Saturday, January 7, 2012

muthiyorkathal


  முதியோர் காதல்

முன்னைநாள் கவர்ச்சி யில்லை
   முறுவலாய் என்னைக் கொல்லும்
அன்றைநாள் மலர்ச்சி யில்லை
   அழகிய பற்கள் இல்லை
என்னையே அடக்கம் செய்த
   இடுப்பசை வின்றிங் கில்லை
என்னதான் இலையென் றாலும்
   எனக்கிங் கவள்தான் எல்லாம்

சொல்லினில் தேன்கு ழைத்தே
   சிந்திடும் வித்தை யில்லை
பல்லினில் முத்தைக் காட்டிப்
  பளிச்சென எனையே வீழ்த்தும்
சொல்லிட இயலா ஆற்றல்
  சிறிதுமே இல்லை;ஆனால்
அல்லொடு பகலு மின்ப்ம்
 அளிக்கிறாள்;அவள்தான் எல்லாம்

தளுக்கொடு மிடுக்கும் சேர்ந்த
 தளிர்நடை இன்றைக் கில்லை;
விழுந்திடச் செய்யும் கையின்
 வீச்செதும் இன்றைக் கில்லை;
களுக்கெனச் சிரித்தே முல்லை
 கொட்டிடும் இளமை யில்லை;
அழகென ஒன்று மில்லை;
 ஆயினும் அவள்தான் எல்லாம்

வாயினிற் பற்கள் இல்லை;
 வார்த்தையில் தெளிவே இல்லை;
ஆயிரம் சுருக்கம் கொண்ட
 அவள்முகம் கவர்ச்சி யில்லை;
போயவள் திரும்பும் போது
 பொலிவுகள் உதிர்வ தில்லை;
ஆயினும் அவளி ருப்பே
 அளவிலா மகிழ்ச்சி கூட்டும்

பசப்பிடும் உரைகள்  இல்லை
 பார்வையில் மயக்கம் இல்லை;
உசுப்பிடும் உரசல் இல்லை;
 உணர்ச்சிகள் கொதிப்ப தில்லை;
அசத்திடும் அணைப்பு மில்லை;
 அணுவெலாம் துடிப்ப தில்லை;
திசுக்களில் உண்ர்ச்சி யில்லை;
 சத்தியம் அவள்தான் எல்லாம்

தீயினை மூட்டி விட்டுச்
 சிரித்திடும் சீண்டல் இல்லை;
வாயினை இதழ்ப்பூட் டாலே
 பூட்டிடு ம் முயற்சி யில்லை;
ஆயிரம் பொருள்கள் கூறும்
 அங்கமே பேச வில்லை;
ஆயினும் எனக்க வள்தான்
 ஆயுளின் இன்ப வெள்ளம்

No comments:

Post a Comment