Sunday, November 3, 2013

படிக்க முடியா ஏடு

                  படிக்க முடியா ஏடு

நாட்டில் நாள்தோறும் உறவாடும் மனங்களாம்
ஏட்டைப் படிக்க என்றேனும் முடிகிறதா?
சிரிக்கின்ற சிரிப்பிலவர் சிந்தையா தெரிகிறது?
விரிக்கின்ற சாகச வலைதானே தெரிகிறது.
அணைக்கின்ற அணைப்பிலவர் அகமா புரிகிறது?
நினைக்கின்ற வஞ்ச நினைப்பன்றோ புரிகிறது.
பேசுகின்ற பேச்சிலவர் பண்பா வருகிறது?
பூசுகின்ற பொய்மைப் பூச்சன்றோ வருகிறது.
உள்ளத்தில் பெருவஞ்சம்; உதட்டோரம் புன்சிரிப்பு;
கள்ளப் புதர்வாழும் குள்ளநரி காணுகின்றோம்.
தஞ்சமிலா ஆடுகளின் செங்குருதி சுவைக்கின்ற
வஞ்சக ஓநாய்கள் வரிசையைக் காணுகின்றோம்.
படங்காட்டி அருகணைத்துப் படக்கென் றேகொத்தி
விடங்கக்கிக் கொல்கின்ற பாம்புகளைக் காணுகின்றோம்.
நல்லபாம்பு குள்ளநரி நயவஞ் சகஓநாய்
எல்லாமே காணுகின்றோம்; மனிதனைத்தான் காணவில்லை.
முகத்தோற்றம் மனிதரென முழங்கி நிற்கிறது;
அகத்தோற்றம் எப்போதும் யாருக்கும் தெரிவதில்லை.
புலியெது? நரியெது? புரியவே முடிவதில்லை;
புலியெல்லாம் பசுத்தோல் போர்வையொடு திரிகிறது.
நரிகள் அமைக்கின்ற மேடையில்தான் இந்நாட்டுப்
பெரிய சிங்கங்கள் பெருமைபெறு கின்றனவாம்.
படித்தவர்கள் இதயமெலாம் பண்புநெறி தேடித்தான்
துடிக்கிற தெனச்சொல்லும் தைரியம் நமக்குண்டா?
மெத்தப் படித்தவர்கள் மத்தியிலே இப்போது
சுத்தக் கோழைகளே தோன்றுவதைப் பார்க்கின்றோம்.
கொடுமையை எதிர்த்துக் குரல்கொடுக்கத் துணிவின்றி
இடுப்பொடிந்து திரிபவர்கள் இருக்கின்றார்; இன்னொருபால்
கொடுமை எதுவென்று குறித்துணர முடியாமல்
எடுத்ததெலாம் எடுத்தெறியும் வீரரும் இருக்கின்றார்.
கொடுமையும் இருக்கிறது; வீரமும் இருக்கிறது;
கொடுமையை இனங்காணாக் குழப்பமும் இருக்கிறது.
முகமோ சிரிக்கிறது; உள்நெஞ்சு வெறுக்கிறது;
பகலிலே நாடகந்தான் பளபளப்பாய் நடக்கிறது.
அணைத்தகை பிரியுமுன்பே அடுத்தகுழி பறிக்கிறது;
நினைத்ததை அடைய நெஞ்சுபலி ஆகிறது.
கிளைவிட்டுக் கிளைதாவும் படலங்கள் நாள்தோறும்
கலையாக நடக்கிறது; கொள்கை பறக்கிறது.
காலிற் கிடப்பதெல்லாம் கைக்கு வருகிறது;
ஆளுகின்ற சட்டமன்றம் அல்லோலப் படுகிறது.
எதைப்படிக்க முயன்றாலும் ஏதேதோ மறைக்கிறதே
எதைப்படித்து எதையுணர்ந்து இங்குவாழப் போகின்றோம்?    

No comments:

Post a Comment