Tuesday, December 10, 2013

பொருள்

                              பொருள்

பொருளுக்குப் பகையாகிப் போன வன்நான்;
   பொருள்நாடி என்நாடி தளர்ந்த தல்லால்
பொருளென்னை நாடிவந்து சேர்ந்த தில்லை.
   பொருளிருக்கும் என்பாட்டில்; வீட்டி லேயோ
பொருட்பகைநா யனார்தான்நான்; இவ்வா றென்றும்
   பொருளற்ற கவிஞனான எனையும் நீங்கள்
பொருளாக மதித்திங்கே பொருளைத் தந்தீர்;
   பொருளுக்காய்ப் பாடுகிறேன்; பொறுத்துக் கேட்பீர்!

போகாத ஊருக்கும் பாதை கூட்டும்;
   பொல்லாத பேர்களையும் நல்லோ ராக்கும்;
ஆகாத காரியங்கள் ஆக வைக்கும்;
   அறிவிலாரை மேதையெனப் புகழ வைக்கும்;
வேகாத பருப்பையெலாம் வேக வைக்கும்;
   மேதினியே கைக்குள்ளே அடங்க வைக்கும்;
ஆகாவென் றுலகோரை வியக்க வைக்கும்;
   அதுவிந்தப் பொருளால்தான் முடியும் கண்டீர்!

பொருளற்ற ஒருவனையார் மதிப்பார்? மண்ணிற்
   பெற்றெடுத்த தாய்கூட மதிக்க மாட்டாள்.
பொருளென்ற ஆதாரம் இல்லை யென்றால்
   புவிவாழ்வில் தாரமுமா தார மில்லை;
பொருளின்றேல் அறமேது? இன்ப மேது?
   புகழேது? பாராட்டு வருவ தேது?
பொருள்மட்டும் குவித்துவிடு! உன்பா தத்தில்
   புகழ்வந்து மாலையிடும்; உயர்வு சேரும்.

பொருள்செய்க என்றாரே! எதனால்? நாம்தாம்
   பொருள்செய்து விட்டாலே போதும்; அந்தப்
பொருளறத்தை இன்பத்தைக் கொண்டு சேர்க்கும்;
   பகல்நேரம் பலர்பார்க்கக் கொலைசெய் தாலும்
பொருளந்தக் கொலையினையே இல்லை யாக்கும்;
   புவிமீது நீதிகூடப் பொருளின் முன்னால்
பொருளில்லை எனவாகிப் போகு மென்றால்
   பொருள்வலிமைக் கினியென்ன சொல்ல வேண்டும்?

பொருள்மட்டும் பொருளாகி விடுமா? அந்தப்
   பொருள்நல்ல வழிவரவே இல்லை யென்றால்
பொருளேயோர் பிணியாகிப் போய்வி டாதா?
   பாவவழி வந்தபொருள் பாவம் தானே!
பொருள்சேர்க்கப் புண்ணியத்தைப் புதைத்தோ ரெல்லாம்
   போகின்ற இடம்கொடிய நரக மென்றே
பொருள்பற்றிச் சொன்னவர்கள் சொன்ன தெல்லாம்
   பொருள்நல்ல வழிவேண்டு மென்ப தால்தான்.

பேரிருக்கும்; புகழிருக்கும்; நாட்டி லெங்கும்
   பாராட்டு மழையிருக்கும்; மிகவு யர்ந்த
சீரிருக்கும்; சிறப்பிருக்கும்; மக்கள் கூட்டத்
   திரளிருக்கும்; வாழ்த்திருக்கும்; கைப்பி டிக்குள்
பாரிருக்கும்; சொல்லினுக்கோர் பலமி ருக்கும்;
   பொழுதிருக்கும் உனைநாடி; எல்லாம் இந்தப்
பாரினிலே பொருளிருக்கும் வரையி லேதான்;
   போட்டுடைத்த மண்பாண்டம் பொருளில் லாக்கால்.  

No comments:

Post a Comment