மொழியிலும் மூத்தோய்!
சின்னவிக் கவிஞன் வேண்டிடு மொழியைச்
   சீற்ற மிலாதருள் செய்தே
எண்ணரு நலத்தை என்றனுக் கீவாய்
   என்னுயி ரே!தமிழ்த் தாயே!

இந்தப் பிறவி இனித்திட வாழ்வில்
   என்றனுக் கருள்செய வேண்டும்;
எந்தப் பிறவி நானெடுத் தாலுமென்
   இனிமைத் தமிழையே கொண்டு
சந்தக் கவிசெய முந்தித் துடிப்பொடு
   சாற்றுமோ ருள்ளமே வேண்டும்;
வெந்த நிலையிலும் சொந்த மொழிபயில்
   வீறுடை நாவதும் வேண்டும்;

சின்னதோர் புழுவாய்ப் பிறப்பெடுத் தாலுமிச்
   செந்தமிழ் மண்ணிலே வேண்டும்;
வண்ணக் கிளியாய் வடிவெடுத் தாலுமென்
   வாக்குத் தமிழெனல் வேண்டும்;
பின்னிடு கொடியாய்ப் பிறந்திடு போழ்தும்
   பெருந்தமிழ் மரத்தையே சுற்றிப்
பின்னிடு நிலையை என்றனுக் கீந்தே
   பேரருள் செய்திட வேண்டும்;

காட்டினிற் கழையாய் நின்றிடத் தென்றல்
   கன்னலின் சுவையெனத் தமிழை
ஊட்டியே ஒலிசெய மகிழ்ந்திட வேண்டும்;
   ஒருமர மாய்த்தனி யாயினும்
ஆட்டியே என்னை அலைக்கழித் திடவோர்
   அருந்தமிழ்க் காற்றதே வேண்டும்;
கூட்டிய பேரொலி தமிழென முழங்கக்
   குப்புற வீழவும் வேண்டும்.

என்னுயிர் மூச்சுத் தமிழெனல் வேண்டும்;
   எழுந்திடு விழுந்திடு போழ்தும்
பன்னிய மொழியால் தமிழையே சொல்லிப்
   படுக்கவும் விழிக்கவும் வேண்டும்;
எண்ணுவ தெல்லாம் எழுதிடு கோலும்
   என்னருந் தமிழையே எழுதப்
பண்ணிட வேண்டும்; இதுசெயக் கண்டால்
   பாரினில் வேறெது வேண்டும்?
               30-12-61 

No comments:

Post a Comment