Thursday, December 19, 2013

கங்கை வேடன் காளத்தி வேடனுக்கு (2)

    கங்கைவேடன் காளத்தி வேடனுக்கு (2)

காளத்தி மலையினிலே அற்பு தங்கள்
   காட்டிநின்ற பேரன்பே! உன்னை நெஞ்சின்
ஆழத்தில் நினைத்தாலும் பொங்கி வந்தே
   அகவுணர்வு பித்தாகித் தவிக்கு தந்தோ!
மீளத்தான் உன்செயலை எண்ணுந் தோறும்
   விந்தைமிகப் பெருகுதன்றி வேறு காணேன்;
காளத்திப் பெருந்திறலே! உன்ற னுக்குக்
   கடிதம்நான் எப்படித்தான் எழுதி நிற்பேன்?

ஏடறியேன்; எழுத்தறியேன்; அறிந்த தெல்லாம்
   எம்பெருமான் அருளொளியின் வீச்சொன் றேதான்;
பாடறியேன்; படிப்பறியேன்; அறிந்த தெல்லாம்
   பரம்பொருளின் கண்வீச்சுத் தொண்டொன் றேதான்;
வீடறியேன்; வினையறியேன்; என்ம னத்துள்
   விளைந்துநின்ற மாற்றமட்டும் நன்க றிந்தேன்;
காடறியத் துணையோடு வந்த அந்தக்
   கார்முகிலின் அசைவுக்குப் பணிகள் செய்தேன்.

காளத்தி மலைகூட உன்றன் முன்னே
   கடுகாகிப் போனதுவே! அருகே ஓடும்
ஆழத்துப் பொன்முகலி ஆறு கூட
   அணுவாகி நின்றதுவே! ஆமாம் அந்தக்
காளத்தி யப்பனுக்கே ஆறு நாளில்
   கண்ணப்பும் துணிவுபெற்றாய்; உன்றன் பக்தி
ஆழத்தின் முன்னெந்தக் கடலும் தோற்கும்;
   அடியேனா உன்பெருமை அளக்கக் கூடும்?

பிறப்பென்ன பக்திக்குத் தடையா? சாதிப்
   பிரிப்பென்ன தொண்டுக்குப் புறம்பா? வாழ்க்கைச்
சிறப்பென்ன சிலருக்கே உறவா? அந்தச்
   சிவனென்ன சிலர்தொட்டால் தீட்டா? வீணே
மறைப்பென்ன? தடுப்பென்ன? இவற்றை யெல்லாம்
   மண்மீது பொடிப்பொடியா யாக்கி விட்ட
சிறப்பென்ன கண்ணப்ப? உன்ற னுக்கே
   சின்னவேடன் என்னசெய்தி எழுது வேன்நான்?

திண்ணப்ப னாயிருந்த ஏழை யப்பன்
   சிவனப்பன் குறைதீர்க்கக் கண்ணை அப்பிக்
கண்ணப்ப னெனவானாய்; ஆமாம்; அந்தக்
   கண்கட்டு வித்தையதின் மர்ம மென்ன?
திண்ணப்பன் உன்முன்னே அப்பன் கண்கள்
   செவ்வருவி யெனஆகக் குருதி நிற்கக்
கண்ணப்பி வெற்றிகண்டாய்; எல்லாம் அந்தக்
   கங்கைகொண்டான் விளையாட்டுத் திறங்கள் தாமே!

செருப்பாலே மிதித்தாலும் சினக்க வில்லை;
   தீவிழியைத் திறந்துன்னை எரிக்க வில்ல;
விருப்போடு 'கண்ணப்ப' என்ற ழைத்தார்.
   விண்வணங்கும் பெரும்பேற்றை உனக்க ளித்தார்;
பொருப்பிருந்த காளத்தி நாத ரந்தப்
   பெருஞ்செயலைப் போற்றிட்டே உயர்வ ளித்தார்;
செருப்பதனை மலர்க்கொத்தாய்க் கொண்டார்; அந்தச்
   சிறப்பதனில் சிவபெருமான் சிரித்து நின்றார்.
               --தேனி 07-10-89
                              ( தொடரும் )  



 

No comments:

Post a Comment