Tuesday, December 24, 2013

கங்கைவேடன் காளத்திவேடனுக்கு (3)

        கங்கைவேடன் காளத்திவேடனுக்கு (3)

கங்கை நதியலை கடக்குந் தோணிகள்
   கணக்கில கொண்டவன்நான்--என்முன்
இங்கே பிறப்பலை கடக்குந் தோணியாய்
   இராகவன் நடந்துவந்தான்.

என்னைச் சோதரன் என்றவன் சொற்களில்
   இதயம் பறிகொடுத்தேன்--அந்த
வண்ணக் கோலவாய் வீழ்ந்திடும் சொற்களை
   வாரியே உண்டிருந்தேன்.

உன்னைப் போலவே நானும் உணவுகள்
   ஊட்டிட நினைத்துவிட்டேன்-- அங்கே
உன்னைப் போலவே கறியும் படைத்தேன்
   உணர்வுகள் இரண்டுமொன்றே!

அந்த உணவினை இராகவன் உண்டனென்
   ஆயினம் என்றுரைத்தான்-- உன்றன்
அந்த உணவினை ஏற்றவன் உனக்குநல்
   அற்புதப் பதமளித்தான்.

அன்பினைப் புரியா அடுத்தவர் சுளிப்பை
   அறிந்தவர் நாமிருவர்--தூய
அன்பினைப் போற்றி அணைத்தவ ரன்பை
   அணைத்தவர் நாமிருவர்.

இந்தத் தகுதியை எண்ணிப் பார்த்தே
   இம்மடல் துணிந்தெடுத்தேன்--வேறாம்
எந்தத் தகுதியும் எனக்கிலை கங்கை
   இருகரை திரிபவன்நான்

காளத்தி நாதன் கண்களே இன்று
   கண்ணப்பன் கண்ணலவோ--அந்தக்
காளத்தி யப்பர் அருள்மழை குளித்த
   கண்ணப்பர் நீயலவோ?

உள்ள மொடுங்கி உணர்வுக ளொடுங்கி
   ஒருமடல் வரைந்துவிட்டேன்--அன்பு
வெள்ள மெனவுள உன்னடி வைத்தே
   மெல்ல நழுவுகின்றேன்.
            தேனி--07-10-89




Thursday, December 19, 2013

கங்கை வேடன் காளத்தி வேடனுக்கு (2)

    கங்கைவேடன் காளத்தி வேடனுக்கு (2)

காளத்தி மலையினிலே அற்பு தங்கள்
   காட்டிநின்ற பேரன்பே! உன்னை நெஞ்சின்
ஆழத்தில் நினைத்தாலும் பொங்கி வந்தே
   அகவுணர்வு பித்தாகித் தவிக்கு தந்தோ!
மீளத்தான் உன்செயலை எண்ணுந் தோறும்
   விந்தைமிகப் பெருகுதன்றி வேறு காணேன்;
காளத்திப் பெருந்திறலே! உன்ற னுக்குக்
   கடிதம்நான் எப்படித்தான் எழுதி நிற்பேன்?

ஏடறியேன்; எழுத்தறியேன்; அறிந்த தெல்லாம்
   எம்பெருமான் அருளொளியின் வீச்சொன் றேதான்;
பாடறியேன்; படிப்பறியேன்; அறிந்த தெல்லாம்
   பரம்பொருளின் கண்வீச்சுத் தொண்டொன் றேதான்;
வீடறியேன்; வினையறியேன்; என்ம னத்துள்
   விளைந்துநின்ற மாற்றமட்டும் நன்க றிந்தேன்;
காடறியத் துணையோடு வந்த அந்தக்
   கார்முகிலின் அசைவுக்குப் பணிகள் செய்தேன்.

காளத்தி மலைகூட உன்றன் முன்னே
   கடுகாகிப் போனதுவே! அருகே ஓடும்
ஆழத்துப் பொன்முகலி ஆறு கூட
   அணுவாகி நின்றதுவே! ஆமாம் அந்தக்
காளத்தி யப்பனுக்கே ஆறு நாளில்
   கண்ணப்பும் துணிவுபெற்றாய்; உன்றன் பக்தி
ஆழத்தின் முன்னெந்தக் கடலும் தோற்கும்;
   அடியேனா உன்பெருமை அளக்கக் கூடும்?

பிறப்பென்ன பக்திக்குத் தடையா? சாதிப்
   பிரிப்பென்ன தொண்டுக்குப் புறம்பா? வாழ்க்கைச்
சிறப்பென்ன சிலருக்கே உறவா? அந்தச்
   சிவனென்ன சிலர்தொட்டால் தீட்டா? வீணே
மறைப்பென்ன? தடுப்பென்ன? இவற்றை யெல்லாம்
   மண்மீது பொடிப்பொடியா யாக்கி விட்ட
சிறப்பென்ன கண்ணப்ப? உன்ற னுக்கே
   சின்னவேடன் என்னசெய்தி எழுது வேன்நான்?

திண்ணப்ப னாயிருந்த ஏழை யப்பன்
   சிவனப்பன் குறைதீர்க்கக் கண்ணை அப்பிக்
கண்ணப்ப னெனவானாய்; ஆமாம்; அந்தக்
   கண்கட்டு வித்தையதின் மர்ம மென்ன?
திண்ணப்பன் உன்முன்னே அப்பன் கண்கள்
   செவ்வருவி யெனஆகக் குருதி நிற்கக்
கண்ணப்பி வெற்றிகண்டாய்; எல்லாம் அந்தக்
   கங்கைகொண்டான் விளையாட்டுத் திறங்கள் தாமே!

செருப்பாலே மிதித்தாலும் சினக்க வில்லை;
   தீவிழியைத் திறந்துன்னை எரிக்க வில்ல;
விருப்போடு 'கண்ணப்ப' என்ற ழைத்தார்.
   விண்வணங்கும் பெரும்பேற்றை உனக்க ளித்தார்;
பொருப்பிருந்த காளத்தி நாத ரந்தப்
   பெருஞ்செயலைப் போற்றிட்டே உயர்வ ளித்தார்;
செருப்பதனை மலர்க்கொத்தாய்க் கொண்டார்; அந்தச்
   சிறப்பதனில் சிவபெருமான் சிரித்து நின்றார்.
               --தேனி 07-10-89
                              ( தொடரும் )  



 

Friday, December 13, 2013

திரும்பும் திசையெங்கும்

             திரும்பும் திசையெங்கும்

எத்திசையில் திரும்புவது?
   இருக்கின்ற திசையெல்லாம்
ரத்தத்தின் பீச்சல்கள்;
   நாராசக் கூச்சல்கள்;

சாதியென்ற பேரரக்கன்
   சதிராடக் காலடியில்
மீதியின்றி மக்களெல்லாம்
   மிதிபடுவார் ஒருதிசையில்;

நியாயத்தின் புதைகுழிமேல்
   அநியாயம் ஆட்டமிட
வியாபாரம் செழிக்கின்ற
   வித்தகங்கள் ஒருதிசையில்;

உள்ளத்தை மூடிவைத்தே
   உதடுமட்டும் திறந்துபேசிக்
கள்ளத்தை விலையாக்கும்
   கலைகற்றோர் ஒருதிசையில்;

நல்லவரைப் போல்நடித்து
   நடுமுதுகில் குத்துகின்ற
பொல்லாங்கில் அகப்பட்டுப்
   புலம்புகின்றோர் ஒருதிசையில்;

கன்னிகழி யாமலேயே
   கட்டழகு நைந்துபோகப்
பெண்ணென்று மூத்துநிற்கும்
   பிணங்களெல்லாம் ஒருதிசையில்;

திரும்புகின்ற திசையெங்கும்
   தில்லுமுல்லும் தீமைகளும்
நெருங்கிவழி மறிக்கையிலே
   நடப்பதுதான் எத்திசையில்?

எத்திசையில் திரும்புவது?
   எல்லாமே சிரிக்கிறதே!
எத்திசையும் திரும்பாமல்
   இருக்கத்தான் பழகுவோமா? 

Tuesday, December 10, 2013

பொருள்

                              பொருள்

பொருளுக்குப் பகையாகிப் போன வன்நான்;
   பொருள்நாடி என்நாடி தளர்ந்த தல்லால்
பொருளென்னை நாடிவந்து சேர்ந்த தில்லை.
   பொருளிருக்கும் என்பாட்டில்; வீட்டி லேயோ
பொருட்பகைநா யனார்தான்நான்; இவ்வா றென்றும்
   பொருளற்ற கவிஞனான எனையும் நீங்கள்
பொருளாக மதித்திங்கே பொருளைத் தந்தீர்;
   பொருளுக்காய்ப் பாடுகிறேன்; பொறுத்துக் கேட்பீர்!

போகாத ஊருக்கும் பாதை கூட்டும்;
   பொல்லாத பேர்களையும் நல்லோ ராக்கும்;
ஆகாத காரியங்கள் ஆக வைக்கும்;
   அறிவிலாரை மேதையெனப் புகழ வைக்கும்;
வேகாத பருப்பையெலாம் வேக வைக்கும்;
   மேதினியே கைக்குள்ளே அடங்க வைக்கும்;
ஆகாவென் றுலகோரை வியக்க வைக்கும்;
   அதுவிந்தப் பொருளால்தான் முடியும் கண்டீர்!

பொருளற்ற ஒருவனையார் மதிப்பார்? மண்ணிற்
   பெற்றெடுத்த தாய்கூட மதிக்க மாட்டாள்.
பொருளென்ற ஆதாரம் இல்லை யென்றால்
   புவிவாழ்வில் தாரமுமா தார மில்லை;
பொருளின்றேல் அறமேது? இன்ப மேது?
   புகழேது? பாராட்டு வருவ தேது?
பொருள்மட்டும் குவித்துவிடு! உன்பா தத்தில்
   புகழ்வந்து மாலையிடும்; உயர்வு சேரும்.

பொருள்செய்க என்றாரே! எதனால்? நாம்தாம்
   பொருள்செய்து விட்டாலே போதும்; அந்தப்
பொருளறத்தை இன்பத்தைக் கொண்டு சேர்க்கும்;
   பகல்நேரம் பலர்பார்க்கக் கொலைசெய் தாலும்
பொருளந்தக் கொலையினையே இல்லை யாக்கும்;
   புவிமீது நீதிகூடப் பொருளின் முன்னால்
பொருளில்லை எனவாகிப் போகு மென்றால்
   பொருள்வலிமைக் கினியென்ன சொல்ல வேண்டும்?

பொருள்மட்டும் பொருளாகி விடுமா? அந்தப்
   பொருள்நல்ல வழிவரவே இல்லை யென்றால்
பொருளேயோர் பிணியாகிப் போய்வி டாதா?
   பாவவழி வந்தபொருள் பாவம் தானே!
பொருள்சேர்க்கப் புண்ணியத்தைப் புதைத்தோ ரெல்லாம்
   போகின்ற இடம்கொடிய நரக மென்றே
பொருள்பற்றிச் சொன்னவர்கள் சொன்ன தெல்லாம்
   பொருள்நல்ல வழிவேண்டு மென்ப தால்தான்.

பேரிருக்கும்; புகழிருக்கும்; நாட்டி லெங்கும்
   பாராட்டு மழையிருக்கும்; மிகவு யர்ந்த
சீரிருக்கும்; சிறப்பிருக்கும்; மக்கள் கூட்டத்
   திரளிருக்கும்; வாழ்த்திருக்கும்; கைப்பி டிக்குள்
பாரிருக்கும்; சொல்லினுக்கோர் பலமி ருக்கும்;
   பொழுதிருக்கும் உனைநாடி; எல்லாம் இந்தப்
பாரினிலே பொருளிருக்கும் வரையி லேதான்;
   போட்டுடைத்த மண்பாண்டம் பொருளில் லாக்கால்.